எவ்வளவோ கவிஞர்கள் முட்டிமோதும் திரையுலகம் அது, ஒரு சிலர் முத்திரை பதித்துகொண்டனர், இன்னும் பலர் காத்திருக்கின்றனர், ஆனால் ஏராளமான பாடல்களை தரும் வல்லமையுள்ள ஒருவன் உறங்கி கொண்டிருக்கின்றான் அல்லது ஒதுங்கி கொண்டிருக்கின்றான்
அவனால் ஆயிரம் அழகான பாடல்களை அள்ளி அள்ளி வீசமுடியும் என்றாலும் ஏனோ ஒரு கர்வத்தில் தனித்திருக்கின்றான்
அது டி.ராஜேந்தர் எனும் தேசிங்கு உடையார் ராஜேந்திரன்
உண்மையில் சோழநாட்டு தமிழ் கம்பனும் ஒட்ட கூத்தனும் கண்ட அற்புத தமிழ் அவரிடம் நிரம்ப உண்டு, உருக வைக்கும் தமிழ், அழகாக சொக்க வைக்கும் வரிகள் கொண்ட தமிழ் என கற்பனையும் அழகும் நிரம்பிய தமிழ் காவேரி அவருக்குள் உண்டு
தமிழ் இலக்கியத்தை முற்றும் கற்று தேர்ந்தவர் என்பதால் தமிழ் அவருக்கு அழகாக வாய்த்திருக்கின்றது, ஒரு கவிஞனுக்கு தேவை அற்புதமான வர்ணனை மற்றும் இலக்கிய நயம், கொஞ்சம் மொழி போதும் இது ராஜேந்தருக்கு மிக மிக இயல்பாய் வாய்த்தது
அப்படித்தான் அவர் 80களில் அசத்திகொண்டிருந்தார், இன்றும் பழைய பாடல்களை கேட்டாலும் அது கண்ணதாசனா, வாலியா , இளங்கோவனா என தேடினால் பல பாடல்கள் அவரின் பாடல்களாகவே இருக்கும்
எவ்வளவு அழகான கற்பனைகள், எவ்வளவு அழகான வர்ணனைகள், சோக பாடலோ, காதல் பாடலோ, பெண் நினைவில் உருகி பாடும் பாடலோ அவை எல்லாம் அற்புதமான படைப்புகள். அனைத்தும் பண்பட்ட வரிகள், அதில் ஆபாசமோ, காம நெடிகளோ, முகம் சுளிக்கும் வரிகளோ இருக்காது, கம்பனை படிப்பது போல அழகான சுகம். ஓரு சிலருக்கே வாய்க்கும் வரம்.
“பாவை புருவத்தை விரிப்பது அதிசயம்,
அதில் பரதமும் படிக்குது அபிநயம்” என அசத்தி செல்வதாகட்டும்,
“பாவை இதழது சிவக்கின்ற போது, பாவம் பவளமும் சிவப்பது ஏது” என வர்ணிப்பதாகட்டும்
"
“சந்தனக் கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கண்ணம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில்
இரண்டு குடத்தை கொன்ட
புதிய தம்புராவை மீட்டி சென்றாள்”
என சொன்னதாகட்டும், டி.ராஜேந்தர் ஒரு பெரும் கவிஞர், கவிஞராக மட்டும் ஜொலித்திருக்கவேண்டியவர்.
"வெறும் நாரில் கரம் கொண்டு பூ மாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
இது நதியில்லாத ஓடம்"
என அவர் புலம்புவதை போல கம்பன் கூட புலம்ப முடியாது
"மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே"
ஒரு தலை காதலை இதனை விட வலிக்கும்படி யாராலும் சொல்லிவிட முடியாது
இன்று திரையுலகில் அவர்போல் வர்ணிப்பவர் , தமிழ் இலக்கியத்தில் கரைந்த சாறு யாருமிலை என்பதே நிஜம்
கண்ணதாசன், வாலி, நா.முத்துகுமாரின் இடத்தினை மிக எளிதாக நிரப்பும் பாடல் வலிமை அவருக்கு உண்டு.
ஆனால் அவரும் எம்.ஆர் ராதாவும் ஒரே ரகம். காட்டாறுகள், வித்தை கர்வம் மிகுந்தவர்கள். எளிதில் வேலை வாங்கிவிட முடியாது, நினைத்தவாறே செய்துகொண்டிருப்பவர்கள். டி.ஆர் அப்படித்தான் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருக்கின்றார்.
தன் படத்தை தவிர அவர் பாடல் எழுதுவதில்லை, இன்னொருவனிடம் சென்று காசுகாக அவர் பேனா பிடிப்பதுமில்லை அவரின் அந்த குணம் அவரின் கவுரவத்தை நிலைநாட்டலாம் ஆனால் நல்ல பாடல்களை தமிழ் உலகம் இழந்துவருவது வலிக்கும் உண்மை
எம்ஜிஆரும், சிவாஜியும், ரஜினியும், கமலும், ஸ்ரீதேவியும் பின்னி எடுத்த 80களில் வெறும் புதுமுகங்களை கொண்டு வெள்ளிவிழா கொடுத்து சவால் விட அவரால் முடிந்ததென்றால் அதற்கு காரணம் அவரின் பாடல். அதுதான் அவரின் தனித்திறமை, அவர் படங்களில் எல்லாம் தனித்து நிற்பது அதுதான்.
ஆனால் தன் ஆணிவேர் அது என தெரிந்தும் ஏன் சல்லிவேர்களை பலமாக நினைக்கின்றார் என தெரியவில்லை. டைரக்ஷனுக்கு பல பேர் இருக்கின்றார்கள், நடிக்க ஏராளமானோர் உண்டு, இசைக்கு பஞ்சமே இல்லை.
ஆனால் பாடலுக்கு? அற்புதமான வரிகளை எழுதுவதற்கு மிக சிலரே உண்டு, அதிலொருவர் டி.ஆர்.
இன்றும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, பாடல் எழுத தயார் என அவர் அறிவிக்கட்டும், அற்புதமான பாடல்களை எந்த மெட்டிற்கும் அவரால் கொடுக்க முடியும, எல்லா வித உணர்ச்சிகளாலும் கொடுக்க முடியும். ஆனால் அவரோ கதை, வசனம், சண்டை, இம்சை, காதல் என எல்லா மண்ணாங்கட்டியும் நானெ செய்வேன் என அடம்பிடித்து தன் சுயதர்மத்தை இழந்துகொண்டிருக்கின்றார்.
நிச்சயமாக அவர் கவிதை ராஜாளி, உயர உயர பறக்கவேண்டியவர், அவர் நல்ல குயில் நிறைய பாட வேண்டியவர்
ஆனால் அவரோ நான் கோழிகளோடு குப்பை மேட்டில் கிளறுவேன், சிட்டுகுருவிகளோடு தானியம் பொறுக்குவேன், தேன் சிட்டினை போல கூடுகட்டுவேன், வெறும் மைனாவினை போல தாழத்தான் பறப்பேன். காக்கை போல் கத்துவேன் என அடம்பிடிக்கின்றார்.
ராஜாளி அதற்குரிய இடத்தில் பறந்தால் அல்லவா அதற்குரிய மரியாதை, பிரமிப்பு எல்லாம் வரும். குயில் அதனுடைய சுபாவத்தில் அல்லவா பாட வேண்டும்
சரி பாடல்தான் வேண்டாம், அன்னார் நாலே நாலு கவிதை தொகுப்பு வெளியிடட்டும், இந்தகால கவிஞர் இம்சைகள் எல்லாம் எங்கு சென்று ஒழிகின்றன என்பது தெரியும். ஒரு இசை ஆல்பம் வெளியிடட்டும் இந்த ஹிப்காப் தமிழா போன்ற அழிச்சாட்டியம் எல்லாம் காணாமலே போகும். ஆயிரம் ஆயிரம் அற்புதமான பாடல்களை அவரால் தரமுடியும், ஆனால் செய்வாரா?
“நடை மறந்த கால்களின் தடையத்தை பார்க்கின்றேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கின்றேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கின்றேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கின்றேன்”
எப்படி அருமையான வரிகள்.
தமிழகத்தின் தேவை எல்லாம் 30 வருடத்திற்கு முன்னதான டி.ராஜேந்தர் எனும் கவிதை சிங்கமே. அது இல்லா காட்டில் நரிகள் எல்லாம் கவிஞர் வேடம் போட்டு ஆடும் இம்சைகள் தாங்கமுடியவில்லை. 80களில் அவர் கொடுத்த அற்புதமான வரிகளோடு கவிஞனாக அவர் வர தமிழகம் காத்திருக்கின்றது.
உசேன் போல்ட் ஓட்டத்தில் கில்லாடி, ஆனால் அவர் எல்லா போட்டிகளிலும் பங்கெடுப்பேன் என ஜிம்னாஸ்டிக்கில் போய் நின்றால் என்ன ஆகும்?
டெண்டுல்கள் சிறந்த கிரிக்கெட் வீரர் அ ஆனால் நான் உயரம் தாண்ட போகின்றேன் என்றால் என்ன ஆகும்?
செரினா வில்லியம்ஸோ, ரபேல் நடாலோ நான் குத்துசண்டைக்கும் தயார் என்றால் என்னாகும், மெஸ்ஸி கிரிககெட் மட்டை பிடித்து வாசிம் அக்ரம் பந்தினை எதிர்கொன்டால் என்னாகும்.
அதுதான் அவர் விஷயத்திலும் நடக்கின்றது. அவரவர் அவரவர்க்குள்ள உயரத்தில், அந்த இடத்தில் இருக்கவேண்டுமல்லவா? கவிஞனாக அடுத்த இன்னிங்க்ஸில் அவர் வந்தால் நிச்சயம் மேல் எழுவார்
கண்ணதாசன், முத்துலிங்கம், புதுமை பித்தன், பஞ்சு அருணாசலம், காமராசன், வாலி காலத்திலே தனியாக நின்று சாதித்த அவருக்கு இப்பொழுது இருக்கும் காலம் தூசு அல்லவா?
அந்த அற்புத கவிஞனைத்தான் தமிழகம் எதிர்பார்கின்றது. வீராசாமியினை அல்ல.
சிற்சில இடங்களில் அவர் சறுக்கலாம், தன் மீதான அபார நம்பிக்கையில் அவர் அப்படி செய்யலாம். சில இடங்களில் உணர்ச்சிவசத்தில் அவர் கண்ணீர் கூட விடலாம்
அது களங்கமற்ற சுத்தமான உணர்ச்சிபிரவாக கண்ணீராக இருக்குமன்றி வேறல்ல, இன்னொருவன் கண்ணீருக்கு காரணம் ராஜேந்தர் என எங்காவது கேட்டிருக்க முடியுமா? முடியாது.
யாருடைய கண்ணீருக்கும் அவர் காரணமாக இருந்ததில்லை, அவர் அழுவாரே தவிர இன்னொருவனை அழ வைத்ததில்லை
மிக மிக உணர்ச்சியான ஒரு கலைஞன் அவர், நல்ல கலைஞன் எப்படி உணர்ச்சி பிரவாகமாக இருப்பான் என்பதற்கு உதாரணம் அவரே
1980களில் கண்ணதாசனுக்கு பின் வாலியினை போல சம இருக்கையில் இருந்து அழியா தமிழ்பாடல்களை கொடுத்த அந்த கவிராஜேந்திரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அவர் இடத்தில் அவர் அமரவில்லை, அமரவும் மாட்டார் அவர் இயல்பு அது
ஆனால் ஒருமுறை மட்டும் அமர்ந்து, தன்னை இன்னொருமுறை அவர் நிரூபித்த்தால் ஒரு தலை ராகம் போன்ற பெரும் ஹிட் படங்கள் கிடைக்கும், படங்களை விட பாடல்கள் கிடைக்கும்
நிச்சயம் அவரால் முடியும்
அவர் ஆயிரம் பிறைகாண வாழ்த்துக்கள்….
அய்யா ராஜேந்தர்..
மிக மிக அற்புதமான பாடல்ளை உங்களால் கொடுக்க முடியும், எங்களுக்கு அபார நம்பிக்கை இருக்கின்றது, உங்கள் தன்னம்பிக்கை சொல்லி தெரியவேண்டியது அல்ல. வாருங்கள், வந்து கம்பனை, பாரதியினை, கண்ணதாசனை, வைரமுத்துவினை, முத்துகுமாரினை பிழிந்து ஒரே கோப்பையில் கொடுங்கள் இன்றைய தேதியில் அவ்வளவு அற்புதமான கவிஞன் எவனுமில்லை தூங்கிகொண்டிருக்கும் தமிழ்பாடல் சிங்கமே, எழும்பி இனியாவது களத்திற்கு வாருங்கள்.
"ஒரு தலை ராகம்" எனும் அழியா காவியம் தந்த கவிஞன் ஒருமாதிரியாகவே அலைய வேண்டும் என யார் விதித்தார்கள்?, ஆயிரம் ராகங்கள் அடங்கியிருக்கும் அழகான பேழை அது
"நல்லதோர் வீணை செய்தே" எனும் வரி அவருக்கும் பொருந்தும், நிச்சயம் பொருந்தும்
வருங்காலத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதித்திருக்கின்றீர்கள் என யாரும் கேட்கபோவதில்லை, எவ்வளவு அழகான பாடல்களை கொடுத்திருக்கின்றீர்கள் என்பதில்தான் உங்கள் வரலாறு அடங்கி இருக்கின்றது..
கண்ணதாசன், பட்டுகோட்டை, வாலி, முத்துகுமார் என மறைந்த கவிஞர்களின் சொத்து மதிப்போ, அவர்களின் குடும்பமோ வாரிசு எனப்படும் அடையாளமாக இல்லை.
அவர்களின் முத்தாய்ப்பான படைப்புகள்தான் அவர்களின் அடையாளங்கள். அதை நீங்கள் புரிந்துகொண்டால் நல்லது
அந்த தாடிக்குள் ஓளிந்திருக்கிறது, தமிழ் பாடலின் உயிர் நாடி
"பேதமை நிறைந்தது
என் வாழ்வு
அதில் பேதையும் வரைந்தது
சில கோடு"
என ஒரு தலை காதலின் வலியினை வலிக்க சொன்ன அந்த வார்த்தையும்
"ஒளியாய் தெரிவது
வெறும் கனவு
அதன் உருவாய் எரிவது
என் மனது
பித்தென்று சிரிப்பது
உள் நினைவு
அதன் வித்தொன்று போட்டது
அவள் உறவு
ரயில் பயணத்தின் துணையாய்
அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய்
அவள் நின்றாள்"
என வாழ்வில் என்றோ வந்த காதலியின் நினைவு சாகும்வரை கூட வரும் என அழகாக உருவகமாக கவித்துவமாக சொன்ன அந்த வரியும் அவன் ஆயிரம் ஷேக்ஸ்பியருக்கு சமம் என்பதை சொல்லும்
நிச்சயம் அவனுக்குள்ளும் ஆயிரம் ஷேக்ஸ்பியர் உண்டு, காதலை அவனைவிட அழகாக அழ அழ இன்னொருவனால் பாட முடியாது..காவியாமாக தமிழில் வடிக்கவும் முடியாது.

No comments:
Post a Comment