Saturday, July 16, 2011

நில கையகப்படுத்தலிலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது

 
ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களிடம் இருந்து அராஜகமாக அவர்களுடைய சொத்துக்களையும், நிலங்களையும் முந்தைய ஆட்சியில் அபகரித்துவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர தனி காவல் பிரிவை தமிழக முதல்வர் உருவாக்கியுள்ளது வரவேற்பிற்குரியதாகும்.

அடுத்தவர் சொத்துக்களை அநியாயமாக அபகரித்தவர்கள், மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கிக்கொண்டவர்கள், அடியாட்களை வைத்து மிரட்டி சொத்துக்களை விற்கச் செய்தவர்கள் என்று இந்த அதிகாரக் குற்றப்பட்டியல் மிக நீளமானது. அப்படிப்பட்ட குற்றங்களை இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்து தண்டிக்க தவறுவோமானால், இப்படிப்பட்ட அபகரிப்புகள் எந்த ஆட்சி வந்தாலும் தொடரும் என்ற நிலை ஏற்பட்டுவிடும். எனவே அதற்கு முடிவுகட்டத் தனி காவல் பிரிவை ஏற்படுத்தியிருப்பது சட்டத்தின் ஆட்சியை நிலைப்படுத்துவதற்கு மட்டுமின்றி, இப்படிப்பட்ட வழிகளில் கொள்ளையடிக்கப்படும் சொத்துக்கள் நீடித்து நிற்காது என்ற உண்மையை நிலக் கொள்ளையர்கள் புரிந்துகொள்ளவும் வழியேற்படும்.

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தனியார்கள் செய்த இப்படிப்பட்ட அக்கிரமத்தை முழுமையாக கண்டறிய முற்பட்ட தமிழக முதல்வர், அரசே முன்னின்று செய்த நில கையகப்படுத்துதலிலும் இதேபோன்று அக்கிரமம் நடந்துள்ளது என்பதை அறிவாரா?

 
சமூக நலனிற்காக தனியார் நிலம் கையகப்படுத்துதல் என்பது வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இருந்து நடைபெற்று வருவதுதான். அதற்கு இரண்டு இலக்குகள் உண்டு. ஒன்று, பள்ளி, மருத்துவமனை போன்ற மக்களுக்குப் பயன்படும் சமூக கட்டமைப்புக்களை உருவாக்கவும், இரண்டாவதாக, சாலை போடுதல், இரயில் பாதைகளை அமைத்தல், பாலம் கட்டுதல் உள்ளிட்ட மக்களுக்கு அத்யாவசியமான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்கவும் பொது நிலங்களும், தனியார் நிலங்களும் அரசு உத்தரவின் அடிப்படையில் கையகப்படுத்தப்படும். மேற்கூறப்பட்ட நோக்கங்களுக்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது அதற்குரிய இழப்பீட்டை அளிக்க நிலம் கையகப்படுத்தல் சட்டம் (இது 1894இல் வெள்ளைக்காரன் காலத்தில் இயற்றப்பட்டு இன்றுவரை) நடைமுறையில் உள்ளது.

ஆனால் நிலம் கையகப்படுத்தல் சட்டம் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும், இப்போது சுதந்திர இந்தியாவில் இது பெருமளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டு நிலம் கையகப்படுத்தல் என்பதே ஒரு திட்டமிட்ட மோசடியாக நடைபெற்று வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கூறுகின்றனர்.
இந்தச் சட்டத்தின்படி, பொது நிலத்தை அல்லது தனியார் நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டுமெனில் அதற்கான நோக்கத்தை (Purpose) அரசு மக்களுக்குச் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட பொது நோக்கம் என்பது என்னவாக இருக்கும் என்பதையும் அச்சட்டம் அடிக்கோடிட்டுக்காட்டியுள்ளது.

1. கிராமத்தின் திட்டமிட்ட மேம்பாட்டிற்காக;
2. ஊரகத் திட்டம் அல்லது நகர மேம்பாடு ஆகியவற்றிற்காக நிலம் ஒதுக்கீடு செய்தல்;
3. தரிசு நிலங்களை தொழில் நிலங்களாக மாற்றுவதற்கானத் திட்டத்திற்காக;
4. பள்ளி, வீடுகள் கட்ட, மருத்துவமனை உள்ளிட்ட சுகாதார அமைப்புகளை உருவாக்க, குடிசை மாற்றுத் திட்டத்திற்கா

என்று நோக்கத்தை வரையறை செய்கிறது. இதனை ஒரு பொது அறிவிப்பின் மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ அந்த நோக்கத்திற்காக மட்டுமே அது பயன்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்றும் அச்சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இப்படித்தான் வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும், அதன் பிறகு விடுதலைப் பெற்ற இந்தியாவிலும் நிலம் கையகப்படுத்தல் என்பது நேர்மையான நடைமுறையாக இருந்து வந்ததால் இந்தச் சட்டம் ஒரு நூற்றாண்டுக்காலத்திற்கு மேலாக வாழ்ந்துவிட்டது.

ஆனால், இன்றுள்ள அரசுகள் மேம்பாடு அல்லது முன்னேற்றம் என்று பெயரில் நடைமுறைப்படுத்தும் பல திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, அதன் நோக்கத்தை முறையாகத் தெளிவுபடுத்தி கையகப்படுத்துவதில்லை என்பது மட்டுமின்றி, எந்த நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படாத நிலையில் அதனை ஆட்சிக்கு உகந்த தனியார் வசம் ‘சகா’ விலைக்ககொடுப்பதும், அவர்கள் அதனை வீட்டு மனையாக்கி விற்று கொள்ளையடிப்பதும் இந்தியா முழுவதும் பரவலாக நடக்கிறது.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இரண்டு விதமாக மோசடிகள் நடக்கின்றன. ஒன்று, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது என்பது போன்ற அரசின் திட்டம் சார்ந்து நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. மற்றொன்று, எதிர்கால திட்டங்களுக்காக தரசு நிலங்கள் என்று கூறி விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது அது பொதுவாக அரசின் தரிசு நிலங்களையே பயன்படுத்தி திட்டம் நிறைவேற்றப்பட்டாலும், கூடுதல் நிலம் தேவை என்ற நிலை ஏற்படும்போது அருகில் இருக்கும் நிலங்கள் - பொதுவாக விளை நிலங்கள் - கட்டாயப்படுத்தி கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மோசடி தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது.

நிலம் கையகப்படுத்தல் தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றபோது, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பேசினார். தங்களுக்குச் சொந்தமான விளை நிலங்களை தரிசு நிலங்கள் என்று கணக்குக்காட்டி மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்திவிட்டது என்றும், அதற்கு மிகக் குறைவான தொகையே இழப்பீடாக வழங்கப்பட்டது என்றும் அதிர்ச்சி தரும் தகவலையளித்தார்.
 
சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு என்றுதான் இவர்களின் நிலங்களை கையகப்படுத்தியுள்ளனர். அவைகள் அனைத்தும் சாலைக்கு அருகேயுள்ள காரணத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. பருப்பு, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை பயிர் செய்த விவசாயிகளிடமிருந்து, சுமார் 1,500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது எனவும், இப்போது அந்த நிலங்களில் வீட்டு மனைகள் முளைத்து வருவதாகவும் அந்த விவசாயி கூறினார். அந்த நிலங்களை மீட்க அங்கே மனித உரிமை அமைப்புகள் பங்கேற்ற போராட்டமும் நடந்துள்ளது.
ஆக, சட்டத்திற்குப் புறம்பாக நிலம் கையகப்படுத்தலில் ஈடுபட்டது இங்கு தனியார் அல்ல, அரசு! அதுவும் மாவட்ட நிர்வாகம்! இந்தக் கொடுமைக்கு சட்ட ரீதியாகத் தீர்வு காணும் பணப் பலம் அந்த விவசாயிகளுக்கு இல்லை.

இப்படிப்பட்ட நில கையகப்படுத்தலுக்கும் நில ஆக்கிரமிப்பு மற்றும் கொள்ளையிடலுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? அரசு ஆதரவுடன் தனியார்கள் செய்யும் நில ஆக்கிரமிப்பு, அரசு நிர்வாகமே அநீதியாகச் செய்யும் நில கையகப்படுத்தல்! இதில் பெயர் மட்டுமே வேறுபாடு. இழைக்கப்படும் அநீதியில் மாற்றமில்லை.

இந்தப் பழைய சட்டத்தைப் பயன்படுத்திச் செய்யும் பெரும் கொடுமை இழப்பீடு நிர்ணயித்தலில் உள்ளது. யார் இழப்பீட்டை நிர்ணயிப்பது? மாவட்ட நிர்வாகமே. அதனிடம் உள்ள மதிப்பீட்டின் படி இழப்பீட்டை நிர்ணயிக்கிறது. ஆனால் அந்த நிலம் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்படும்போதோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்படும்போதோ மதிப்பு கூடிவிடுகிறது, அதுவே பெரும் வணிகத்திற்கு வழி வகுக்கிறது. எனவே தமிழ்நாட்டில் சாலையோரமாக இருந்த விளை நிலங்கள் இப்படி எவ்வளவு கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அரசு ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

உற்பத்தி இழப்பும், வாழ்வுரிமை இழப்பும்

அரசுகள் மேற்கொள்ளும் நிலம் கையகப்படுத்தல் என்பது சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவோ அல்லது மின்சார உற்பத்தி உள்ளிட்ட சமூகத் தேவை காரணங்களுக்காகவோ கூட இருந்தாலும், அதில் இரண்டு பெரும் இழப்புகள் ஏற்படுகின்றன.

ஒன்று, விளை நிலங்கள் இப்படி தரிசு நிலங்கள் என்று கூறப்பட்டு கையகப்படுத்தப்படுவதாலோ அல்லது விளை நிலம் என்று தெரிந்த நிலையிலும் ‘வேறு வழியின்றி’ கையகப்படுத்தப்படுவதாலோ ஏற்படும் உணவு உற்பத்தி இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது? இந்தியா முழுவதும் சாலை விரிவாக்கத்திற்காகவும், பெரும் திட்டங்களுக்காகவும், ‘வளர்ச்சி’த் திட்டங்களுக்காகவும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களால் ஏற்பட்ட வேளாண் உற்பத்தி இழப்பு பற்றி எந்தக் கணக்கெடுப்பும் செய்யப்படவில்லை.
 
இதனை தமிழ்நாட்டில் செய்தாக வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தி - நிதி நீர்ப் பிரச்சனைகளின் காரணமாக பெருமளவிற்கு குறைந்துள்ளது. அதோடு இப்படி வானம் பார்த்த பூமிகள் வளைக்கப்பட்டவிட்டதால் ஏற்படும் உற்பத்தி இழப்பு எவ்வளவு என்பதை கணக்கிட்டால்தான் உண்மையான நிலைமை புரியும். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் வளர்ச்சி பலியிடப்படுவது குறுகிய எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் உணவுத் தன் நிறைவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்து அரசு செயலாற்றிட வேண்டும்.

இரண்டாவதாக, விளை நிலங்கள், நேர்மையாகவோ அல்லது குறுக்கு வழியிலோ கையகப்படுத்தப்படுவதால் - இழப்பீடு அளிக்கப்பட்டாலும் அந்த உழவர் தனது வாழ்க்கைக்கு என்ன செய்வார்? அவருக்குத் தெரிந்தது உழவு மட்டுமே என்ற நிலையில், இழப்பீட்டை வைத்து அவரால் என்ன செய்ய முடியும்? வேறொரு இடத்தில் விளை வாங்க முடியுமா? அது சாத்தியமா? இந்த வினாக்களுக்கு அந்தந்த பகுதியில் பதில் தேட வேண்டும்.
 
விளை நிலத்தை இழந்த உழவருக்கு மறுவாழ்வு என்பதெல்லாம் சும்மா பேச்சுக்குத்தான், உண்மையில் அவருக்கு எந்த விதத்திலும் மறுவாழ்வு சாத்தியமில்லை. சாதாரண உடல் உழைப்பை மட்டுமே சார்ந்து - அதாவது கூலி உழைப்பாளியாய் வாழும் அவல நிலைக்கு அவர் தள்ளப்படுவார். இது வாழ்வுரிமைப் பறிப்பாகாதா? அரசு சிந்திக்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்தல் என்பது இன்றைக்கு டெல்லியை அடுத்த பட்டா பராசூல் எனுமிடத்தில் பெரும் வாழ்வா, சாவா பிரச்சனையை உருவாக்கியுள்ளதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நிலை தமிழகத்தில் உருவாக அனுமதிக்கக் கூடாது.

நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக மத்திய அரசு விரைவில் ஒரு புதிய சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. புதிய சட்டத்தின் உள்ளடக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை. இப்படிப்பட்ட சட்டங்களின் நோக்கம் என்பது தெளிவாக வரையறை செய்யப்பட வேண்டுமெனில், சட்ட வரைவு உருவாக்குவதற்கு முன்னர், நிலம் கையகப்படுத்தல் தொடர்பான கொள்கையை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு கொள்கை வரையறை அளிக்கப்பட்டு, அது நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் விவாதிக்கப்பட்டு உரிய மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரே சட்ட வரைவை உருவாக்க வேண்டும். கொள்கையை உருவாக்காமல் சட்ட வரைவை உருவாக்குவது மீண்டும் பழைய அத்துமீறல்களுக்கே வழி வகுக்கும்.

 
உழவர் நிலங்கள் கையகப்படுத்தல் தொடர்பாக மிக ஆழ்ந்த சிந்தனை தேவை. இந்திய நாடு 65 விழுக்காடு கிராமங்களையும், கிராமத் தொழில்களையும் சார்ந்துள்ளது. இதில் தொழில் உரிமை என்பது வாழ்வுரிமையுடன் பிரிக்க முடியாத அளவிற்கு பிண்ணிப் பிணைந்துள்ளது. உழவுத் தொழில் முடக்கப்பட்டால் உழவரின் வாழ்வுரிமை வினாக்குரியாகிவிடுகிறது. எனவே விளை நிலம் கையகப்படுத்தல் என்பது எப்போது அனுமதிக்கப்படும் என்பதற்கான தெளிவான வரையறை அவசியம். அந்த வரையறையை இந்த நாட்டின் விவசாயிகளுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தி பெருக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொள்ளவதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இப்பிரச்சனைக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...