நீ
அந்த இராமச்சந்திரன்
சூரிய குலத்தில் வந்தவன்.
நீயும்-
உதய சூரியனின்
வழித்தோன்றல்தான்.
அவனும்
ஜானகி மணாளன்.
நீயும்
ஜானகி மணாளன்.
அவனும்
பதவி ஆசை பிடித்தவர்களால்
வெளியேற்றப்பட்டான்.
நீயும் அப்படியே.
அவனும்
நாடோடியாகத் திரிந்து
மன்னனானான்.
நீயும்-
நாடோடி மன்னன்தான்.
அவனிடத்தில்
இருந்தது போலவே
உன்னிடத்திலும்
"வில் பவர்" இருந்தது.
அந்த இராமச்சந்திரன்
தெய்வமாக இருந்து
மனிதனாக மாறியவன்.
நீ-
மனிதனாக இருந்து
தெய்வமாக மாறியவன்.
இதனால்தான் உன்னை
இதய தெய்வம் என்கிறோம்.
ஆனால் ஒன்று
அவன்
வாலியை
அம்பு கொண்டு வீழ்த்தியவன்.
நீயோ
வாலியை
அன்பு கொண்டு வாழ்த்தியவன்.
வாலி.

No comments:
Post a Comment