Wednesday, July 6, 2011

கடனில் இருந்து மீட்க ரூ.1 லட்சம் கோடி: தமிழ்நாட்டை மேம்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய நிதி உதவி;டெல்லியில் திட்டக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா கோரிக்கை

மத்திய திட்டக்குழு கூட்டம் ஆண்டு தோறும் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், மாநில முதல்-அமைச்சர்கள் அல்லது நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்கள் மாநில திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கும்படி வற்புறுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான திட்டக்குழு கூட்டம் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்றது.
கடனில் இருந்து மீட்க ரூ.1 லட்சம் கோடி: தமிழ்நாட்டை மேம்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய நிதி உதவி;டெல்லியில் திட்டக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா கோரிக்கை
 
கூட்டத்திற்கு, மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டே சிங் அலுவாலியா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்திற்கு தேவையான நிதித் தேவை குறித்து பேசினார்.
 
அப்போது அவர் பேசியதாவது:-
 
தமிழகத்திற்கு இது வரை ஒரு லட்சத்து ஆயிரத்து 541 கோடி ரூபாய் கடன் உள்ளது. அதோடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்திற்கு 40 ஆயிரம் கோடி கடன் உள்ளது. எனவே, எங்கள் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையை, பூஜியம் என்ற அளவையோ, 3 சதவீதத்திற்கும் குறைவான நிதி பற்றாக்குறை என்ற அளவையோ எட்டும் நிலையில் நாங்கள் இல்லை.   11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் கடைசி 4 ஆண்டுகளில் வேளாண்மையில் சீரான வளர்ச்சி இல்லை. வேலைவாய்ப்புகளும் மிகக்குறைந்த அளவே ஏற்படுத்தப்பட்டிருந்தன.
 
தொழிற்சாலை பிரிவில் மிக குறைவான வளர்ச்சி இருந்ததால், மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. உற்பத்தி பிரிவில் சரியான வளர்ச்சி இல்லை என்பதால் உணவுக்காக நுகர்வோர் அதிக அளவில் செலவு செய்ய வேண்டியதாகி விட்டது.   அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் தொழில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். மேலும், நான் தமிழ்நாடு 2025-ம் ஆண்டு தொலைநோக்கு திட்டம் என்ற ஒரு திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன்.
 
இதன்படி, வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அம்சங்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படும். அதோடு தமிழகத்தை முன்னேற்றம் அடைந்த மாநிலமாக மாற்றும் திட்டம் தீட்டப்படும்.   தமிழகத்தில், நெல், பருப்பு வகைகள், கரும்பு மற்றும் பருத்தி உற்பத்திக்கும், உயர்தர பயிர் வகைகளை பயிரிடுவதற்கான மாற்றங்களை கொண்டு வருவதற்கும், தமிழகத்தில் பயிர் வளர்ச்சிக்கான சிறப்பு தொழில் நுட்பத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். நாட்டில் சராசரிக்கும் குறைவாக பருவ மழை பெய்யும் என்று தகவல்கள் கூறுகின்றன.
 
 பருவ மழை குறைவாக பெய்தாலும், அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். பொருளுக்கான தேவை மற்றும் சப்ளை ஆகியவற்றிற்கு இடையேயுள்ள வித்தியாசத்தை குறைக்க, உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கப்படும். விலை கடுமையாக ஏறும் போது, குறிப்பிட்ட சில பொருட்களை சந்தையில் இருந்து வாங்கவும், அவற்றை நுகர்வோர்களுக்கு விற்பனை செய்வதற்கு வசதியாக கூட்டுறவு சங்கங்களுக்கு நிலையான நிதியமைப்பை நான் ஏற்படுத்தியிருக்கிறேன்.  
 
 
தமிழ்நாட்டில் உள்ள கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் விவசாய உற்பத்தி பெருங்கஷ்டங்களை அனுபவித்து வருகிறது. காவிரி ஆற்றை தமிழ்நாட்டில் உள்ள அக்னி ஆறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளோடு இணைப்பது மிகவும் அவசியமாகும். கடந்த 14-ந் தேதி பிரதமரை சந்தித்து பேசிய போது, இந்த திட்டத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கும்படி கேட்டுக்கொண்டேன்.   கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கடுமையான மின்சார பற்றாக்குறை இருந்ததால், தொழில் வளர்ச்சியை பாதித்தது.
 
இதனால் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. எனவே நான் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை வேகமாக சீர்செய்யவும், காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இது போல சீரான மின்விநியோகம் வழங்கி அதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளேன். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.
 
எனவே ரூ.45 ஆயிரம் கோடி செலவில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் 10 சூரிய வெப்பத்தினால் மின்சார உற்பத்தி செய்யும் பூங்காக்களை அமைக்க திட்டமிட்டுள்ளேன். இதுதொடர்பாக தேசிய தூய்மை எரிசக்தி நிதியில் இருந்து உதவிகள் வழங்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன்.   சென்னையை உலக தரம் வாய்ந்த நகரமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
 
இங்குள்ள போக்குவரத்து நெருக்கடியை நீக்க, எனது அரசு 16 ஆயிரத்து 650 கோடி ரூபாய் செலவில் பறக்கும் ரெயில் திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம், மோனோ ரெயில் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றி, எல்லாருக்கும் ஒரு நல்ல போக்குவரத்து வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தும் அளவு 27-ல் இருந்து 46 சதவீதமாக உயரும். இந்த முயற்சிகளுக்கு பொதுத்துறையோடு, தனியார் பங்கீடும் பெரிய அளவில் ஈர்க்கப்படும்.  
 
மாணவர்கள், தொழிலாளர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக, பல்கலைக்கழகங்களை, உலக தரவாய்ந்தவையாக மாற்றப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10ஆயிரத்து 700 கோடி செலவில், 68 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கி அவர்களுக்கு கம்ப்ïட்டர் பயன்பாட்டை வளர்க்க திட்டமிட்டுள்ளோம். சமூக நல பிரிவில் முதியோர் மற்றும் இதர பிரிவினருக்கு பென்சன் தொகையை ரூ.500-லிருந்து ரூ.1,000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதில், ரூ.200 தான் மத்திய அரசாங்கத்தால் உதவியாக அளிக்கப்படுகிறது.
 
இந்த பிரிவுகளில் 3 பிரிவினருக்குத்தான் மத்திய உதவி கிடைக்கிறது. மற்றுமுள்ள 5 பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், ஆதரவற்ற வேளாண் தொழிலாளர்கள், ஆதரவற்ற மனைவிகள், மற்றும் ஏழை வயதான திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு மத்திய உதவி கிடைக்கவில்லை. இதற்கான உதவிகளை வழங்க வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளில் உயர்தர நோயை கண்டறியும் மருத்துவ சேவைகளை பூர்த்தி செய்ய ரூ.2 ஆயிரத்து 300 கோடி தேவைப்படுகிறது.  
 
இந்திரா விகாஷ் யோகாஜன திட்டத்தில் கட்டப்பட்டுள்ள 210 சதுர அடி வீடுகள் போதுமானதாக இல்லை. எனவே, சூரிய ஒளி வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் 300 சதுர அடி வீடுகளை 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டிக்கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்துக்காக கூடுதலாக மத்திய உதவி ரூ.1,125 கோடி தேவை. அதோடு, அவற்றுக்கு சூரிய ஒளியினால் மின்சார வசதிகள் வழங்குவதற்கும் கூடுதலாக ரூ.300 கோடி நிதி அளிக்க வேண்டும்.
 
இந்த ஆண்டு 1,933 கோடியே 39 லட்சம் செலவில், சாலைகள், நகர்ப்புற வளர்ச்சி, சுகாதாரம், காடு வளர்ப்பு, நீர்பாசனம், குடிநீர் சப்ளை மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் உள்ளிட்ட 16 திட்டங்களை வெளி நிதியுதவியுடன் நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.   இப்போதுள்ள ஆண்டு திட்டத்தொகை 23 ஆயிரம் கோடியாகும். எனவே, 4,600 கோடி ரூபாய் வழக்கமான மத்திய உதவியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது அரசாங்கம் நிறைவேற்ற உள்ள பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்தின் கணிசமான உதவி வேண்டும்.
 
இது மாநிலத்தின் கடன் நிவாரணத்திற்காக விசேஷமாக எங்களுக்கு தேவைப்படும் 1 லட்சம் கோடிக்கு கூடுதலாக தேவைப்படும் தொகையாகும். திட்டக்குழு எங்கள் கோரிக்கைகள் எல்லாம் விசேஷ திட்ட உதவி மற்றும் கடன் போக்கும் திட்டங்களுக்காக பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...