தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடைபெற்ற, பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய அமித் ஷா, 'விரைவில் தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமையும்' என்று கூறியது,100சதவீதம் சரியே!
2021 சட்டசபை தேர்தலின் போது, 'மலையை மடுவாக்குவேன்; மணலை கயிராக்குவேன்' என்று அள்ளி விட்டு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், தற்போது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார். 'நீட்' தேர்வு ரத்து, மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது போன்ற வாக்குறுதிகள், அவரின் அரசால் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அதனால், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், 'மண் குதிரையை நம்பி மோசம் போய் விட்டோமே' என்று, தற்போது புலம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
'அரசு ஊழியர்கள் இல்லை என்றால், அரசே இல்லை' என்ற மாயாஜால வார்த்தைகள் பேசிய ஸ்டாலின், இன்று அவர்களின் தலையில் மசாலா அரைத்து விட்டார். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்றார். ஆனால், வேலைவாய்ப்பின்றி தவிப்போர் எண்ணிக்கை தான் பெருகிக் கொண்டிருக்கிறது.
ராணுவத்தின் முப்படை களுக்கும், நான்கு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், ஆண்டுதோறும், 50 முதல் 60ஆயிரம் வீரர்களை தேர்வு செய்யும், மத்திய அரசின், 'அக்னிபத்' திட்டத்தை சரியல்ல என்று விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழக கல்வித் துறைக்கு, தற்காலிக அடிப்படையில், 13 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முற்பட்டிருப்பது ஏன்... அது மட்டும் தவறில்லையா?இதனால், நிரந்தர ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த, பல ஆயிரம் பேர் வாழ்விலும் மண்ணை போட்டு விட்டார்.
'ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு' என்ற கோஷத்தை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு, விடியலை அல்ல, வீழ்ச்சியை தந்துள்ளார். இதே நிலை நீடித்தால், அடுத்து வரும் சட்டசபை தேர்தல் அல்லது அதற்கு முன் வரும் லோக்சபா தேர்தலிலேயே, தி.மு.க., மண்ணை கவ்வும் என்பதில் மாற்றமே இல்லை. அதனால், தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி என்ற அமித் ஷாவின் வாக்கு நிச்சயம் பலிக்கும்.
No comments:
Post a Comment