Thursday, July 7, 2022

பன்னீர்செல்வம் மனு மீதான உத்தரவு இன்று!

 அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி, பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது. 'பொதுக்குழு விவகாரத்தில், இதற்கு முன் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது? அழைப்பு அனுப்புவது யார்? அதில் யார் கையெழுத்திடுவார்?' என, அடுக்கடுக்கான கேள்விகளை, நீதிமன்றம்

எழுப்பியுள்ளதால், பழனிசாமி தரப்பினர், 'திக்திக்' மனநிலையில் உள்ளனர்.

சென்னையில், வரும் 11ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது.


சட்ட விரோதம்



பொதுக்குழுவுக்கு வரும்படி எனக்கும், மற்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்து, சட்டவிரோதமாக 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார். தலைமை நிலைய செயலர் என்ற முறையில், பழனிசாமி அனுப்பிய நோட்டீஸ் சட்டவிரோதமானது.என் அனுமதியின்றி, வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நடந்தால், கட்சியின் அடிப்படையை தகர்க்கும் வகையில், ஜனநாயகத்துக்கு எதிரான திருத்தங்கள் வரும். அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியாது.

எனவே, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.அதேபோல் பொதுக்குழுவுக்கு தடை கோரி, பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும், மனுத்தாக்கல் செய்தார்.மனுக்கள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுக்குழுவை கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக, பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.


மனுத்தாக்கல்



இதையடுத்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடியதாவது:பொதுக்குழுவை சட்டப்படி நடத்தலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சி சட்ட திட்டத்தின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே, பொதுக்குழுவை கூட்ட முடியும்.


தலைமை கழக நிர்வாகிகள் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், யார் கையெழுத்தும் இல்லை.ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் என்பதால், 2026 வரை உள்ளது. அதனால், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக கூற முடியாது. போட்டியின்றி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டு, அறிவிப்பும் வெளியிடப்பட்டு விட்டது.
கடந்த 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததால், அவர்களால் செயல்பட முடியாது எனக் கூற முடியாது. உச்ச நீதிமன்றத்தில், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டே, பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.


உரிமை பாதிப்பு



சட்ட விதிகளை மீறி, பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடியாது. அவ்வாறு கூட்ட அனுமதித்தால், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், மனுதாரரின் உரிமை பாதிக்கப்படும்; கட்சியின் அடிப்படை கட்டுமானத்தில் மாற்றம் ஏற்படும். எனவே, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதாடினார்.

பழனிசாமி தரப்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடியதாவது:பொதுக்குழுவை நடத்தலாம் என, உச்ச நீதிமன்றம் அனுமதித்த பின், அதற்கு தடை விதிக்க, உயர் நீதிமன்றத்தை கோருவது நியாயமற்றது. உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், பொதுக்குழுவில் சுதந்திரமாக விவாதித்து முடிவெடுக்கலாம் என்பது தான் அர்த்தம்.
தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கும் வரை, இடைக்காலமாக பொதுச் செயலரை தேர்ந்தெடுக்க, பொதுக்குழுவில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும்போது, மனுதாரரும் போட்டியிடலாம். பொதுக்குழு உறுப்பினர்களில், 2,190 பேர், பொதுக்குழுவை கூட்டும்படி கோரியுள்ளனர்.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம்; அதை தடுக்க முடியாது. இந்த வழக்கில், விரிவான பதில் மனுத் தாக்கல் செய்கிறோம்.இவ்வாறு அவர் வாதாடினார்.


விசாரணை



பழனிசாமி தரப்பில் ஆஜரான, மற்றொரு வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், ''இந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல; வழக்கை தாக்கல் செய்தவரே, பிரதிவாதியாகவும் தன்னை சேர்த்துள்ளார். அது எப்படி சரியாகும்?'' எனக் கேட்டார்.


இருதரப்பு வாதங்களுக்கு பின், 'பொதுக்குழு கூட்டத்துக்கு, இதற்கு முன் பின்பற்றப்படும் நடைமுறை என்ன? பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்புவது யார்? அதில், யார் கையெழுத்து இருக்கும்? 'பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா?' என, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கேள்வி எழுப்பினார்.இந்த கேள்விகளுக்கு, விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய, பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இன்றைக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

பன்னீர்செல்வம் மனு , உத்தரவு  இன்று!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...