Sunday, December 31, 2017

ஜெ., ஆட்சியிலேயே முதல்வர் பதவிக்காக சதி ;தினகரன் மீது பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

ஊட்டி;''கடந்த, 2008ல், ஜெயலலிதா வகித்த முதல்வர் பதவியை தட்டிப்பறிக்க, சதி திட்டம் தீட்டியவர் தினகரன்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில், நேற்று நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:என்னையும், முதல்வரையும், தினகரன், துரோகிகள் எனக் கூறி வருகிறார். அவர் தான், என்னை அரசியலில் அறிமுகப்படுத்தியதாக கூறுகிறார். நான், 20 ஆண்டுகளுக்கு முன்பே, கட்சியில் இணைந்து, கிளை செயலர் பதவி துவங்கி, படிப்படியாக முன்னேறினேன். ஜெயலலிதாவால், மூன்று முறை முதல்வர் பதவி வகித்தேன்.நான் கட்சிக்கு வந்த போது, எனக்கு வயது, 19; தினகரன் எல்.கே.ஜி., மாணவர். 2008ல், தினகரனை, ஜெயலலிதா ஒதுக்கி வைத்து, கட்சி விவகாரத்தில் தலையிடக் கூடாது என, கூறினார். காரணம், அப்போதே அவர், முதல்வர் பதவியை பெற சதி திட்டம் தீட்டினார்.எம்.ஜி.ஆர்., வாரிசு அரசியலை ஊக்குவிக்கவில்லை. அவரது சகோதரர், அ.தி.மு.க.,வை வளர்க்க அரும்பாடு பட்ட போதிலும், அவருக்கு கட்சிப் பதவியை, எம்.ஜி.ஆர்., வழங்கவில்லை. அதே போன்றுதான், ஜெயலலிதாவும், குடும்ப அரசியலை அனுமதிக்கவில்லை.அந்த அடிப்படையில், எந்தவொரு குடும்பமும், அ.தி.மு.க.,வை கைப்பற்ற முடியாது; கட்சியை கைப்பற்ற துடிப்போருக்கு தலையாட்டிகளாக செயல்படுவோரை, இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவோம்.ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், சற்று அசந்தோம்; அவர்கள் வெற்றி பெற்றார்கள். இனி, அதுபோன்ற நிலை வராது; விழிப்புடன் இருப்போம். சதி திட்டம், சில நேரங்களில் மட்டுமே வெல்லும்; நிரந்தரமாக வெல்லாது. இவ்வாறு, பன்னீர்செல்வம் பேசினார்.குட்டி கதை சொல்லி 'குட்டு'துணை முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., அரசை குறை சொல்பவர்களுக்காக கூறிய குட்டிக்கதை:ஒரு வீட்டுக்கு, புதுமண தம்பதிகள் குடியேறினர். அப்பெண், தினசரி காலை, தனது வீட்டின் ஜன்னல் வழியாக பார்க்கும்போது, எதிர் வீட்டில் இருக்கும் பெண், துணி உலர்த்துவதை பார்ப்பார். 'அந்த பெண் துணியை சரியாக துவைப்பதில்லை; அழுக்கு போவதே இல்லை' என, கணவரிடம் தினசரி கூறுவதை, புதுமணப்பெண் வழக்கமாகவே கொண்டிருந்தார்.ஒரு நாள், அந்த பெண், 'இன்றைக்கு தான், எதிர் வீட்டு பெண் துணியை நன்றாக துவைத்துள்ளார்; அவர் உலர்த்தும் துணிகள், 'பளிச்' என தெரிகிறது' என்றார்.அந்த பெண்ணின் கணவர்,''இத்தனை நாளாக அழுக்குப் படிந்திருந்த நம் வீட்டு ஜன்னல் கண்ணாடியை, இன்று தான் சுத்தம் செய்தேன்,'' என, மிக இயல்பாக கூறினார்.ஆக, அழுக்குப்படிந்த கருப்புக் கண்ணாடியை அணிந்துக் கொண்டு, அ.தி.மு.க., ஆட்சியை பார்ப்பவர்கள் குறை சொல்ல தான் செய்வார்கள்.இவ்வாறு, பன்னீர்செல்வம் கூறினார்.'அம்மா ஏமாளி!'பன்னீர்செல்வம் பேசுகையில், ''தினகரன், கோடி, கோடியாக பணம், சொத்துகளை சம்பாதித்து வைத்துள்ளார்; அதில் நாங்கள் பங்கு கேட்கவில்லை. குடும்ப அரசியல் கூடாது என்று தான் கூறி வருகிறோம். ஜெயலலிதாவுக்கு, துரோகம் விளைவிக்க முயன்றதால் தான், தினகரன் குடும்பத்தைச் சேர்ந்த, 16 பேரை, ஜெயலலிதா கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைத்திருந்தார். அதில், சிறையில் இருக்கும் சசிகலா மட்டும், மன்னிப்புக் கடிதம் கொடுத்ததால், கட்சியில், ஜெயலலிதா சேர்த்து கொண்டார்,'' என்றார். தொண்டர்கள் இடைமறித்து, 'அம்மா ஏமாந்து விட்டார்; அவரை கட்சியில் சேர்த்திருக்கக் கூடாது' என, கூச்சலிட்டனர். அதை கேட்ட பன்னீர்செல்வம், ''ஆம், அம்மா ஏமாளி; என்ன செய்ய?'' என தொண்டர்களின் குமுறலை ஆமோதித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...