Saturday, July 22, 2023

போலி டாக்டர் பட்டம்.. மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி சென்னையைச் சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில், இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, ஈரோடு மகேஷ் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். ஆனால் தனியார் அமைப்பு டாக்டர் பட்டம் வழங்கியதும், பல்கலைக்கழகம் இடத்தை ஒதுக்கியதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் தனது கையெழுத்து தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறி, நீதிபதி வள்ளிநாயகம் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அந்த அமைப்பின் இயக்குனர் ராஜூ ஹரிஷ், மகாராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலி ஆவணங்களை காட்டி நிகழ்ச்சி நடத்த முறைகேடாக அனுமதி பெற்றதாக பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி மகாராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தினால் அது காவல்துறையின் விசாரணையில் தலையிடும் வகையில் மாறிவிடும் என்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதேசமயம் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், 3 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...