ஒரு சிற்றூரில் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் இருவர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் திருமணமானவர், மற்றவரோ திருமணமாகாதவர். இரண்டு பேரும் சேர்ந்தே தந்தைவழி வந்த நிலத்தை பயிரிட்டு, அதிலிருந்து கிடைத்த இலாபத்தை சமமாகப் பங்கிட்டு வந்தார்கள்.
ஒருநாள் திருமணமான சகோதரருக்கு திடிரென்று ஒரு யோசனை வந்தது. ‘நாம்தான் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளோடு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டோமே, நமக்கு எதற்கு நிலத்திலிருந்து வருகின்ற விளைச்சலில் பாதி?, இந்தப் பாதியில் கொஞ்சம் திருமணமாகாமலும் வாழ்க்கையில் செட்டிலாகாமலும் இருக்கின்ற நம்முடைய தம்பிக்குக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்பதே அந்த யோசனை. உடனே அவன் தன்னுடைய களஞ்சியத்தில் சேர்த்து வைத்திருந்த தானிய மூட்டைகளைக் கொஞ்சம் இரவோடு இரவாக தூக்கிக்கொண்டு போய், தன்னுடைய தம்பியின் தானியக் களஞ்சியத்தில் போட்டுவிட்டு வந்தான்.
அண்ணனைப் போன்றே தம்பிக்கும் ஒரு யோசனை வந்தது. ‘நாம்தான் திருமணமாகாத ஒண்டிக்கட்டை அல்லவா!. நமக்கு எதற்கு நிலத்தின் விளைச்சலிலிருந்து பாதி? இந்தப் பாதியில் கொஞ்சம் குடும்பம் குழந்தைகளோடு இருக்கின்ற நம்முடைய அண்ணனுக்குக் கொடுப்பதே சரியானது’ என்பதுதான் அந்த யோசனை. உடனே அவன் தன்னுடைய தானியக் களஞ்சியத்திலிருந்து தானிய மூட்டைகளைக் கொஞ்சம் தூக்கிக்கொண்டு போய் அண்ணனின் தானியக் களஞ்சியத்தில் இரவோடு இரவாகப் போட்டுவிட்டு வந்தான். இப்படி ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல், ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுக்கு உரிய தானிய மூட்டைகளைத் தூக்கிக்கொண்டுபோய் தனது சகோதரரின் தானியக் களஞ்சியத்தில் போட்டுவிட்டு வந்தார்கள். இதனால் யாருடைய தானியக் களஞ்சியத்திலும் தானிய மூட்டைகள் குறைந்தது போன்று இல்லை.
இது சகோதரர்கள் இருவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. என்னடா! நாமோ நம்முடைய தானியக் களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் தானிய மூட்டைகளை எடுத்துக்கொண்டு போய் நம் சகோதரரின் தானியக் களஞ்சியத்தில் போட்டுவிட்டு வருகின்றோம். அப்படியிருந்தும் தானிய மூட்டைகள் குறைந்தது மாதிரி இல்லையே என்று யோசித்தார்கள். இருந்தாலும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து தானிய மூட்டைகளை தன்னுடைய சகோதரரின் களஞ்சியத்தில் போடுவதாய் இருந்தார்கள்.
இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருக்க, சகோதரர்கள் இருவரும் ஒருநாள் இரவில் தங்களுடைய தானியக் களஞ்சியத்திலிருந்து தானிய மூட்டைகளை தூக்கிக்கொண்டுபோய் மற்றவருடைய தானிய களஞ்சியத்தில் போட விரைந்தார்கள். அவ்வாறு அவர்கள் தானிய மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு விரையும்போது இருட்டினில் ஒன்றுமே தெரியாமல் ஒருவர்மீது ஒருவர் மோதிக்கொண்டார்கள். அவர்கள் மோதிய பின்னே அவர்களுக்குத் தெரிந்தது இத்தனை நாளும் என்ன நடந்தது என்று. உடனே அவர்கள் இருவரும் கட்டியணைத்துக் கொண்டு, ஒருவர்மீது ஒருவருக்கு இருக்கும் தங்களுடைய அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள்.
இது நடந்து பல ஆண்டுகள் கழித்து, அந்த ஊர் மக்கள் தங்களுடைய ஊரில் புதிதாகக் கோவில் கட்டுவதற்கு எந்த இடம் சரியான இடம் என்று தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ ஒருவர், முன்பொரு நாள் இரவில் சகோதரர்கள் இருவர் அன்பொழுக சந்தித்துக் கொண்ட அந்த இடமே கோவில் கட்டுவதற்குச் சரியான இடம் என்று முன்மொழிய அதனை எல்லோரும் அமோதித்தார்கள். ஆமாம், அன்பு பொங்கி வழியும் இடத்தில்தானே ஆண்டவன் குடிகொள்வான்.
No comments:
Post a Comment