Monday, July 25, 2022

டில்லியில் பழனிசாமி புறக்கணிக்கப்பட்டாரா?முன்கூட்டியே சென்னை திரும்பியதன் பின்னணி!

 டில்லியில் நாளை வரை தங்கியிருக்க திட்டமிட்டிருந்த, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, முன்னதாகவே சென்னை திரும்பினார். இதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, இம்மாதம், 22ம் தேதி டில்லி வந்தார். ஓய்வு பெறும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு, பிரதமர் மோடி அளித்த விருந்தில் பங்கேற்றார். நாளை வரை டில்லியில் தங்கியிருக்க திட்டமிட்டிருந்த அவர், நேற்று காலை திடீரென சென்னை திரும்பினார்.


கட்சி விவகாரம்

சென்னை திரும்பும் முன், டில்லியில், பழனிசாமி அளித்த பேட்டி:பிரதமர் மோடி அழைத்ததால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின், பிரிவு உபச்சார நிகழ்வில் பங்கேற்க டில்லி வந்தேன்; வேறெந்த திட்டமும் இல்லை. நீதிமன்றத்தில் மாறி மாறி வழக்குகள் போடப்பட்டு வருவதால், கட்சி விவகாரங்கள் குறித்து கேள்விகள் வேண்டாம். கட்சி விவகாரங்கள் குறித்த கேள்விக்கு, தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது.இவ்வாறு அவர் கூறினார்.
அதேநேரத்தில்,பழனிசாமியின் டில்லி பயணம் குறித்து,தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடி, அசோகா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபச்சார நிகழ்ச்சிக்கு, டில்லியைச் சேர்ந்த வழக்கமான அரசியல் பிரபலங்கள் அழைக்கப்படவில்லை.வெவ்வேறு மாநிலங்களில் இருந்து, வெவ்வேறு துறைகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சமூக தலைவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். நிகழ்ச்சியில், 100 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
வேறெந்த மாநிலத்தின் பா.ஜ., தலைவரும் வராத நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அழைக்கப்பட்டிருந்தார்; பழனிசாமியும் அழைக்கப்பட்டார். நிகழ்ச்சியின் போது, ஓரிரு நிமிடங்கள் மட்டுமே, பிரதமருடன் பேசும் வாய்ப்பு பழனிசாமிக்கு கிடைத்தது; தனியாக பேச முடியவில்லை.அடுத்த நாள் பார்லிமென்ட் மைய மண்டபத்தில், அரசு தரப்பில் நடந்த பிரிவு உபச்சார நிகழ்ச்சியில், பழனிசாமியும் பங்கேற்கலாம் என்றே முதலில் கூறப்பட்டது.ஆனால், அவர் வரவில்லை.
அத்துடன், இன்று நடைபெற உள்ள, புதிய ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியிலும், பழனிசாமி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குட்கா வழக்குஅதற்கேற்ற வகையில், தமிழ்நாடு இல்லத்தில், நாளை வரை அவர் தங்க திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், சென்னை திரும்பும் முடிவை, அதிரடியாக நேற்று முன்தினம் மதியமே பழனிசாமி எடுத்தார்.
துணை ஜனாதிபதி தேர்தல், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்பு விழா என, நிறைய அலுவல்களில், பா.ஜ., முக்கிய தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். அதனால் தான், பழனிசாமி அவர்களை சந்திப்பதற்கான நேரத்தை, யாராலும் தர முடியவில்லை. மற்றபடி, பழனிசாமியை புறக்கணிக்கும் நோக்கம் பா.ஜ.,வுக்கு இல்லை.
அதைவிட முக்கியமாக, குட்கா வழக்கு தொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு அளிக்கப்பட்ட அனுமதி தான், பழனிசாமி சென்னை திரும்ப முக்கிய காரணம்.மருத்துவமனையில் இருந்து, 'டிஸ்சார்ஜ்' ஆன பன்னீர்செல்வம், நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்படலாம் என்று அறிக்கை விடுத்ததுடன், புதிய மாவட்ட செயலர்களை அறிவிக்க உள்ள தகவலும் பழனிசாமிக்கு கிடைத்தது.
இதன் பிறகு தான், இனியும் டில்லியில் தங்கியிருப்பது சரியல்ல; சென்னை சென்று அங்கு அரங்கேறும் அதிரடிகளை சமாளிக்க வேண்டும் என்பதால், முன்கூட்டியே சென்னைக்கு திரும்பினார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 டில்லியில் பழனிசாமி புறக்கணிக்கப்பட்டாரா?முன்கூட்டியே சென்னை திரும்பியதன் பின்னணி!


பிரதமர் மோடி 28ல் சமரசம்?


சென்னை வரும் பிரதமர் மோடியை, பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளனர்.இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:வரும் 2024தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தென்சென்னை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட, 10 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
அ.தி.மு.க., இரண்டு அணிகளாக பிரிந்தால், பா.ஜ., வெற்றிக்கு பின்னடைவு ஏற்படும். கொங்கு மண்டலம் பழனிசாமி வசம் இருந்தாலும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே பா.ஜ.,வுக்கு சாதகமான தொகுதிகளும் உள்ளன.
எனவே பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பிரிந்திருந்தால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடையாது என்ற சர்வே தகவலை, மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. அ.தி.மு.க.,வில், பழனிசாமியும், பன்னீரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார்.
வரும் 28ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சந்திக்க உள்ளனர். அப்போது, அவர்கள் இணைந்து செயல்படும்படி, அவர்சமரசம் செய்து வைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...