Saturday, July 16, 2011

மத்திய மந்திரியா, தி.மு.க பதவியா? புது ரூட்டில் அழகிரி!


இந்தியாவின் வேர் கிராமங்களில் இருக்கிறது. இந்தியா விவசாயத்தை நம்பியிருக்கும் நாடு...இப்படி தான் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் அத்தனை மாநில மொழிகளிலும் இருக்கும் பாடப்புத்தகங்களில் அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் விவசாயத்துக்கு உயிர் கொடுக்க வேண்டிய உரத்துறை மந்திரியை தேடிப்பிடிக்க வேண்டிய நிலையில் இந்திய மத்திய அரசாங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மலையாளத்து மேனன்களுக்கும், நாயர்களுக்கும் இது போல் ரயில் துறை மந்திரி பதவி கிடைத்தால் இந்தியாவில் ஓடும் ரயில்கள் அத்தனையும் கேரளாவை வந்து ஒரு சுற்று சுற்றி விட்டு ஓடும்படி செய்வார்கள். அவ்வளவு பற்று அவர்களுக்கு தங்கள் மாநிலத்தின் மீது.
ஆனால், இந்தியாவுக்கே உணவிடும் உரத்துறை கையில் இருந்தும், அழகிரி டெல்லி பக்கம் போவது திகார் சிறையில் இருக்கும் கனிமொழியை பார்க்க மட்டுமே. அடுத்து மதுரைக்கு வரும் போது உடன்பிறப்புகளின் காது குத்து, கல்யாணம், கெடாவெட்டு என்று கலந்து கொண்டு தான் இருப்பதை காட்டுவது தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள் தி.மு.கவில் இருக்கும் படித்த உடன்பிறப்புகள். சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தால் மட்டுமே திறமையிருந்தும் பலர் எங்கோ மூலையில் முடங்கிக் கிடக்கிறார்கள். ஆனால் அழகிரிக்கு கருணாநிதியின் புதல்வர் என்பதால் இப்படி ஒரு பதவி கிடைத்தும், தனக்கு நிர்வாக மொழி திறன் குறைவு என்றாலும் கூட திறமையான அதிகாரிகளை பயன்படுத்தி தனது பதவியின் கௌரவத்தை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் இழந்து அவர் தோற்றுக் கொண்டே இருக்கிறார் என்பதற்கு சமீபத்திய பல உதாரணங்கள் தெளிவாக தெரிகின்றன என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.
அழகிரி! மதுரையை மீட்ட சுந்தரபாண்டியர், மன்னாதி மன்னன், மதுரை வீரன்...இதெல்லாம் மதுரை தி.மு.க உடன்பிறப்புகள் அழகிரிக்கு சூட்டிய நாமகரணங்களில் சில. ஆனால், இந்த பெயர்களுக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாமல் எல்லாவற்றிலும் தோற்றுக் கொண்டிருக்கிறார் அழகிரி என்பது தான் நடைமுறையில் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் அரசியலை கூர்ந்து கவனித்து வரும் நோக்கர்களும். அவர்கள் சொன்ன கருத்துக்களை இங்கே வைக்கிறோம்.
" ஆ.ராசா, கனிமொழி, தற்போது தயாநிதி என்று காங்கிரஸ் கட்சி தி.மு.கவுக்கு ஆப்பு வைத்து வருகிறது. எந்த காலத்து பகைக்கு இப்படி நடக்கிறது என்று கலைஞருக்கும் புரியவில்லை. அவரை சுற்றியிருக்கும் எவருக்கும் தெரியவில்லை. இதெல்லாம் நடந்தாலும், காங்கிரசுக்கும், தி.மு.கவுக்கும் உறவு சுமூகமாக இருக்கிறது என்கிறது தி.மு.க தலைமை. இந்த கட்டத்தில், டெல்லியில் தி.மு.க சார்பில் மந்திரியாக மிச்சம் இருக்கும் ஒரே நபர் அழகிரி மட்டுமே. கேபினட் மந்திரி வேறு.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பயன்படுத்தப்படும் உரம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அழகிரி பங்கேற்பு முக்கியமானது. ஆனால் அவர் உரத்துறை தொடர்பான கூட்டங்களில் பங்கேற்காத காரணத்தால், அழகிரியின் அலுவல மேஜையில் எக்கச்சக்கமான பைல்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் பிரதமர் முதல் மற்ற மாநிலங்களின் முதலமைச்சர்கள் வரை அத்தனை பேரும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். இது பற்றி அந்தந்த மாநிலங்களில் உள்ள ஊடகங்கள்அழகிரியை பற்றி கேலிக்கூத்தாக எழுதிக் கொண்டிருக்கின்றன. தன்னை ஊடகங்கள் செயல்படாத பிரதமர் என்று விமரித்து வரும் நிலையில் கூட்டணிக்காக அழகிரி போன்றவர்களை மந்திரியாக்கி விட்டு, மன்மோகன்சிங்செயல்படாத மந்திரிகளையும் சுமக்க வேண்டி இருப்பதாக குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றன.
டெல்லியில் இருக்கும் சுபாஷ் அகர்வால் என்பவர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மத்திய மந்திரிகளின் பாராளுமன்ற வருகை பற்றி கேட்டிருக்கிறார். அப்போது, மந்திரி சபை கலந்து கொள்ளாமல் அந்த பதவியின் மகத்துவம் தெரியாமல் இருந்த 2 பேர்களில் ஒருவர் அழகிரி என்பது தெரியவந்துள்ளது. 2010-2011 நிதி ஆண்டுகளில் நடைபெற்ற 40 கூட்டங்களில் வெறும் 8 கூட்டங்களில் தான் அழகிரி கலந்து கொண்டுள்ளார் அதிலும் அவர் பேசியதாக தெரியவில்லை. கூட்டத்தொடர்களில் ஆங்கிலமும், இந்தியும் தெரியாத காரணத்தால் பேசுவதில் சிக்கல் இருக்கிறது என்பதற்காக சபாநாயகர் மீராக்குமார், அழகிரி தமிழிலேயே பேசலாம் என்றும் சொல்லியும் பேச அழகிரியை தான் காணோம்.
முதலமைச்சர் ஆனவுடன், மரியாதை நிமித்தமாக மன்மோகன் சிங்கை சந்தித்த ஜெயலலிதா அழகிரி பற்றி ஒரு பெரிய க்ரைம் பைலை பிரதமரிடம் ஒப்படைத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. முதலமைச்சரான மகிழ்ச்சியில் டெல்லி செல்லும் ஜெயலலிதா, முக்கியமாக அழகிரி பற்றிய பைலை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் என்ன? பிரதமரை சந்தித்து பேச ஆயிரக்கணக்கான முக்கிய விடயங்கள் இருந்த போதும் ஜெயலலிதாவின் கவனமெல்லாம் அழகிரி "கணக்கு தீர்ப்பதில்" தெளிவாக இருக்கிறது என்பதற்கான முகாந்திரங்களே இந்த சம்பவங்கள். ஊடகங்களில் இது செய்தியாக வெளிவந்த நிலையிலும் அழகிரி இது பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. வழக்கமாக தனது ரேஞ்ஜ் ரோவர் வெளிநாட்டு காரில் மதுரையில் வலம் கொண்டிருந்தார். ராசாவும், கனிமொழியும், மாறன்களும் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் தனக்கு மட்டும் எதுவும் நடக்காது என்று அப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறது போலும்!
தேர்தலில் மதுரையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தோற்ற பிறகு ஒட்டு மொத்த தி.மு.க கூட்டத்தையும் யானை புகுந்த வெண்கலக்கடையாக கலக்கி எடுத்து விட ஜெயலலிதா அரசு தெளிவாக காய் நகர்த்துவது தெரிகிறது. அதற்கான முகாந்திரங்களை தி.மு.க வின் பெருந்தலைகளே ஏற்கனவே ஏற்படுத்தி விட்டு போயிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் நிலமோசடி, கட்டப்பஞ்சாயத்து, ஊழல், மோசடி என்று தி.மு.கவின் வி.வி.ஐ.பிக்கள் தலையிடாத பிரச்சினைகளே இல்லை என்ற அளவுக்கு கத்தி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதில் அழகிரியும் விதிவிலக்கல்ல என்பது தான் உண்மை. " 2011 ல் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே இருக்காது" தேர்தலுக்கு முந்தைய காலங்களில்அழகிரி கலந்து கொண்ட கூட்டங்கள், விழாக்கள் எல்லாவற்றிலும் அவர் சொல்லி வந்த இந்த வார்த்தை அ.தி.மு.கவினரை குடைந்து கொண்டிருக்கிறது. பாமர அ.தி.மு.க தொண்டனை சுடும் இந்த வார்த்தைகள் ஜெயலலிதாவை கொதிப்பேற்றாமல் விடுமா?
இதற்கு கணக்கு தீர்ப்பதன் தொடக்கம் தான், பிரதமருடனான சந்திப்பின் போது அழகிரியை பற்றி ஜெயலலிதா கொடுத்த க்ரைம் பைல். வளையங்களின் நடுப்புள்ளியை தொடுவதற்கு முன்பு வளையங்களை சிதறடிக்க வேண்டும். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. குற்றவழக்குகள் இந்த பூச்சி மருந்தை போல் இந்த வளையங்கள் என்று சொல்லப்படும் அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்ட அத்தனை பேரும் மீதும் தெளிக்கப்பட்டிருக்கிறது என்பது மறைமுகமான உண்மை. மதுரையில் இதற்கென்றே முக்கிய போலீஸ் அதிகாரிகள் அழகிரியின் அடிப்பொடி தொண்டர்களின் மீதான ரிஷிமூலங்களை எல்லாம் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களை உள்ளே கூட தள்ளிவிடுங்கள். ஆனால் எங்களால் நாளை என்ன நடக்குமோ என்று நினைத்து தூங்கவே முடியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கும் ஏராளமான தி.மு.க பிரபலங்களை கண்ணில் கருவளையத்துடன் மதுரையில் காண முடிகிறது.
தற்போது மையப்புள்ளியான அழகிரியையும் இது நெருங்கி விட்டது என்பதற்கு, மதுரை மேலூரில் தயாசைபர்பார்க் கட்ட அழகிரி மனைவி காந்தி அழகிரி பெயரில் வாங்கி பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கும், இடம் ஒரு தெளிவான சாட்சி. பல கோடி மதிப்பு பெறும் ஒரு இடத்தை இளைஞன் படத்தை எடுத்த லாட்டரி அதிபர் மார்ட்டின் அதிரடியாக கிரையம் செய்து, பிறகு அது காந்தி அழகிரி பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சௌராஷ்ட்ரா ஐயர் இனத்தை சேர்ந்த ஒரு அப்பாவி குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட சொத்து இது. இதை அழகிரிக்காக மிரட்டி வாங்கினார்கள் என்று போலீசிடம் புகார் போயிருக்கிறது.
இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கினால் அழகிரி மனைவி உள்பட பலரை போலீஸ் கண்டிப்பாக விசாரிக்கும். பிறகு அழகிரிக்கு சுத்தமாக தூக்கம் போய்விடும்.இது தவிர தா.கிருஷ்ணன் கொலை வழக்கை ஆந்திரா சித்தூர் நீதிமன்றத்தில் இருந்து தோண்டி எடுக்க ஏற்கனவே தமிழக பொலிஸ் படை முகாமிட்டு விட்டது. ஆனால், எந்த பிரச்சினையும் அழகிரியை நெருங்காமல் இருந்த கட்டத்தில் கூட டெல்லிக்கு உரத்துறை தொடர்பாக பேச போகாத அழகிரிக்கு. மேற்கண்ட பிரச்சினைகள் தலைக்கு மேல் அழுத்த தொடங்கினால்........விளைவு? ஒன்றும் பெரிதாக ஆகப்போவதில்லை என்று தான் நினைப்பதாக தெரிகிறது. என்னதான் குற்ற வழக்குகள் வந்தாலும் மத்திய மந்திரி என்றால்...மாநில பொலீஸ் அவ்வளவு எளிதாக தொட்டு விட முடியாது என்ற கணக்காக இருக்கலாம்.
சரி...ஒரு வேளை மத்திய மந்திரி பதவியே நெருக்கடிக்கு உள்ளாகிறது என்ற நிலை வந்தால்....அப்போது என்ன செய்வது என்பது தான் கேள்வி. அதற்கு தான் அழகிரி புது ரூட் இப்போது எடுத்திருக்கிறார் என்கிறார்கள் உடன்பிறப்புகளில் சிலர். மத்திய மந்திரி பதவியே போனாலும், கட்சிக்குள் தனக்கு இருக்கும் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க கூடாது என்று நினைக்கிறார். தென்மாவட்டத்தில் யாராவது தன்னை அழைக்கும் விழாக்களுக்கு போஸ்டர் ஒட்டினால் அதில் அண்ணா, கலைஞர் படங்களை தான் போட வேண்டும். தனது குடும்பத்தினர் படத்தை போடக்கூடாது என்று சமீபத்தில் ஒரு திருமணவிழாவில் அழகிரி சொல்லியிருக்கிறார். அதாவது, இதன் மறைமுக அர்த்தம் ஸ்டாலின் படத்தை போடக்கூடாது என்பது தான்.
கட்சி தேர்தலில் தோற்ற பிறகு ஸ்டாலின் தான் ஒவ்வொரு மாவட்டமாக சென்று சோர்ந்து போயிருக்கும் கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மூழ்கிக் கொண்டிருக்கும் தி.மு.க என்ற கப்பலை காப்பாற்ற ஸ்டாலினால் தான் முடியும் என்ற பேச்சு இப்போது வந்திருக்கிறது. இதனால் கடந்த காலத்தில் ஸ்டாலினை பிடிக்காத அழகிரி ஆதரவாளர்கள் கூட, தற்போது ஸ்டாலினின் பேச்சுக்களை கூர்மையாக கவனித்து வருகின்றனர். தென்மாவட்டங்களிலும் ஸ்டாலினுக்கு ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர். அதே நேரத்தில் தற்போது அழகிரியை நம்ப கட்சியோ, நடுநிலை தி.மு.க தொண்டர்களே தயாராக இல்லை என்பது தான் உண்மை. காரணம், கடந்த காலங்களில் அண்ணன் செய்த பாட்சாக்கள் எல்லாம் இந்த தேர்தலில் பலிக்கவில்லை. இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். அதனால் கட்சிக்கும் அழகிரி அண்ணனின் தயவு இனி பெரிதாக தேவையில்லை என்கிறார்கள் உடன்பிறப்புகளே.
இது போல்தனது இமேஜ் கட்சிக்காரர்களிடம் இறங்கியிருப்பது அழகிரிக்கு புரிந்து விட்டது. இது அவருக்கு கிலியை கிளப்பியுள்ளது. இது தொடர்ந்தால், முன்பு ஒரு நேரத்தில் அழகிரிக்கு கட்சியில் எந்த பொறுப்பும் கொடுக்காமல் டம்மியாக வைக்கப்பட்டிருந்தது போன்ற நிலைமை எப்போதும் வரலாம் என்று நம்புகிறார். இப்படிப்பட்ட ஒரு சூழல் தனக்கு மீண்டும் வந்து விடக்கூடாது. அதற்கு கட்சியில் முக்கியமான பதவியில் இருந்தால் மட்டுமே அ.தி.மு.க அரசு சிக்க வைக்கும் வழக்கில் தப்பிக்க எதிர்க்குரல் கொடுக்க கட்சி என்ற போர்வை இருக்கும். அப்படி இல்லாத நிலையில், ஜெயலலிதாவின் அரசாங்கத்திடம் மாட்டிக் கொண்டு படாத பாடு படவேண்டியிருக்கும்.
அதற்காகவே இப்போது மற்ற எல்லா பிரச்சினைகளையும் விட்டு விட்டு புது ரூட்டில் விளையாட்டை தொடங்கியிருக்கிறார். இப்போது இந்தியாவில் உள்ள உரப்பிரச்சினைகளை பற்றியெல்லாம் அழகிரிக்கு கவலையில்லை. அதைப்பற்றி மன்மோகன்சிங் சிந்திப்தை பற்றியும் கவலையில்லை. இப்போது அழகிரிக்கு முன் உள்ளது மத்திய மந்திரியா அல்லது தி.மு.கவில் பதவியா என்பதே" என்கிறார்கள் தி.மு.கவை பற்றி கவலைப்படும் உடன்பிறப்புகள். அதிகாரத்தையும், அசையும், அசையா சொத்துக்களையும் காப்பாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது .எல்லாம் காலத்தின் கோலம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...