Wednesday, July 6, 2011

தமிழர் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்

இலங்கைத் தமிழ் மக்களுக்கு அந்நாட்டின் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதற்கு இந்தியா உதவிடும் என்றும் இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.

புதுடெல்லிக்கு வந்துள்ள இலங்கை, மாலைத் தீவு இதழாளர்களை சந்தித்துப் பேசியபோது நிருபமா இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறினாலும், அதற்கான எந்த அழுத்தத்தையும் இலங்கை மீது இந்தியா கொடுக்காது என்றும் நிருபமா கூறியுள்ளார்.

“இலங்கை நட்பு நாடு இந்தியா. இலங்கை பலமாக இருப்பதே இந்தியாவிற்கு உதவியாக இருக்கும் என்று கருதுகிறோம். அங்கு நிலவுவரும் மோதலுக்கு தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அரசு மீது எந்த அழுத்தத்தையும் தர மாட்டோம். ஆனால் அந்த மோதலுக்கு நிரந்தரமான, அனைத்துச் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைக் காண இந்தியா உதவும்” என்று நிருபமா கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி, “ஒருங்கிணைந்த இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் அந்த மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. அந்த ஏற்பாடு 13வது திருத்தத்தின் கீழ் காணப்படுகிறதா இல்லையா என்பது இலங்கை அரசைப் பொறுத்த விடயம்” என்றும் நிருபமா கூறியுள்ளார்.

“அப்படிப்பட்ட ஒரு அரசியல் ஏற்பாட்டை தமிழ்த் தேச கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் கட்சிகளுடன் விவாதித்து, இணக்கமானத் தீர்வைக் காண வேண்டும். தமிழர்கள் அங்கே கடினமான சூழ்நிலையில் உள்ளனர், அதனை இலங்கை அரசு தீர்த்துவைக்க வேண்டும்” என்றும் நிருபமா கூறியுள்ளார்.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை பற்றிப் பேசியுள்ள நிருபமா, “இது தொடர்பான பிரச்சனைகளில் உண்மை என்னவென்பதை பன்னாட்டு சமூகத்திற்கு இலங்கை விளக்கிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் கவலைகளை உணர்வுடன் அணுகுவோம

இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து தமிழ்நாட்டில் இருந்து எழும் கவலைகளை புறக்கணிக்க முடியாது என்று கூறியுள்ள நிருபமா, அதனை இலங்கை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

“அப்படிப்பட்ட கவலைகள் எப்போதும் உள்ளது, அதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம். எனவே தமிழக மக்கள் கூறுவதை புறக்கணிக்க முடியாது. நாங்கள் இலங்கையில் என்ன செய்கிறோம் என்பதையும், அந்நாட்டு அரசுடன் என்ன பேசுகிறோம் என்பதையும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்பதையும் தமிழ்நாட்டு அரசுக்கு தெரிவிக்கின்றோம், இதனை நான் உங்களுக்கு நேரிடையாக கூறுகிறேன். அந்த மக்களுக்கு எங்களால் எப்படி உதவ முடியுமோ, அவர்களுக்கு மறுவாழ்வு தரவும், முன்னேற்றத்திற்கு உதவிடவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்வோம். இந்தக் கவலைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...