Wednesday, December 27, 2017

சசிகலா_குடும்பத்தினருக்கு___சொந்தமான_12இடங்களில்_மீண்டும்_வருமான_வரி_சோதனை.???

சென்னையில் தாம்பரத்தில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை , சசிகலா உறவினர்களின் வீடுகள்,நிறுவனங்கள் உள்பட
ஆறு இடங்களில் மீண்டும் வருமான வரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதத்தில் ஒரே இடத்தில் கால் டாக்ஸிகளை புக் செய்துக் கொண்டு திருமண கோஷ்டி போல் அந்த கார்களில் மணமகன்- மணமகள் பெயர் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சசிகலாவிற்கு நெருக்கமாக இருக்கும் பலரது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்தினர்.
தமிழகத்தையே உலுக்கிப் போட்ட மிகப்பெரிய வருமான வரி சோதனை என்றால் அது சசிகலா குடும்பத்தில் நடந்த சோதனை தான். ஜெயா டிவி அலுவலகத்தில் தொடங்கிய சோதனையானது, அதன் சிஇஓ விவேக், ஜாஸ் சினிமாஸ் என்று மொத்தம் 190 இடங்களில் சோதனை நடந்தது. ஒரே நேரத்தில்
சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரி மன்னார்குடி வீடு
கணவர் நடராஜனின் தஞ்சாவூர் வீடு, டாக்டர் சிவக்குமார் வீடு, கிருஷ்ணப்ரியாவின் தி.நகர் வீடு விவேக்கின் மாமனார் பாஸ்கரன் வீடு என்று வருமான வரி அதிகாரிகளின் லென்ஸ் பார்வை விரிந்தது. இதோடு சசிகலா, தினகரனுக்கு ஜோதிடம் பார்த்த கடலூர் ஜோதிடர் வீடு, புதுச்சேரி லட்சுமி ஜூவல்லரி என்று வருமான வரி சோதனை அனல் பறந்தது.
மற்ற எல்லா இடங்களிலும் சோதனை முடிந்தாலும் ஜெயா டிவி, விவேக் வீடு, கிருஷ்ணப்ரியா வீட்டில் மட்டும் 3 நாட்களைக் கடந்து சோதனை நடந்தது. ஒரு வழியாக கடைசியாக விவேக் வீட்டில் இருந்தும் வெளியேறிய அதிகாரிகள் விவேக்கையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கிருஷ்ணப்ரியா, விவேக் உள்ளிட்ட 300 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து அவர்களும் வருமான வரி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர்.
இந்த வருமான வரி சோதனையின் போது தினகரனின் சென்னை வீட்டில் சோதனை நடைபெறவில்லை மாறாக அவரது பண்ணை வீட்டில் மட்டும் வருமான வரி சோதனை நடந்தது.
போயஸ் கார்டனில் சசிகலா தங்கியிருந்த 4 அறைகளிலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தங்கியிருந்த ஒரு அறையிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி அங்கிருந்து ஒரு சிறிய வேன் அளவுக்கான பொருட்களையும், பென் டிரைவ், லேப்டாப்புகளையும் கொண்டு சென்றனர்.சசிகலா அறையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, மூட்டை மூட்டையாக கடிதங்களை அள்ளிச் சென்றனர்.
இதில் கணக்கில் வராத ரூ.1,700 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அங்கிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள்,நகைகள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சோதனை செய்த போது அவை பினாமி பெயர்களில் இருப்பதாகவும் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்த போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
அதன் அடிப்படையில் இன்று சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தாம்பரம் படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, ஸ்ரீ சாய் நிறுவனம், ஸ்ரீ சாய் கார்டன், இளவரசியின் மருமகனுக்கு சொந்தமான சென்னை அடையாறில் உள்ள கார்த்திகேயனின் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை 2-ஆவது முறையாக நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு இடத்திலும் சுமார் 10 அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனை சென்னை மட்டுமல்லாது கோயம்புத்தூர்- பொள்ளாச்சி சாலை மயிலேறிபாளையம் பிரிவில் உள்ள தனியார் கல்லூரியிலும், கோவை தனியார் கல்லூரியின் தாளாளரான தஞ்சாவூரை சேர்ந்த ராகவேந்திரனின் வீட்டிலும் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களில் அதிகாரிகளுக்கு ஏற்பட்டு இருக்கும் சந்தேகங்களை தீர்க்க மீண்டும் இந்த புதிய சோதனை தொடங்கி இருக்கிறது.
இந்த சோதனை நாளையும் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...