Monday, July 17, 2023

🌹ரயில்பயணங்கள்🌹

 பயணங்கள் என்றாலே இனிமை தான். அதுவும் ரயில் பயணங்கள் என்றால்

எப்போதும் குதூகலம் தான்.
என் சிறு வயது ரயில் பயணம் 1967-களில் தொடங்கியது. மெட்ராஸ் போக புளூமவுண்டன் தான் அப்போது.
பெருந்துறையிலிருந்து பஸ்ஸில் ஈரோடு ஜங்ஷன் வரவேண்டும். இரவு பத்து மணியளவில் ரயில் வரும். மெட்ராஸ் பயணம் என்றாலே, வீட்டில் கல்யாண களை வந்து விடும்.
ஒரு வாரத்துக்கு முன்பே எல்லோரும் தயாராகி விடுவோம். அம்மாவும், அக்காவும் ரவாலட்டு, மைசூர்பா, ஓட்டு பக்கோடா, கைமுறுக்கு பட்சணம் எல்லாம் லிஸ்ட் போட்டு தயார் செய்து விடுவார்கள். மெட்ராஸ் லிஸ்ட் கொஞ்சம் பெரிய லிஸ்ட் தான்.
பெரிய அண்ணாவுக்கு, சித்தி வீடு, மாமா வீடு, அத்தை வீடு.. இப்படி எல்லா பந்துக்களுக்கும் எடுத்துண்டு போவோம்.
அப்பா வரமாட்டார்.அப்பாவிற்கு போலீஸ் டிபார்ட்மெண்ட் தான் சகலமும். ஏற்பாடு செய்வதோடு சரி. அம்மா, அண்ணா, அக்கா, நான். சில சமயம் கஸின்ஸ்.
சரி. இப்போது மெட்ராஸ் போகலாமா?
ஈரோடு ஜங்சனுக்கு நேரமே வந்து விடுவோம். அப்போது சிறிய பிளாட்பாரம் தான். ரயில் வரும் வரை, பிளாட்பார்மில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது அலாதியானது.
ரயில் பயணம் பிடிக்க இன்னொரு காரணம், அம்மாவின் கைவண்ணத்தில் எள்ளு மிளகாய் பொடி, இட்லி. பூபோன்ற பதத்தில், நல்லண்ணை வாசத்துடன் அசத்தும். பிளாட்பார்ம் பெஞ்சில் டின்னர்.
வடக்கு நோக்கி போகும் ரயில்கள், வரிசையாக வந்து வந்து போய் கொண்டிருக்கும். கூட்ஸ் வண்டிகளும் நிறைய பெட்டிகளுடன் போகும்.
"அம்மா ப்ளூ வண்டி எப்ப வரும்?
எந்த பக்கம் இருந்து வரும்"
என் கேள்விகள்.
"சும்மா தொன தொனன்னு நச்சாம, சித்த அமைதியா இருக்கியா?" - அம்மா.
அதோ! தூரத்தில் வண்டியின் வெளிச்சம்.
இருப்பு பாதையில், நீராவி இன்ஜினின் பலத்த இரைச்சலுடன், மெதுவாக
உள்ளே நுழைந்து, பிளாட்பார்மின் கடைகோடிக்கு போய் நிற்கிறது. நீல நிறத்தில், வரிசையாக கம்பார்ட்மெண்ட் பெட்டிகள். பிளாட்பாரம் பரபரப்பானது. நீல நிறத்தில் பெட்டிகளுடன், பார்க்கவே ரயில், அழகோ அழகு.
இப்போது பெட்டியை கண்டு பிடித்து, லக்கேஜ் எல்லாம் ஏற்றி விட்டு, நாங்கள் ஒவ்வொருவராக ஏற வேண்டும்.
பெட்டியில் ஏறியதும் அம்மா ஒரு பழைய சட்டையை போட்டு விடுவாள். எனக்கு இது அறவே பிடிக்காது.
"அம்மா, இந்த பழைய சட்டை வேண்டாம்."
"மெட்ராஸ் போய், சட்டைய மாத்திக்கலாம் கோந்தே. ரயில் கரியெல்லாம் பறந்து வந்து, சட்டை எல்லாம் நாசமாகி விடும்"
சரி. முதலில் ஜன்னலோர சீட்டை பிடிக்க வேண்டும். அப்போது தான் வெளியே வேடிக்கை பார்க்க வசதியாக இருக்கும். எப்படியா சண்டை போட்டு யாரையும் உட்கார விடாமல் நான் உட்கார்ந்து விடுவேன். ரயில் பயணங்களில் அந்த ஜன்னலோர சீட்டு அலாதியானது.
இப்போதும் அப்படித்தான்.
ரயில் பெருத்த விசிலுடன், சத்தத்துடன் கிளம்பியது. பிளாட்பாரங்களில் உள்ள ஒவ்வோன்றும் வேகமாக பின்னாடி போய்கோண்டு இருக்க, ரயில் சிறிது சிறிதாக வேகம் பிடித்தது.
பதினைந்து நிமிடங்கள் இருக்கும். திடீரென்று ரயிலின் சத்தம் அதிமானது. எட்டிப்பார்த்தால் காவிரி பாலம்.
ரயில் பாலத்தை கடந்து போய் கொண்டு இருக்கிறது. எதிரே காகித ஆலை, நிறைய விளக்குகளுடன் இரவிலும் இயங்கிக்கொண்டு இருந்தது. தூரத்தில் இருட்டில், மரங்களும், வயல்வெளிகளும் மங்கலான வெளிச்சத்தில் வேகமாக பின்னால் போய் கொண்டு இருந்தன.
முகத்தில் சிலுசிலு என காற்று.
இப்போது டிடிஆர் வந்து செக்கிங்.
அம்மா பேசியதை பார்த்து டிடிஆர்,
"மாமி நீங்க கேரளாவா"
"ஆமாம். பாலக்காடு நூரணி கிராமம்"
"எனக்கு ஒத்தபாலம் மாமி."
"ஒத்த பாலத்தில் யாரு? அப்பா பேரு?"
"அப்பா பேரு கிருஷ்ணய்யர். அம்மா பேரு கனகா. கிருஷ்ணன்கோவில் பக்கம் வீடு"
"அடடா. நீ கனகத்தோட புள்ளயா? கனகத்துக்கு சேலக்கரை தானே ஊரு"
டிடிஆர் ஒரு நிமிடம் அசந்துபோய்,
"மாமி உங்களுக்கு அம்மாவை தெரியுமா"
"நன்னா தெரியுமே. சேலக்கரைல என் தம்பி ஆத்து பக்கத்து ஆகம் தான், கனகத்தோட ஆகம். அவ புள்ள ரயில்வேல இருக்கான்னு, என் தம்பி மாது சொல்லியிருக்கான்."
"ரொம்ப சந்தோஷம் மாமி"
"அம்மா கிட்ட சொல்லு. நூரணி மாதுவோட அக்கா, சரஸ்வதி மாமிய பாத்தேன்னு சொல்லு. அப்பதான் தெரியும் அவளுக்கு"
சரி. அப்பறம் கொஞ்ச நேரம் ஊரில் உள்ள எல்லோருடைய தலையையும் உருட்டிணார்கள். டிடிஆர் அடுத்த பெட்டிக்கு, ஒருவழியாக போனர்.
அம்மா எதிர்த்த சீட்டில் ஒரு மடிசார் மாமியுடன் பேசி கொண்டு வந்தாள்.
ஒத்தபாலத்துல, ரயில்வே-யில் வேல பண்றவாதான் அதிகம்-னு அம்மா சொல்லிண்டு இருந்தாள். எங்க போனாலும் அம்மாவிற்கு ஒரு மாமி கிடைத்து விடுகிறாள்.
"நீங்க மெட்ராசுல எங்க போறேள்" -மாமி.
"நா என்னோட தங்கை ஆத்துக்கு போறேன். புரசை வாக்கத்துல இருக்கா.
ரங்கூன்ல இருந்து வந்துட்டா. என் மாமா புள்ளை மயிலாபாபூர்ல இருக்கான்."
"நீங்க எங்க இருக்கேள்?"
"நான் டிரிப்ளிகேனில் இருக்கேன். பேரு கீதா. பார்த்தசாரதி கோவில் பக்கம் ஆகம். அங்கே இருக்கிற ஐயர் மெஸ் எங்கோளோடது தான். வந்தா வாங்கோ. சாரதி கோவில் கூட்டிண்டு போறேன்"
சரி. அப்புறம் நிறைய கதைகள் பேசி கொண்டு வந்தார்கள்.
ரயில் இருளை கிழித்து கொண்டு வேகமெடுத்தது. சில்லென்று காற்று முகத்தில் விசுவிசுவென்று அடித்து கொண்டு இருந்தது. அதோ! தூரத்தில் ஏதோ ஒரு மலையின் மீது வெளிச்சம்.
"அம்மா அது என்ன மலை?" "திருச்சேங்கோடு கோயில். உன்னை கூட்டிண்டு போயிருக்கோம். சரி. நாழியாரது பாரு. தூங்கு."
ரயில் சேலம் தாண்டியது. அம்மாவின் மடியில் தலை வச்சுண்டு கொஞ்சநேரம் தூக்கம். நடு ஜாமம் கடந்தது.
பார்த்தால் ரயில் எங்கோ ஒரு அனாந்திர காட்டின் நடுவே நின்று கொண்டு இருந்தது. என்னாச்சு? எட்டி பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. ஒரே இருட்டு. எல்லோரும் தூங்கிவிட்டார்கள்.
அப்போது எதிரே ஒரு வண்டி சத்தத்துடன் தடதடவென்று வேகத்துடன் கடந்து போனது. ஓகோ. இது வேறு ஏதோ ரயில். மெட்ராசிலிருந்து வருகிறது. சரி.
எப்போது மெட்ராஸ் வரும்? இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? இப்போது ரயில் ஒரு பிளாட்பார்மில் வந்து நின்றது.
காட்பாடி ஸ்டேஷன். அந்த இரவிலும் பரபரப்பாக இருந்தது. டீ காபி, டீ காபி சத்தம். சிலர் அங்கும் இங்கும் நிற்காமல் ஓடி கொண்டு இருந்தார்கள். ஐன்னல் ஓரம் உட்கார்ந்தால் தான், இதெல்லாம் பார்க்க முடியும். சரி. ரயில் கிளம்பியது.
அடுத்தது அரக்கோணம். ஆங்காங்கே சில ரயில் பெட்டிகள். இன்ஜின் இல்லாமல் நின்று கொண்டு இருந்தது. இன்ஜின் எங்கே? இன்ஜின் இல்லாமல் இதெல்லாம் கிளம்பி எங்கே போகும்? நிறைய கேள்விகள். பதில் தெரியாது.
மணி நாலறை தாண்டியது. இப்போது ரயில் பேசின்பிரிட்ஜில் நின்று கொண்டு இருந்தது. சிக்னல் கிடைக்கவில்லை. ஒவ்வொருவராக எழுந்து, பெட்டி படுக்கைகளை எடுத்து வைத்து தயாரானார்கள். மெட்ராஸ் வந்தாச்சா?
ஆமாம். அதோ கிரீன் சிக்னல் விழுந்தாச்சு. ரயில் மெதுவாக கிளம்பி ஊர்ந்து, மெட்ராஸ் சென்ட்ரலுக்குள் நுழைந்தது. சிலர் பெட்டியோரம் நின்று பல்தேய்த்து கொண்டு இருந்தார்கள்.
மணி ஐந்து. மெட்ராஸ் வந்தாச்சு.
அம்மா வேறு புதுசட்டை கொடுத்தாள். சென்ட்ரல் எப்போதுமே பரபரப்பு. போர்ட்டர்கள் பெட்டி பெட்டியாக பார்த்து கொண்டே வருவார்கள். நிறைய லக்கேஜ் உடன் வருபவர்களை சரியாக கணித்து, பேரம் பேசி கொண்டு இருப்பார்கள்.
நாங்கள் பெட்டியிலிருந்து இறங்கி, பெட்டிகளை தூக்கி கொண்டு, ஒருபாடு தூரம் நடந்து, வெளியில் வந்தோம்.
டிரிப்ளிகேன் கீதா மாமி, அம்மாவிடம் சொல்லி கொண்டாள். ரயில் சிநேகிதம் தான். இருந்தாலும் நன்றாக பழகி விட்டார்கள். அம்மா டிரிப்ளிகேன் போய் கீதா மாமியை நிச்சயம் பார்ப்பாள். அவர்கள் பேச்சில், அப்படியொரு அன்னியோன்யம் இருந்தது.
அம்மாவை பொறுத்தவரையில் ரயில் சிநேகமாக இருந்தாலும், ரொம்பநாள் பழகியவளை போலவே பேசி, பழகி எல்லோரையும் ஈர்த்து விடுவாள். கொஞ்சநேரம் பேசினால் போதும். வயசு சின்னவளா இருந்தால், வா போ என்று ஆரம்பித்து, இறங்கும் போது, வாடி போடி-யில் முடிவதும் உண்டு. நட்பின் இலக்கணம். அதுதான் அம்மா.
நாங்கள் சென்ட்ரலில் இருந்து வெளியே வந்தோம். சென்ட்ரல் பிரம்மாண்டமாக தெரிந்தது. புரசைவாக்கம் போக ரிக்சாவை பிடித்தோம். தூரத்தில் மூர் மார்க்கெட். அந்த குளிரிலும், அதீத சுறுசுறுப்புடன் இருந்தது.
வெள்ளை கலரில் இருந்த, பிரமாண்டமான ரிப்பன் பில்டிங்கை தாண்டி, புரசைவாக்கம் ரோட்டில் திரும்பியது எங்கள் ரிக்சா.
சிறிது தூரத்தில் சித்தி வீடு வந்து விடும்.
மனது ரயிலையும், ரயில் பயணத்தையும் நினைத்து கொண்டு வந்தது. மனம் அடுத்த பயணத்திற்காக ஏங்கியது. பயணம் என்றால், ரயில் பயணங்கள் தான். எப்போதும் ஆரவாரம் தான்.
அடுத்த ரயில் பயணம் எப்போது?
தெரியவில்லை. வந்தே பாரத்தில் பயணிக்க வேண்டும்.
ஆசைகளுக்கு அளவில்லை.
பயணங்கள் முடிவதில்லை.
May be an image of 1 person, train and railroad
ion

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...