காங்கிரஸ் ஆட்சியில், ஊழல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், "எதிர்க்கட்சிகள் யோக்கியமா' என, மன்மோகன் சிங் கூறியிருப்பதும், அவர்களை வசைபாடி உள்ளதும், போற்றத்தக்கதல்ல. தன் நன்மதிப்பை அவர், நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டு வருகிறார்.
குற்றங்கள் செய்யும் போது, அதற்கு உடந்தையாக இருப்பவர்களையும், காவல்துறை கட்டாயம் கைது செய்யும். அதுபோல, ஊழல் செய்பவர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ உடந்தையாக இருந்தால், அது குற்றம் இல்லையா? அது யாராக இருந்தால் என்ன? "பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும்' என, டில்லியில் நடத்தப்பட்ட மாதிரி ஓட்டெடுப்பில், 82 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர்.
"உயர் பதவியில் உள்ளவர்களையும் விசாரிக்கும் அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு இருக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருவதும், மக்களிடம் மாதிரி ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் எண்ணங்கள் பிரதிபலிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர்கள் பலர், "இதை ஏற்க முடியாது' எனக் கூறி உள்ளனர். அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வர்? "மக்களுக்காகவே நடத்தப்படும் அரசு' எனக் கூறி, மக்கள் விரோத அரசை அல்லவா அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்!
கறுப்புப் பண விஷயத்தில், இரட்டை வேடம் போடுவதும், லோக்பால் மசோதாவை, ஆயிரம் ஓட்டைகளுடன் நிறைவேற்றத் துடிப்பதும், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தத் தவறுவதும், "இந்து பயங்கரவாதம்' எனக் கூறி திசை திருப்புவதும், விஷம் போல் ஏறி வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யாமல் இருப்பதும், காங்கிரசுக்கு வாடிக்கையாகிவிட்டது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, மிக உயர்ந்த அளவான, 146 டாலர் வரை உயர்ந்தபோதும், ஏற்றிய எரிபொருள் விலையை தற்போது, 86 டாலர் இருக்கும் போதும் கூட, குறைக்க மனம் இல்லாமல், கச்சா எண்ணெய் விலை, சர்வதேச அளிவில் உயர்ந்து விட்டதாக, வாய் கூசாமல் பொய் பேசி, மக்களின் காதில் பூ சுற்றுவதும் தொடர்கதையாகி விட்டது.
மத்திய அரசு, எரிபொருளுக்கு ஏகப்பட்ட வரியை விதித்துவிட்டு, வரியைக் குறைக்க, மாநில அரசிடம் ஆலோசனை கூறுவதை என்னவென்று சொல்வது? இதுதான் புத்திசாலித்தனமா? பெருகி வரும் விலைவாசி உயர்வுக்கு, புரியாத புள்ளி விவரங்களைக் கூறி மக்களை குழப்புவதும், பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டுவதும், யாரை ஏமாற்றும் வேலை?
No comments:
Post a Comment