Tuesday, July 18, 2023

ஆடிமாதம் என்பது எல்லா இந்துக்களுக்கும் புனிதமானதோ அப்படி கேரள இந்துக்களுக்கும் மிக மிக புனிதமானது.

 இந்துஸ்தானத்தில் கடைசி வரை சுல்தான்களால் ஆளபடாத ஒரே மாகாணம் கேரளம், பிரிட்டிசார் காலத்திலும் தனித்து நின்று இந்துமதம் காத்தார்கள்

இந்துமதம் எனும் ஒன்றை காக்க மிகபெரிய சவாலை எடுத்து நின்றவர்கள் அவர்கள்தான், அவர்களின் இயற்கையான மலை அமைப்பும் அவர்களுக்கே உரிய போர்கலைகளும் எந்த ஆப்கானிய கொம்பனாலும் அங்கே புகமுடியா அளவு இருந்தது
மொகலாயரின் கட்டுபாட்டில் கூட கேரளம் வரவில்லை தனித்தே நின்றது
பின்னாளில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கூட மலையாள மன்னர்கள் இந்தியாவோடு இணைய விருப்பம் காட்டவில்லை "இந்துஸ்தானம் என சொல்லாத,இந்து தேசம் என சொல்லாத இந்த காங்கிரஸின் இந்தியா இந்துமதத்தை வாழவிடாது, அப்படியான தேசத்தோடு நாங்கள் இணையமாட்டோம்" என தனித்தே நின்றார்கள்
பட்டேல்தான் அவர்களை சமாதானபடுத்தி இந்தியாவோடு சேர்த்தார்
இந்த கம்யூனிச குழப்பம் இதர குழப்பமெல்லாம் பின்னாளில் வந்ததே, ஒருவேளை அந்த திருவாங்கூ மன்னர் சொன்னபடி இந்தியாவோடு சேராமல் மன்னராட்சி நீடித்திருந்தால் இவை எல்லாம் முளைவிடாமலே போயிருக்கலாம்
எனினும் இன்று இந்துமதம் மிக ஆச்சாரமாக , மிக சரியாக கடைபிடிக்கபடும் மாகாணம் கேரளம், பரசுராமனின் பூமி அதை சரியாக செய்துகொண்டிருக்கின்றது
அவ்வகையில் இந்த ஆடிமாதத்தில் அங்கே ஒரு வழிபாடு உண்டு, அதன் தொடக்கமும் ஏற்பாடும் ஆன்மீகம், சமூகம் என இரண்டும் கடந்தது
ஆடி மாதம் கேரளாவில் ராமபிரான் வழிபாடு விஷேஷம், எல்லா இந்துக்களும் ராமாயணம் படிப்பார்கள்
இதன் ஏற்பாடு எப்படி தோன்றிற்று?
ராமபிரான் கடகராசியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர், புனர்பூச நட்சத்திரம் என்பது மூன்று பாகங்களை மிதுன ராசியிலும் ஒரு பாகத்தை கடக ராசியிலும் கொண்டது
அவ்வகையில் ராமபிரான் கடகராசியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்
மலையாள தேசத்தில் சூரியன் கடக ராசிக்கு வரும் இந்த மாதம் கற்கடகம் என அழைக்கபடும் மாதம், அதனால் அவர்கள் இந்த மாதத்தை அதாவது புனர்பூச நட்சத்திரத்திற்குரிய மாதத்தில் ராமபிரானை கொண்டாடுவார்கள்
இது தேசம் முழுக்க இருந்த நடைமுறைதான், ஒரு காலத்தில் ஆடி வழிபாடு ராமபிரானுக்காக இருந்திருக்கின்றது பின்னாளில் அந்நிய படையெடுப்பிலும் ஆட்சியிலும் ராமபிரான் ஆலயமே இல்லா கொடும் நிலையில் எல்லாமே மாறிற்று
அதற்கு முன் பவுத்தம் குழப்பிபோட்டிருந்தது
பவுத்தமும் ஆப்கானிய ஆட்சியும் எட்டிபார்க்காத கேரளம் தன் தொன்மையினை பாதுகாத்து வருகின்றது, அவ்வகையில் இம்மாதம் அவர்களுக்கு ராமாயண மாதம்
இந்த ராமாயணம் படிப்பதில் ஒரு சமூக நோக்கமும் இருந்தது
பொதுவாக ஆடிமாதம் கேரளாவில் கனமழை கொட்டும் மாதம், ஏழை எளிய மக்கள் வேலைகள் இன்றி வெளியே செல்லமுடியாமல் தவிக்கும் மாதம்
அதனால் அந்த மழைகாலத்தில் கஞ்சியோ, கூழோ இல்லை அறுசுவை உணவோ கேரள ஆலயங்களில் மன்னர் அரண்மனைகளில் , பெரும் பணக்காரர் மாளிகையான "தரவாட்டு" வீடுகளிலோ மக்களுக்கு கொடுப்பார்கள்
அந்நேரம் அவர்கள் இறைசிந்தனையில் இருக்கவேண்டும் என்பதற்காக , அந்த நேரத்தில் ராமாயணம் படிப்பார்கள்
இப்படி சமூக கண்ணோட்டமும் இருந்தது
ஜாதகரீதியாக ராமபிரானின் கடக‌ ராசியில் சூரியன் வரும் மாதத்தில் மிக சரியாக ராமாயணம் படிக்கும் வழக்கம் இப்படி உருவாயிற்று
புணர்பூசம் என்றால் புணர் வ்சு என்பார்கள், அதாவது மறுபடி மறுபடி வருவது மீண்டு வருவது என அதற்கு பொருள்
புணர்பூச நட்சத்திரத்தின் இயல்பு அது
அப்படி ராமபிரான் எத்தனையோ இடர்களை தாண்டி மறுபடி மறுபடி எழுந்து தர்மம் காத்தார், மக்களை வாழவைத்தார், இந்த பெரிய மழைக்காலமும் மாறும் என நம்பிக்கை ஊட்டிய நிகழ்வு அது
ஆடிமாதம் முழுக்க அங்கு ராமாயணம் பாடபடும், அது தொடங்கிவிட்டது
இதனாலே கம்பராமாயணம் எழுதிய கம்பன் தன் அந்திம காலங்களில் சேரநாட்டின் சரணடைந்தான், ராமபிரானை கொண்டாடும் தேசத்தில் ராமனுக்கு அழியா காவியம் படைத்த அந்த மகாகவி சரணடைந்தான்
அவனும் தன் அந்திம காலங்களில் ஆடி மாதம் கேரளாவில் தன் கம்பராமாயணத்தை பாடினான், பத்மநாதபுரம் சரஸ்வதி கோவில் இருக்கும் தேவாரகட்டு ஆலயத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து கம்பீரமாக பெருமையாக பாடினான்
ராமாயணம் என்பது வெறும் புராணம் அல்ல, அது கட்டுகதை அல்ல, அது எங்கோ என்றோ நடந்துமுடிந்த வரலாறு அல்ல, அது ஒரு அபூர்வ வரபிரசாத தத்துவம்
ராமாயணம் ஒரு மனிதனுக்கு நம்பிக்கை கொடுக்கும், ராமாயணம் ஒரு மனிதனை மனிதனாக்கும் அது வாழ்வின் எல்லா பக்கங்களையும் போதிக்கும்
குடும்பம்,சமூகம்,ஆட்சி நீதி,குடிகள், வீரர்கள், பக்தர்கள் என எல்லோருக்கும் அது அவரவர்க்கு தேவையான நீதிகளை தத்துவங்களை சொன்னது
ஆடிமாதம் என்பது எல்லாமே பெருகும் மாதம், வெள்ளம் மட்டுமல்ல மானிட உணர்ச்சிகளும் ஒருமாதிரி மாறும் காலம்
வானியல் கோள்களின் சஞ்சாரம் அதை செய்யும், இதனால் ஆடிமாதம் வழிபாடுகளை செய்வது, ஞான நூல்களை படிப்பது மனதிற்கு நல்ல ஆறுதலை தரும், மனம் சாந்த்தியாகும்
மனம் இக்காலகட்டத்தில் நல்வழிபடவும், உணர்ச்சிகள் கட்டுக்குள் வரவும், ஒவ்வொருவரும் தனக்கு தேவையான விஷயத்தை ராமபிரானின் வாழ்வில் இருந்து பெற்றுகொள்ளவும் ராமாயணம் படிக்க சொன்னார்கள்
ஒரு காலத்தில் இந்துஸ்தானம் முழுக்க இருந்த வழமை இது, ஆனால் பின்னாளில் ஆட்சியில் அந்நியரும் அவர்கள் கலாச்சாரமும் வந்ததால் மாறிற்று
ராமனுக்கு இப்போது ஆலயம் திரும்பும் நேரம், ஒவ்வொரு இந்துவும் அதனை மீட்டெடுத்தல் அவசியம்
ராமனுக்கும் தமிழர்களுக்கும் நிரம்ப தொடர்பு உண்டு, ராமன் காலடிபட்ட மண் இது, ராமநாதபுரம் என அவன் வந்த இடத்தை அடையாளபடுத்தி வணங்கும் மண் இது
ராமேஸ்வரம் என ராமனின் பெருவெற்றியினை சொல்லும் மண் இது
இங்கு ராமநாமம் மறுபடி எழுதல் அவசியம், கேரளாவின் அந்த ஞானமரபு இங்கும் மறுபடி தொடங்கபடுதலும் அவசியம்
ஆடிமாதத்தில் எல்லா விழாவும் கொண்டாட்டமும் நடக்கட்டும், அப்படியே ராமாயணம் ஒலிப்பதும் அதன் ஆழ்ந்த தத்துவங்களில் மூழ்கி முத்தெடுப்பதும் நடக்கட்டும்
ராமாயணாம் இங்கே கம்பனால் மிக அருமையாக நமக்கு தரபட்டுள்ளது, அவனை விட ஒரு கவிஞன் அவ்வளவு உருக்கமாக பாடமுடியாது
தமிழ் ராமனுக்கு கொடுத்த மிகபெரும் கொடை ராமாயணம், தமிழகம்தான் அதை கொடுத்தது
அந்த ராமாயணத்தை இந்த மாதம் முழுக்க ஓதுவோம்
ஆலயங்களில் ஓதுவோம், கூட்டமாய் கூடி சத்சங்கங்களில் பாடுவோம், வீடுகள் தோறும் காலையும் மாலையும் அந்த பரந்தாமனை வழிபடுவோம்
ஆம், ராமபிரான் புணர்பூச நட்சத்திரம் அது மறுபடி மறுபடி இழந்ததை எல்லாம் போராடி பெரும் அம்சம் கொண்டது
அப்படி ராமன் எத்தனை காலமானாலும் இங்கே தன்னை மீட்டெடுத்து நிலைப்பார், பவுதத காலம் தாண்டி எழுந்தார், இப்போது மொகலாய காலம் தாண்டி அயோத்தியில் எழுகின்றார்
அந்த கருணாமூர்த்தி ஒவ்வொரு தமிழக இந்து வீட்டிலும் மறுபடி எழவேண்டும், தமிழகம் தன் ஞானமரபை மறுபடி மீட்டெடுக்க வேண்டும்
இங்கு மாற்றம் வேண்டுமெனில் பெரும் கட்சியோ, போராட்டமோ, அமர்களவோ எதுவும் செய்யவேண்டாம், வீணாக போராடி திரிய வேண்டாம்
மாற்றம் இந்த வாழ்வியலில் வரவேண்டும் எதெல்லாம் இழந்தோமோ அதை எல்லாம் நம்மில் நாம் மீட்டெடுக்க வேண்டும், தீபமில்லாமல் பரணில் கிடக்கும் பழைய விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபமிட வேண்டும்
அதுபோதும், அப்போது எல்லா இருளும் அகலும்
அதை செய்வோம், அதை சரியாக செய்வோம், ராமபிரான் அருளில் எல்லாமும் நலமாகும்
இந்தியா என்பது இந்துமதம் ஒன்றால் இணைந்த பூமி, அப்படி இணைக்கும் பிரிகளில் ராமபிரான் முக்கியமானவர்
தேசத்தின் காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரை , கங்கை கரைமுதல் காவேரிகரை வரை இணைப்பது ராமபிரானின் நாமும் அவர் பெருமையுமே
இந்துவாய் இந்துஸ்தானியாய் நாம் வாழவும், இத்தேசம் ஒரே தேசமாய் நிலைத்திருக்கவும் ராமவழிபாடு முழு அவசியம்
ஆடிமாதத்தில் ராமன் புகழை பாடுவதும் கேட்பதும் இந்துக்களின் பெரும் கடமை, அதை தவறாமல் செய்வோம், அதை செய்ய தொடங்கினால் ராமனின் கால்பட்ட‌ மாகாணம் எல்லா நலன்களையும் அவன் அருளால் பெறும், தமிழக பழைய ஞான பொற்காலம் மீட்டெடுகக்படும்
ராமன் வழிவந்த குலத்தின் ஆட்சி என சோழனும் பாண்டியனும் சேரனும் ஆளும்போது திரும்பும் பகக்மெல்லாம் பிரமாண்ட ஆலயம் , ஏகபட்ட காவியம் என ஞானமரபாக வாழ்ந்த அந்த இந்துசமூகம் மறுபடி திரும்பும் , ராமனின் அருளால் அது நடக்கும்
ஜெய் ஸ்ரீராம்...
(கேரளாவில் பாரம்பரிய முறையில் குத்துவிளக்கில் தீபமேற்றி அந்த வெளிச்சத்தில் வீட்டில் மூத்தவர்கள் இளைய தலைமுறைக்கு ராமாயணம் சொல்லும் காட்சி பிரசித்தம்
ஆடிமாதத்தின் மிக அழகான காட்சி அது
ஆடிமாதம் என்பது அங்கு வெறும் மழைக்காலம் அல்ல, வெள்ளகாலம் அல்ல, பக்திநிறை காட்சிகள் பெருகி ஓடும் அற்புதமான காலம்
தமிழக மூத்தோரும் தங்கள் பேரகுழந்தைகளுக்கு இரவில் இந்த நல்ல நிகழ்வை முன்னெடுக்கலாம், நல்ல வழக்கம் எங்கிருந்தாலும் கற்றுகொள்ளலாம், கற்றும் கொடுக்கலாம்
குறைந்தபடசம் இந்த ஆடிமாதமாவது மாலையில் சினிமா, தொலைகாட்சி, வெட்டி விவாதம், வீண் சலசலப்பினை தவிர்த்து இப்படி தீபமேற்றி மலரிட்டு தூபமிட்டு ராமாயணம் படித்து அதை கற்றும்கொடுத்தால் எல்லா நலனும் அந்த குடும்பத்துக்கு வரும், அது சத்தியம்).

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...