நீட் தேர்வுக்கு விலக்கு தேவையா, தேவையில்லையா என்கிற கேள்விக்கு பல காலமாக பல தரப்பும் வாதம் செய்து ஓய்ந்துவிட்டோம்.
மாநில அரசின் நிலைப்பாடு விலக்கு தேவை என்பது. மத்திய அரசின் நிலைப்பாடு தேவையில்லை என்பது. சட்டரீதியான போராட்டம், சட்டசபைத் தீர்மானம் என்று முயற்சிகள் ந....ட....ந்....து....கொ...ண்....டே இருக்கின்றன.
விலக்கு கிடைக்கும்வரை நீட் தவிர்க்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.
மாணவர்களின் கடமையும், நோக்கமும் அதை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்பதில் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்தத் தேர்வை நினைத்து பயம் கொள்வது அவசியமற்றது.
வாழ்க்கை என்பது இந்தத் தேர்வை விடவும் இனிமையானது.
முன்புபோல் ஒரு சில படிப்புகள் மட்டுமே இப்போது இல்லை. மருத்துவம் தவிர்த்து நூறு நல்ல துறைகள் இருக்கின்றன. மருத்துவத் துறைக்குள்ளேயே எம்.பி.பி.எஸ் தவிரவும் எம்.எஸ்.சி வரைப் படிக்க மருத்துவத் துணைப் படிப்புகள் வந்துவிட்டன.
ஒரு லட்சியம் வைத்து முயற்சி செய்வது சரிதான். ஆனால் அந்த லட்சியத்தின் மீது அநியாயத்திற்குப் பிடிவாதம் அவசியமில்லை.
நடைமுறைச் சாத்தியங்களும், சூழ்நிலைகளும் ஒத்துழைக்காதபோது நம் லட்சியங்களில் கொஞ்சம் சமரசம் செய்துகொள்வது தவறே இல்லை.
எதைப் படித்தாலும், ஒரு நல்ல மனிதராகவும், சந்தோஷமான வாழ்க்கையுடனும் வாழ்வதே மிகச் சிறந்த லட்சியங்களாக இருக்க முடியும்.
அந்த இறுதி லட்சியத்தை நோக்கிய பயணத்திற்கான நூறு பாதைகள் இருக்கும்போது ஒரேப் பாதையில் ஆணியடித்துத் தொங்க அவசியமில்லை.
பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்கிற பிடிவாதம் தளர்த்தத் தயாராய் இருந்தால் எந்தத் தேர்வையும் வா, பார்த்துக்கலாம் என்று திடமான, தெளிவான மனதுடன் சந்திக்க முடியும்.
மாற்றுப் பாதை அறிந்தவனுக்கு பயணத்தில் பயம், பதட்டம் எதுவும் இருக்காது. முட்டாள்த்தனமான தற்கொலை எண்ணமும் தலை தூக்காது.
மாணவர்களுக்குத் தேவை இந்தத் தெளிவான சிந்தனை மட்டுமே.
அதை அவர்களுக்குள் விதைக்க வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை.

No comments:
Post a Comment