Wednesday, August 17, 2011

வக்கீல் வண்டு முருகனுக்கான ஜாமீன் எங்கு கிடைக்கும்?!

வக்கீல் வண்டு முருகன்- வெடிமுத்து இருவர் மீதும் எனக்கு கொள்ளைப் பிரியம். இந்த இரு வக்கீல்களும் தொலைக்காட்சிகளில் தோன்றினால் என்ன வேலை செய்தாலும், அதையெல்லாம் விட்டுவிட்டு இவர்களின் வாதாடும் திறமையை மெய்மறந்து பார்த்திருக்கிறேன். வயிறு வலிக்க சிரித்திருக்கிறேன். அப்பாவியான நல்ல மனிதர்கள்.

தமிழ் சினிமாவின் வரலாற்றில் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு மிகமுக்கியமானவர். 1995களுக்கு பின்னர் உச்சம் பெற்ற அவரது சினிமா வாழ்க்கை 2011 ஆரம்ப காலம் வரை மிகவேகமாக வளர்ந்து சென்றது. ஆனாலும், அவரது அரசியல் ஆசை அல்லது அவருக்கு வலிந்து ஊட்டப்பட்ட அதிகார ஆசை அவரை படுபயங்கர பாதாளத்துக்குள் தள்ளி விட்டுள்ளதாக நினைக்கிறேன்.

எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது, 2007 காலப்பகுதியில் வெளியான ‘போக்கிரி’ படத்தினை கொழும்பிலுள்ள திரையரங்கொன்றில் சிங்கள நண்பர்கள்- நண்பிகளுடன் பார்த்தேன். (சிங்களவர்களில் குறிப்பிட்டளவானோர் விஜய்யின் ரசிகர்கள்) படத்தில் வடிவேலு வருகின்ற அத்தனை காட்சிகளிலும் சிங்கள நண்பர்களின் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மொழி பெரிதாகப் புரியாத போதிலும், வடிவேலுவின் உடல்மொழியும்- பேச்சின் தனிப்பாணியும் அவர்களை மனம்விட்டுச் சிரிக்க வைத்தது. அன்றுதான், நான் உணர்ந்துகொண்டேன் வடிவேலுவுக்கு தமிழ்மொழி தாண்டியும் பிறமொழி ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று. நிச்சயமாகச் சொல்வேன், அதன் பின்னரும் வடிவேலு நடித்த படத்தின் நல்ல டீவீடிக்களை சிங்கள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில், அவர்களும் வடிவேலு என்கிற கலைஞனால் மிகவும் கவரப்பட்டிருந்தனர்.

ஆனால், வடிவேலு என்கிற நடிகனின் அரசியல் ஆசை அவரை மக்கள் முன்னால் கோமாளியாகச் சித்தரித்துவிட்டது. இப்போதும் மக்கள் வடிவேலுவைப் பார்த்து சிரிக்கிறார்கள் பரிதாபப்பட்டு. அரசியல் ஆசை எந்த மனிதனுக்கும் இருக்கும். அது தப்பானதும் இல்லை. எனினும், அதனை அணுகுகின்றபோது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதுவும், மக்கள் கொண்டாடிய மனிதரொருவர் அரசியல் பேசுகின்ற பொழுது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

அந்த அரசியல் அவதானத்தை வடிவேலு தவறவிட்டார். சரி- பிழையைத் தாண்டி மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை பார்த்து அளவுக்கு மீறிய அத்துமீறலுடனான பேச்சினை பேசிவிட்டார். மக்கள் அப்போதும் கை தட்டடினார்கள். பொது மக்களின் கைதட்டல்களுக்கான காரணங்கள் ஒவ்வொரு தருணத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

வடிவேலு என்கிற நடிகர் திரையில் தோன்றுகிற போது கிடைத்த கைதட்டல்களுக்கும்- அரசியல்வாதியாகப் பேசிய போது கிடைத்த கைத்தட்டல்களும் வேறு வேறு காரணங்களுக்காக கிடைத்தவை. அதுதவிரவும், வடிவேலு என்கிற நல்ல கலைஞனின் பிம்பத்தை அவரே மக்கள் முன்னால் போட்டுடைத்தார். வடிவேலு திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகவோ, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகவோ இல்லை வேறு ஏதாவது கட்சிக்காகவோ பிரச்சாரம் செய்யலாம். அது அவருடைய உரிமை. ஆனால், அவர் குறைந்த பட்ச அரசியல் நாகரீகத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.

மக்கள் மிகவும் மேலோட்டமாக இருப்பதுபோல காட்டிக்கொண்டாலும், பல தருணங்களில் அதிகம் சிந்தித்து முடிவெடுத்துவிடுகின்றனர். இதற்கு உலகம் பூராவும் உதாரணங்கள் உண்டு. தன்னை வளர்த்து விட்டவர்கள் பலரையும் தூக்கியெறிந்து பேசியது தொடக்கம்- அடிப்படை நாகரீகமற்ற செயற்பாடுகளை அவர் பலரின் தூண்டுதலினால் செய்துவிட்டார். அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. அதிகார போதை பலருக்கும் அளவுக்கு அதிகமான ஆணவத்தை தந்துவிடுகிறது. ஆனாலும், காலம் பல சந்தர்ப்பங்களில் சரியான பாடங்களைப் புகட்டியும் விடுகிறது. இதுதான் வடிவேலு விடயத்திலும் நடந்திருக்கிறது.

தமிழக அரசியல்- ஆட்சியதிகார மாற்றம் வடிவேலுவையும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளும் போலத் தோன்றுகிறது. அப்போது, அவரை ஜாமீனில் எடுக்க நல்ல வக்கீல்கள் தேவைப்படுவார்கள். சத்தியமாக கடலில் ஜாமீனைத் தேடும் வக்கீல்களை வைத்துக்கொள்ளாதீர்கள். ஏனெனில், அவர்கள் நீதிமன்றங்களில் ஜாமீனைத் தேடாமல் மீன் சந்தைகளில் தேடிக்கொண்டிருப்பார்கள். நடிகர் வடிவேலுவை நான் ரொம்பவும் மிஸ்பண்ணுகிறேன்! ஏனெனில், எனக்கு அரசியல்வாதி வடிவேலு தேவையில்லை!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...