'வணிகர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, கடைகளில் அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில், வியாபாரி களுக்கு மட்டும் தான் அச்சுறுத்தல் உள்ளதா... மற்றபடி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு நடமாடுகின்றனரா என்ன? ஆபத்து எந்த நேரத்தில், எப்படி வருமோ என்ற பீதியில், உயிரை கைகளில் கெட்டியாக பிடித்தபடியே தான் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். செயின் பறிப்பும், பாலியல் கொடுமையும், வழிப்பறியும், திருட்டும், கொலையும், கொள்ளையும் நடைபெறாத நாட்கள் உண்டா?
இப்படிப்பட்ட சூழலில், வியாபாரிகள் மட்டும், தங்கள் பாதுகாப்புக்கு அரிவாள் போன்ற ஆயுதம் வைத்துக் கொள்ள அரசிடம் அனுமதி கேட்டால், பொது மக்களாகிய நாங்கள், யாரிடம் சென்று என்ன பாதுகாப்பு கேட்பது?வணிகர்கள் மகாஜன சங்கத்தின் கோரிக்கையை தொடர்ந்து, நமக்கும் ஒரு யோசனை தோன்றுகிறது... அதாவது, மன்னர் ஆட்சிக் காலத்தில் படை வீரர்கள், இடையில் ஒரு உடைவாளை தொங்கவிட்டபடி நடமாடியது போல, தமிழக மக்கள் ஒவ்வொருவரும், ஆளுக்கு ஒரு உடைவாளை இடுப்பில் கட்டிக் கொண்டு நடமாடத் துவங்கலாமா?
இந்த உடைவாள், 'கான்செப்டு'க்கு மகளிர் அணியினரும் விதிவிலக்கல்ல.ஜான்சிராணி, வேலு நாச்சியார் போல, மகளிரும் புடவைக்கு மேலோ, சுடிதாருக்கு மேலோ ஒரு உடைவாளை இடுப்பை சுற்றி ஒட்டியாணம் மாதிரி கட்டிக் கொண்டு நடமாட வேண்டியது தான்.
அப்போது, வணிகர்களுக்கு அரிவாள் எல்லாம் சரிப்படாது; கடோத்கஜன், பீமன், துரியோதனன் போன்று, ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் தோள்களில் ஒரு கதாயுதத்தை துாக்கிக் கொண்டு நடந்தபடியே, வணிகத்தை கவனித்தால் பொருத்தமாக இருக்கும்.
இப்படியெல்லாம் நடக்கும் என்று உத்தேசித்து தான், எம்.ஜி.ஆர்., 30ஆண்டுகளுக்கு முன்னரே, 'மக்கள் தங்கள் பாதுகாப்புக்கு ஆளுக்கொரு கத்தி வைத்துக் கொள்ளுங்கள்' என்று தீர்க்க தரிசனமாக சொன்னார்.

No comments:
Post a Comment