Saturday, August 13, 2011

வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா?


‘’வைகோ’’… இந்தப் பேரைக் கேட்டாலே எழுச்சியடையும் இளைஞர் கூட்டம் இருந்தது ஒரு காலம். ம.தி.மு.க.வை நிஜமாகவே தமிழகத்திற்கான மறுமலர்ச்சியாக படித்தவர் முதல் நடுநிலைமையாளர்கள் வரை நம்பியது ஒரு காலம். பம்பரம் என்ற தேர்தல் சின்னம் மிக வேகமாய் மக்களிடம் பரவியது ஒரு காலம்.

ஆனால் இன்றைய நிலை?...

வைகோ என்ற தனிப்பெரும் சக்தி அறிமுகமான அளவுக்கு ம.தி.மு.க. என்ற பேரும், பம்பரம் என்ற சின்னமும் மக்களிடம் நிலைப்படாமல் மறந்தேபோனது. தேர்தல் சின்னம் பலமிழக்கும் போது கட்சி பலமும் கபளீகரமாகிப்போகும். (வேட்பாளரைப் பார்க்காமல் வெறும் சின்னத்துக்காக மட்டுமே வாக்களிக்கும் கூட்டம் இன்னமும் மாறவில்லை நம் நாட்டில்) கட்சி பலம் இல்லாதபோது அரசியல் பலமும் அழிந்து போகக்கூடும். அரசியல் பலமின்றி வெறுமனே ஒரு தனிமனிதரின் செல்வாக்கினால் மட்டும் இங்கே பெரிதாய் மக்களுக்காக எதையும் சாதித்து விடமுடியாது.

ஒரு காலத்தில் தி.மு.க. என்ற மிகப்பெரிய திராவிடக்கட்சியின் போர்வாளாய், பிரச்சாரப்பீரங்கியாய், தளபதியாய், கலைஞரின் அன்புத்தம்பியாய் விளங்கியவர்தான் வை.கோபால்சாமி என்ற ‘’வைகோ’’. எப்படி அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ராஜதந்திரத்துடன் கலைஞர் கட்சியைக் கைப்பற்றினாரோ, அதே ராஜதந்திரத்துடன் தனக்குப்பிறகு கட்சி தனது வாரிசுகளுக்கே சொந்தம் என்ற நிலையை உருவாக்கியதுதான் தி.மு.க.வை விட்டு வைகோ வெளியேறியதற்கான ஒரே காரணம். தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார் என்பதே வைகோவின் வளர்ச்சியைப்பார்த்து மிரண்ட கலைஞரால் வரலாற்றில் பதியப்பட்ட செய்தி. அவர் வெளியேற்றப்பட்டாரோ… இல்லை வெளியேறினாரோ… எப்படியிருந்தாலும் சரி… அந்நேரத்தில் தி.மு.க… இல்லையன்றால் அ.தி.மு.க. என்று சலித்துப் போயிருந்த தமிழக மக்களுக்கு வைகோ ஒரு மாபெரும் மாற்று சக்தியாகத் தோன்றத் தொடங்கியது, காலம் அவருக்கு வழங்கி அவர் சரியாய் உபயோகப்படுத்திக் கொள்ளாத மிகப்பெரிய வாய்ப்பு.

1944ல் பிறந்த வைகோ, 1994ல் ம.தி.மு.க என்ற தனிக்கட்சியின் தலைவரானார். தனிக்கட்சி தொடங்கிய வைகோவின் பின்னால் அப்போது அணி திரளத்தொடங்கிய இளைஞர் கூட்டம் தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத செய்தி. அவருடைய கட்சியின் கொள்கைகளை விளக்க தமிழகம் முழுவதும் முதன் முதலில் அவர் மேற்கொண்ட நடைப்பயணம் அவருக்கு வழங்கிய அரசியல் வளர்ச்சியை பிற்காலத்தில் அவர் மேற்கொண்ட எந்த நடைப்பயணமும் வழங்கவில்லை. இனிமேலும் அவர் எத்தனை நடைப்பயணம் மேற்கொண்டாலும் எதுவும் நடக்கப்போவதுமில்லை.

அக்காலக்கட்டத்தில் வைகோவின் வளர்ச்சியைப் பார்த்த நடுநிலையாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் அனைவருமே தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டுக்கும் மாற்றாக மக்கள் வைகோவை ஆதரிக்கத்தொடங்கியதால், வெகுவிரைவிலேயே வைகோ தமிழக முதல்வராகும் நிகழ்வு நடக்கும் என்றே நம்பினர். (அவ்வாறு நம்பிய கூட்டத்தில் நானும் ஒருவன். ஆனால் அப்போது எங்களுக்குத்தெரியாது அதை வைகோ இப்படி புஷ்வானமாக்குவாரென்று!)

வைகோ எதிர்கொண்ட அப்போதைய சட்டசபைத் தேர்தலில் அவர் வெளியிட்ட ஓர் அறிக்கைதான் அவருடைய அரசியல் அழிவுக்கான பிள்ளையார் சுழியைப் போட்டது. ‘’ம.தி.மு.க ஜெயித்து ஆட்சியைப் பிடித்தால், ஜெயலலிதா மற்றும் அனைத்து அ.தி.மு.கவினரிடமிருந்தும் அவர்கள் ஊழல் செய்த அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பகிரங்கமாக அறிவித்து தேர்தலை எதிர்கொண்டார். அந்தத்தேர்தலில் ம.தி.மு.க பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை. அ.தி.மு.க.வும் ஜெயலலிதாவின் ஊழலினால் அத்தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது. அதன் பிறகு வைகோவின் அரசியல் களம் மெள்ள மெள்ள வளர்ச்சியடைந்து கொண்டேயிருந்தது. வைகோ என்ற தனிமனிதர் ஒரு நேர்மையாளராய், புரட்சியாளராய், தமிழினத்திற்காக போராடும் ஒரு தலைவனாய் மக்கள் மனதில் ஆழப்பதிந்து போனார். கறைபடியாத ஒரே அரசியல்வாதியாய் அவருடைய பிம்பம் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்திருக்கிறது.

மிகச்சிறந்த அரசியல் அடித்தளம் கிடைத்தும், வைகோ அதைச் சரியாக உபயோகப்படுத்தத் தவறிய மனிதராகிப்போனார். 2001ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. 2002ல் வைகோ தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப்பேசியதாக போடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதன் பிந்தைய நிகழ்வுகள்தான் மெள்ள மெள்ள வைகோவின் அரசியல் வளர்ச்சிக்கு மூடுவிழா நடத்தத்தொடங்கியது.

சிறையிலடைக்கப்பட்ட வைகோவை அரசியல் சாணக்கியர் கலைஞர் ஒருசில அரசியல் ஆதாயத்துக்காக சந்தித்துப்பேசி ஆதரவளித்தார். அதன் பின்னர் வைகோ சிறையிலிருந்து வெளியில் வந்ததும் கலைஞருடனே பல பொது மேடைகளில் தோன்றினார். பாசத்தம்பி… அப்படி இப்படியென்று மேடையிலேயே கண்ணீர் விட்டு பல பச்சோந்தி நாடகங்கள் அரங்கேறின. அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். ஏற்கனவே கலைஞருடன் மீண்டும் இணைந்து தோன்றியதில் வைகோவின் இமேஜ் மக்கள் மனதில் சரியத்தொடங்கியிருந்தது. வைகோவும் ஒரு சாதாரண சந்தர்ப்ப அரசியல்வாதிதானா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் முளைத்தது. இது எல்லாவற்றுக்கும் மேலாக தி.மு.க. கூடாரத்திலிருந்த வைகோ கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க கூடாரத்துக்குத் தாவினார். வைகோ தனது அரசியல் வளர்ச்சியை தானே குழி தோண்டி புதைத்துக்கொண்டது அப்போதுதான்.

தி.மு.க விலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கி, மீண்டும் தி.மு.க.வுடன் ஒரே மேடையில் தோன்றி, இறுதி நிமிடத்தில் அத்தனை நாள் எதிர்த்து வந்த ஜெயலலிதாவின் அ.தி.மு.க கூட்டணிக்குத்தாவி… இப்படி திடீரென்று பைத்தியக்காரத்தனமான பல முடிவுகளை அமல்படுத்தி ம.தி.மு.க. என்ற ஒரு கட்சியை மீட்டெடுக்க முடியாத அதள பாதாளத்துக்குள் தள்ளியது வைகோதான். மக்கள் வைகோ மீது வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் மறைந்து போனது. வைகோ ஒரு மறுமலர்ச்சி மாற்றுசக்தியல்ல என்ற நிலைமை வைகோவாலேயே உருவாக்கிக் கொள்ளப்பட்டது.

இன்று விஜயகாந்த் மக்களால் ஒரு மாற்று சக்தியாய் உணரப்படுகிறார். ஆனால் இந்நேரம் மிகப்பெரிய சக்தியாய் வளர்ந்திருக்கவேண்டிய ம.தி.மு.க அழிவின் விளிம்புக்கு வந்தாகிவிட்டது. அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்துக்கொண்டு தேர்தலில் தோற்றபின்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாய் வைகோவுக்கு தோன்றிய ஞானோதயங்கள் எல்லாம் மக்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. அரசியல் பல்டிகளால் தானே கெடுத்துக்கொண்ட தனது இமேஜை நிலைநிறுத்த தொடர்ந்து ஒரே கூடாரமாய் அ.தி.மு.க வுடனே இருந்த காலகட்டத்தில்தான் ம.தி.மு.க தனது தனித்துவத்தை சுத்தமாய் இழந்து போனது. கட்சியையே ஜெயலலிதாவின் காலடியில் அடகு வைத்து நசுக்கிய கதையாகிவிட்டது. இன்று இறுதியாய் ஜெயலலிதாவாலும் ம.தி.மு.க கைவிடப்பட்டாகிவிட்டது.

வைகோவின் இன்றைய நிலை என்ன? வைகோ ஒரு சிறந்த பேச்சாற்றல் மிக்க மனிதர். நாடாளுமன்றத்தில் கருத்துப்பூர்வமான விவாதங்களை எடுத்து வைக்கும் திறமைமிக்க மனிதர். இளைஞர்களை இப்போதும் தன்வசமிழுக்கும் நாவன்மை மிகுந்தவர். இவ்வளவும் வைகோ என்ற தனிமனிதனுக்கு மட்டுமே இன்னமும் மீதமிருக்கிறதேயொழிய ம.தி.மு.க.வும், பம்பரமும் காணாமல் போய் வெகு காலமாகிவிட்டதால் அரசியல் பலம் எதுவுமின்றி வெறும் ஈழ ஆதரவு கோஷமிட்டுக்கொண்டிருப்பது மட்டும்தான் இனி வைகோவின் வேலையா?

வைகோ என்ற தனிப்பெரும் சக்தி நிச்சயமாய் முடிந்து போன சகாப்தமல்ல. ஆனால் ம.தி.மு.கவும் பம்பரமும் சத்தியமாய் மீட்டெடுக்க முடியாத ஒரு முடிந்து போன சகாப்தமே…!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...