Wednesday, July 19, 2023

இந்தக் காரை யானையுடன் ஒப்பிடலாமே மிகவும் அற்புதமான கார்.

 அம்பாசடர்

எங்களுடைய குடும்ப வக்கீல், குடும்ப டாக்டர் என்று சொல்லுவது போல ஒரு வாகனம் பல நாட்களாக இந்திய மக்களுக்காக பல நேரங்களில் கை கொடுத்து உதவியது - அது தான் அம்பாசடர்.
அம்பாசிடர் என்றாலே தூதுவர் என்று பொருள்.
இன்றைய தலைமுறையினருக்கு அது ஒரு டப்பா கார் என்று தான் நினைக்க தோன்றும். ஒரு சில வருடங்கள் முன்பாக கார்களில் பயணித்த அணைத்து இந்திய மக்களும் கண்டிப்பாக இந்த காரில் குறைந்த பட்சம் ஒரு முறையாவது பயணம் செய்திருப்பார்கள்.
எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து - 1960; அப்போது மோரிஸ் மைனர் என்று ஒரு கார் உண்டு. கிராமங்களில் பண்ணையார் வீடுகளில் இந்த காரை வாங்கி வைத்திருப்பார்கள். அதற்கு என்றே ஒரு செட்- அதில் இவர் ஜம் என்று அமர்ந்திருப்பார். வேண்டும் என்றே, கிராமத்து ஜனங்கள் பார்க்கவேண்டும் என்றே, அந்த காரை ஒரு நாளைக்கு மூன்று- நான்கு முறை துடைத்து சுத்தம் செய்வார்கள். அதற்கென்றே தனி பணியாள் வேறு இருப்பார். அந்தளவுக்கு பண வசதி உண்டு. பிறர் கவனத்தை கவருவதற்கு அவர்கள் செய்யும் ஏற்பாடு. இன்று நான் இருக்கும் அபார்ட்மெண்டில் இருக்கும் ஒரு KIA காரை எவரும் கண்டு கொள்ளுவதேயில்லை. ஏன் என்றால் கிட்டத்தட்ட நூற்றுக்கு 90 சதவீத அபார்ட்மெண்ட் வாசிகளிடம் ஒரு கார் இருக்கிறது. அதாவது கார் என்பது ஒரு மேல் சட்டை என்று ஆகிவிட்டது.
அந்த செட்டில், மூக்கை நீட்டிக்கொண்டு இருக்கும் அந்த மோரிஸ் மைனரை பார்ப்பதற்கென்றே, கிராமத்து பெண்கள் ஒரு சிலர் மற்றும் கண்டிப்பாக சிறுவர் மற்றும் சிறுமிகள் வாசலில் நின்று கொண்டு இருப்பார்கள். அவர்களை பார்க்கும்போது பண்ணையார் அம்மாவுக்கு பெருமையாக இருக்கும். பண்ணையாருக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்காது. அவருக்கு வேலையாட்களுக்கு வேலை கொடுப்பதிலும் அவர்களை மேற்பார்வை செய்வதிலும் தான் கவனம் இருக்கும்.
இந்த மூக்கு நீட்டி மோரிஸ் மைனர் - தனது கௌவரவத்தை இழந்ததே இந்த அம்பாஸடர் கார் வந்த பிறகு தான். இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், அம்பாஸடர் முற்றிலும் இந்திய தயாரிப்பு. கல்கத்தா ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. வருடத்திற்கு ஒரு மாடல் கொண்டு வருவார்கள். அம்பாஸடர் மார்க் 1, 2, 3, 4 என்று வந்து கொண்டே இருக்கும். வெளி தோற்றத்தில் மாற்றம் இருக்காது. சில அதிகப்படியான வசதிகள் தந்து கொண்டே இருப்பார்கள்.
அதை ஒரு பேமிலி கார் என்று சொல்லலாம். முன் பக்கம் ஓட்டுநர் அருகில் மூன்று நபர்கள் உட்கார முடியும். கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட் பாலிசி இருந்தால் ஐந்து நபர்கள் கூட அமர்ந்து கொள்ளுவார்கள். பின்பக்கம் சவுகரியமாக இருக்கவேண்டும் என்றால், மூன்று நபர்கள் - அதற்கு மேல் அட்ஜஸ்ட்மென்ட் பாலிசிக்கு தகுந்தவாறு அமர்ந்து கொள்ளலாம்.
ஒரு முறை தூத்துக்குடியிலிருந்து குற்றாலம் சென்ற போது, ஒரே காரில் ஒன்பது நபர்கள் பயணித்ததாக நினைவு. பின்புறம் டிக்கியை திறந்து வைத்துக்கொண்டு மூன்று நபர்கள் வரை அமரலாம்.
சும்மா சொல்லக்கூடாது.
"எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா" - என்ற வைகைப்புயல் ஜோக் மாதிரி, கொஞ்சமும் அசராமல் தன்னை நம்பி ஏறியிருக்கும் பயணிகளுக்கு எந்தவிதமான வஞ்சகமும் செய்யாமல் வண்டி சென்று கொண்டே இருக்கும்.
2010 வரை இந்த கார் உபயோகத்தில் இருந்ததாக நினைவு. இன்றும் கல்கத்தா சாலைகளில் மஞ்சள் நிற சட்டைகளை அணிந்து கொண்டு, இந்த அம்பாஸடர் டாக்சிகளாக செல்வதை பார்க்கலாம்.
இந்த அம்பாஸடருக்கு போட்டியாக வந்திறங்கியவை ஸ்டாண்டர்ட் கார்கள்; பின்னர் ஸ்டாண்டர்ட் ஹெரால்ட் என்று ஒரு மாடல் வந்தது. இது மிகவும் சிறிய கார். நான்கு நபர்கள் சேர்ந்தால் அப்படியே அலாக்காக தூக்கி ஒரு மைதானத்தில் கொண்டு வந்து வைத்து விடலாம். இந்த மாடலுக்கு போட்டியாக களத்தில் வந்திறங்கியது தான் மாருதி 800. பிறகு டாட்டா நானோ.
ஸ்டாண்டர்ட் காருக்கு பிறகு வெளிநாட்டு உதவியோடு Fiat வந்தது. இதுவும் சிறிய கார் தான். அதிக நபர்கள் அமர முடியாது. ஆனால், மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். வண்டியோடும்போது, ஒரு விமானம் செல்வது போல, சவுண்ட் கொடுத்துக்கொண்டே செல்லும். பெரும்பாலான நடிகர் நடிகர்கள் ஆரம்பத்தில் பிளைமௌத் வைத்திருந்தவர்கள், பிறகு இந்த காருக்கு மாறிவிட்டார்கள்.
இந்த பிளைமௌத் கார்கள் அப்படியே நீளளளளளளமாக இருக்கும். ஆனால் கட்டுப்பிடியாகாது. அதிகம் பெட்ரோல் சாப்பிடும்.
அம்பாஸடர் கார்கள் ஜனங்களின் கார் என்றால் பியட் வசதியானவர்கள் கார்கள் என்ற முத்திரை விழ ஆரம்பித்துவிட்டது.
பியட் பிற்பாடு பத்மினி என்று பெயர் மாற்றம் ஆகியது. தற்போது பத்மினி மற்றும் ஸ்டாண்டார்ட் ஹெரால்ட் கார்கள் ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளன.
அதிகம் அரசு அலுவலகங்களில் பதமினி கார்கள் தான் இருக்கும். உயர் அதிகாரிகள் வைத்திருப்பார்கள்.
மந்திரிகள் போன்றவர்கள் அம்பாசடோர் கார்களில் பயணம் செய்வார்கள்.
இன்றும் 1980-1990 திரைப்படங்களை பார்த்தோம் என்றால் கண்கூடாக இந்த கார்களை பார்க்கலாம்.
ஹீரோவை வெளுத்து வாங்குவதற்கு, அப்படியே அலை அலையாக அம்பாஸடர் கார்களில் வந்தவண்ணம் இருப்பார்கள் வில்லன்கள். அப்படிதான் வரவேண்டும் என்று திரை விதி இருந்தது போல தோன்றும்.
அதன் பிறகு, இந்த இடத்தை டாட்டா சுமோ கார்கள் பிடித்துக்கொண்டன. தற்போது பொலேரோ கார்கள் பிடித்துக்கொண்டன. கார்கள் தான் மாறின ஆனால் அந்த “ஹீரோ கேட்சிங்” அதே பார்முலாவில் தான் நடந்துகொண்டு இருக்கிறது.
வாழ்க நமது அம்பாஸடர் கார்கள்.
May be an image of car

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...