Monday, July 4, 2011

எதிர்கட்சியாகக் கூட வரமுடியவில்லை என்பதுதான் வேதனை: மு.க.ஸ்டாலின்!

சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி பெற்றது பிரச்சனையில்லை. ஆனால் எதிர்கட்சியாகக் கூட வரமுடியவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை அன்பகத்தில் நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, பேசியதாவது:
தேர்தலில் தி.மு.க. ஆளும் கட்சியாக வர முடியாவிட்டாலும் பரவாயில்லை. எதிர்க்கட்சியாக கூட வரமுடியவில்லை என்பதுதான் வேதனை. சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி. ஓரிரு இடங்களில் கூட்டணியினரிடம் சின்ன சின்ன பிரச்சினை ஏற்பட்டாலும் பெரிய அளவில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒற்றுமையாக செயல்பட்டோம்.
முந்தைய தேர்தல்களில் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை விரட்டியடித்தார்கள் என்ற செய்தி வரும். நடந்து முடிந்த தேர்தலில் நம்முடைய கட்சி உறுப்பினர்கள் யார் மீதும் அவ்வாறு புகார் வரவில்லை. மக்கள் நலத்திட்டங்களையும் சிறப்பாக நிறைவேற்றினோம். அப்படியிருந்தும் தோற்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று 2ஜி பிரச்சினை.
குறிப்பிட்ட சிலரால் 2ஜி ஊழல் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது. இன்னொன்று ஒவ்வொரு முறையும் மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்புவதுதான். தி.மு.க.வுக்கு அடுத்த மாற்று அ.தி.மு.க.தான். அதனால்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.
தி.மு.க. பொதுக்குழுவுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை இளைஞர் அணி கூட்டம் நடைபெறும். அதில் நிர்வாகிகளின் குறைகள் கேட்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரணி நிர்வாகிகள் பலரும் திமுகவின் தலைமை பொறுப்புக்கு மு.க. ஸ்டாலின் வரவேண்டும் என்று கூறினார்கள்.  கடுமையான உழைப்பு, செயல்திறனால் ஆட்சியின் பலன்கள், கடைகோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்பட்டீர்கள். உங்கள் அயராத உழைப்பு தமிழக மக்களுக்கு தெரியும். நீங்கள் தலைமை பொறுப்பு ஏற்றால்தான் கட்சியினருக்கும் நம்பிக்கை பிறக்கும். வருகிற உள்ளாட்சி தேர்தலை பலமாக சந்திக்க முடியும் என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்கள்.
அவர்களின் பேச்சை இடைமறித்த மு.க.ஸ்டாலின் இங்கு இளைஞர் அணியின் தீர்மானம் பற்றி மட்டும் பேசுங்கள். உங்கள் மற்ற கருத்துக்களை கட்சி பொதுக்குழுவில் பேசுங்கள் என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...