அ.தி.மு.க.,வில் ஏற்பட்டு உள்ள குழப்பத்திற்கு காரணங்களை கூறும், தமிழ் இலக்கியவாதி, மூத்த அரசியல்வாதி, பட்டி மன்ற பேச்சாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட பழ.கருப்பையா: அ.தி.மு.க.,வில் இரட்டை தலைமை நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது. எப்போது 'கோட்டா சிஸ்டம்' வந்து, உனக்கு 1, எனக்கு 1 என்று ராஜ்யசபா சீட்டை பிரித்துக் கொண்டனரோ, அப்போதே, கேடும் தோன்றி விட்டது.
கட்சியின் பார்லிமென்ட் உறுப்பினரா வதற்கு திறமை, அடிப்படை அனுபவம் வேண்டும் என்பதை விட பன்னீர்செல்வத்துக்கோ, பழனிசாமிக்கோ அடிமையாக இருந்தால் மட்டும் போதும் என்றாகி விட்டது. கட்சியின் பிளவுக்கும் அது தான் காரணம்.தமிழகத்தில் கடந்த, 50 ஆண்டுகளாக தி.மு.க.,வோ அல்லது அ.தி.மு.க.,வோ தான் ஆட்சியில் இருக்கின்றன. இப்போது, பா.ஜ., மூலம் அதற்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கொஞ்சம் ஆட்டி வருகிறார்; மத்தியிலும், பா.ஜ., ஆட்சி உள்ளதால் தமிழகத்திலும் அதற்கான வழிமுறைகளை தேடி வருகிறார்.அடுத்து, நம் ஆட்சி தான் என்ற கனவில் இருந்த அ.தி.மு.க., வினரால், பா.ஜ.,வின் முன்னெடுப்புகளை ஜீரணிக்க முடியவில்லை; அவர்களுக்கு பயம் வந்து விட்டது. அதன் வெளிப்பாடே ஒற்றை தலைமை முழக்கம்.
பன்னீர்செல்வம் இரண்டு தவறுகளை செய்து விட்டார்... ஒன்று, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என பிரச்னையை கிளப்பி, கமிஷன் போட வைத்து, பல மாதங்களாக அந்த கமிஷனில் ஆஜராகாமல் பின்வாங்கினார். பின், 'சசிகலா நிரபராதி... அவருக்காகத் தான் அப்படி நான் சொன்னேன்' என்று 'பல்டி' அடித்தது. இரண்டாவது, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அவரின் மகனை அனுப்பி வைத்தது.கேட்டால், என்னென்னவோ காரணங்களை சொல்கிறார்.
ஒருவேளை, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், பன்னீர்செல்வம் இப்படியெல்லாம் செய்திருப்பாரா என்ற கேள்வி எழுகிறது. இப்படி அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள போட்ட வேலி, அவருக்கே எதிராக அமைந்து விட்டது. அதனால் தான், அவரால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.அதே சமயம், பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
பணத்தை வைத்து, நிர்வாகிகளை விலைக்கு வாங்குகிறார்; அதனால் அவர் பக்கம் பெரும்பாலான நிர்வாகிகள் உள்ளனர்.சசிகலாவுக்கும், நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்ள அவர் தவறி விட்டார்.
'திராவிட மாடல்' ஆட்சி என்பதே மாயை. முந்தைய திராவிடத்தில் பல கொள்கைகள் இருந்தன; அதை அவர்கள் துாக்கிப்பிடித்தனர். எதையாவது சொல்லி, மக்களை ஈர்க்க வேண்டும். அதற்காகவே, திராவிடத்தை உரக்கச் சொல்கின்றனர். வெற்றுப்பானைக்கு திராவிட மாடல் என்று பெயர் வைத்துள்ளனர். அவ்வளவு தான்!
No comments:
Post a Comment