Wednesday, July 13, 2011

தயாநிதி செய்த முறைகேடுகள் என்ன? : சி.பி.ஐ.,யிடம் 20க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி விலகியதை அடுத்து, அவருக்கு எதிரான புகார்கள் குறித்த விசாரணையை சி.பி.ஐ., தீவிரப்படுத்தியுள்ளது. தயாநிதி தன் பதவிக் காலத்தில் செய்த முறைகேடுகள் குறித்து, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர், சி.பி.ஐ.,யிடம் சாட்சியம் அளித்துள்ளனர். வரும் செப்டம்பர் இறுதிக்குள், இவர் மீதான விசாரணைகளை முடிக்கவும் சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.
தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து விலகியதும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., வேகமாக விசாரித்து வருகிறது. வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள், தயாநிதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது. தயாநிதி தன் பதவிக் காலத்தில் செய்த முறைகேடுகள் குறித்து, இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் சி.பி.ஐ.,யிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களில் பலர் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றியவர்கள்.
மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் என்ற நிறுவனம், தயாநிதியின் சகோதரர் கலாநிதி நடத்தும், "சன் டிவி' நிறுவனத்தில் 630 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளது. மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பவர் அனந்தகிருஷ்ணன். "ஏர்செல் நிறுவனம், இந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு குறைந்த விலையில் அதிக பங்குகளை விற்க தயாநிதி தன்னை நிர்பந்தப்படுத்தினார்' என, ஏர்செல் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் புகார் கூறியிருந்தார்.
"ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்காத காரணத்தால், இரண்டு ஆண்டு காலம் யு.ஏ.எஸ்., உரிமம் தருவதை தாமதப்படுத்தினார். ஏர்செல்லின் 74 சதவீத பங்குகளை விற்ற பின் தான், "டிஷ்நெட்' போன்ற சேவைகளுக்கு அனுமதி கிடைத்தது' என, சிவசங்கரன் தனது புகாரில் கூறியுள்ளார். சிவசங்கரன் கூறிய புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி சி.பி.ஐ., டில்லி போலீசிடம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேக்சிஸ் நிறுவனத்துக்கும், ஏர்செல் நிறுவனத்துக்கும் நடந்த பங்கு பரிவர்த்தனைகள் குறித்து, ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கி நிர்வாகத்திடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. மேக்சிஸ் நிறுவனத்துக்கும், ஏர்செல் நிறுவனத்துக்கும் இடையே நடந்த பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும், மேக்சிஸ் நிறுவனத்துக்கும், "சன் டிவி' நிறுவனத்துக்கும் நடந்த பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களையும் ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கி, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2004 முதல் 2007 வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக பதவி வகித்த தயாநிதியும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விஷயத்தில் முறைகேடு செய்துள்ளதாக சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, தயாநிதியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சியினர் பிரதமரை வற்புறுத்தினர். இதனால், கடந்த வாரம் அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...