அம்மா என்றழைத்த குழந்தை,ஐயோ என்று சரிகிறது அடுத்த நொடி மண்ணில்.அம்மாவுக்கு முன் நிர்வாணமாய் மானபங்கப் படுத்தப்பட்ட மகன்.அப்பாவுக்கு முன்னால் கற்பழிக்கப்பட்ட மகள்.இறந்தப்பின்னும் துகிலுரியப்பட்ட நம் சகோதரிகள்.மார்பகங்களைத் திருகி இது என்ன குண்டா என கொச்சைப் படுத்தப் பட்ட கொடூரங்கள்.பிறப்புறுப்பில் தோட்டா செலுத்தி துளைக்கப்பட்ட அநீதிகள்.தாயின் மார்பத்தில் பால் குடித்தவாறே மரணித்துப் போனக் குழந்தை.கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள்.. இத்தனை கொடூரங்களும் நமக்கு அருகாமையில் இலங்கையில் நம்மவர்களுக்கு..
நம் நிலை இங்கே செய்திகளிலும்,செவிகளிலும் கேட்டு கேட்டு,கேட்க நாதியற்றவர்களாய் நம்மினத்தை விட்டு விட்டு,கைகள் கட்டப் பட்டு,வாய்கள் பூட்டப்பட்டு இயலாமையில் குமுறிக் கொண்டு,இருந்தோம் இத்தனை நாளாய்..எதிர்த்து போரிடத்தான் நம்மால் இயலவில்லை.அழுவதற்கு கூடவா நம்மிடத்தில் கண்ணீர் இல்லை..நம் அழு குரலையாவது இந்த அகிலம் அறியட்டும்.அதற்காக தமிழுணர்வு இயக்கங்கள் ஒன்றிணைந்து ,இறந்த ஒன்றரை லட்சம் தமிழர்களுக்காய் மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவேந்தல் ஒன்றை மெரீனா கடற்கரையில்,கண்ணகி சிலை பின்புறம் ஜூன் 26 அன்று மாலை 5 மணியளவில் ஏற்பாடு செய்திருந்தார்கள்..
மெரினா செல்ல ஆயத்தமாகும் போதே வானம் கொஞ்சம் கண்ணீரை இறந்த தமிழனுக்காய் சிந்திவிட்டு,தன் ஆற்றாமையைஅடக்கிக் கொண்டு ஆகாயத்தில் குமுறிக்கொண்டிருந்தது ,நம்மைப்போலவே.
அது தமிழர்களுக்கு,தமிழனின் உணர்வுக்கு விடுக்கப் பட்ட சவாலாக கூட எடுத்துக் கொள்ளலாம்.மழை வருகிறதே என்று தமிழன் வீட்டில் அடங்கி,முடங்கி விடுகிறானா..?இல்லை உண்மை உணர்வுடன், மழை வந்து என்னை நனைத்தாலும் பரவாயில்லை.என் இன மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு குரல் கொடுக்க வருவேன் என மெரினாவில் நிறைகிறானா?என மழை கொண்ட கோட்பாடாகவும் இருக்கலாம்.
ஆனால் மெரீனா சென்றபோது,கடற்கரையில் கடலைவிடவும் பெருந்திரளான உணர்வுக் கூட்டம்,குடும்பங்கள்,குழந்தைகள்,தாய்மார்கள்,தலைவர்கள் என மணற்பரப்பு முழுக்க மனித தலைகள்..உணர்ச்சி மிக்க உணர்வு கோசங்கள்,பனைமர நிழலாய் மணல் சிற்பம்,நாடகங்கள்,வலி சுமந்த ஓவியங்கள்,நினைவுசின்ன அமைப்பு வடிவைமைப்பு ,கண்ணீர் சிந்தி பூ தூவியவர்கள் என உணர்வுகளின் ஒருமித்த கூட்டம் அது ..,இருக்கும் தமிழனை காப்பாற்ற ,இனமானத்தின் ஒருங்கிணைந்த குரல் அது!
அங்கே செல்லும் வரை நான் எதிர்ப் பார்த்திருக்கவில்லை..இவ்வளவு கூட்டம் இருக்குமென்று..இனப்பாசம் இன்னும் செத்து விடவில்லை..தமிழ்மானம் எவரிடத்திலும் மடிந்து விடவில்லை..ஒவ்வொருவருக்குள்ளும் கொழுந்து விட்டு எரிகிறது என்பதை மெரினாவில்,மெழுவர்த்தி வெளிச்சத்தில் கண்டேன்..தமிழீழ விடியலுக்கான வெளிச்சம் அங்கே நிறைய பரவி இருந்தது!
இறந்த தமிழனுக்காய் மெழுகுவர்த்தி நம்மோடு சேர்ந்து தன் கண்ணீரை சிந்தி முடிக்க,அதுவரை ஆற்றாமையை அடக்கிகொண்டிருந்த மேகமும் தன் பங்குக்கு கண்ணீரை தாரை தாரையாக ஊற்றி முடித்தது!
No comments:
Post a Comment