Monday, July 11, 2011

கலைஞர் "டிவி' வாங்கிய ரூ.230 கோடி கடன் விசாரணையில் அடுத்த மோசடி அம்பலம்

கலைஞர் "டிவி'க்கு, கரீம் மொரானியின் சினியுக் நிறுவனம், 230 கோடி ரூபாய் கடனாகக் கொடுத்த விவகாரத்தின் பின்னணியில், கோல்கட்டாவைச் சேர்ந்த, வர்த்தகத்தில் ஈடுபடாத 19 கம்பெனிகளை, வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இக்கம்பெனிகள் குறித்து மேலும் தீவிர விசாரணை நடக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதில், கலைஞர் "டிவி'க்கு, சினியுக் நிறுவனம் அளித்த ரூ.200 கோடி, பெரிய அளவில் பேசப்படுகிற விஷயம். கலைஞர் "டிவி'க்கு கடன் தேவை என்றதும், இவ்வளவு பெரிய தொகை கைமாறியதும், அது பல்வேறு சுற்று வழியில் வந்ததும் கண்டறியப்பட்டது.
பல்வா என்பவர் சினியுக் நிறுவனத்தின் மூலம், இத்தொகையை கைமாற்றினார் என்பதும், தற்போது திகார் சிறையில் இருக்கும் சினியுக் நிறுவனத்தைச் சேர்ந்த மொரானி, இந்தப் பரிமாற்றத்திற்கு ரூ.6 கோடி கமிஷனாக பெற்றார் என்பதும், சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தந்த தகவல். தற்போது, கோல்கட்டாவைச் சேர்ந்த, நம்பகத் தன்மையற்ற 19 நிறுவனங் கள், 52.20 கோடி ரூபாயை கலைஞர் "டிவி'க்கு, சினியுக் நிறுவனம் மூலம் பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்தது.


இதுகுறித்து அவர்கள் மேலும் விசாரித்த போது, "இந்த நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் 52.20 கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்தது கண்டறியப்பட்டது. இக்கம்பெனிகள் அனைத்தும், கம்பெனிகள் சட்டப்படி உருவாக்கப்படாத, "உப்புமா கம்பெனிகள்'; அவை இயங்குவதற்கான அடிப்படைகளே இல்லாதவை' என, கண்டறியப்பட்டிருக்கிறது. இக்கம்பெனிகள் , "சபைர் மீடியா அண்டு இன்ப்ரா ஸ்ட்ரக்ச்சர் லிமிடெட்' நிறுவனத்தின் பெயரில் பணப்பரிமாற்றத்தை கலைஞர் "டிவி'க்கு செய்திருக்கின்றன. அதிலிருந்து , "அஞ்சுகம் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு 83 கோடி ரூபாயை கொடுத்துள்ளது. இந்த அஞ்சுகம் நிறுவனம், கலைஞர் "டிவி'க்கு, சினியுக் நிறுவனத்தின் கடனை அடைக்கும் வகையில், 69.61 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வருமான வரித்துறையினரின் விசாரணையில் வெளியான இந்த விவரங்கள், அத்துறையின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதிலிருந்து கலைஞர் "டிவி' கடனாக வாங்கிய பணத்தின் ஒரு பகுதி, கோல்கட்டாவைச் சேர்ந்த சில நிறுவனங்களிடம் இருந்து வந்தது தான் என்பது தெளிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...