இந்த வாரம் துக்ளக் தலையங்கம்....
இது டெலிவிஷன் நாயகம்!
ஒரு பிரச்சனையைப் போட்டுக் குழப்பி, ஊதி ஊதி எதிர்ப்பைப் பூதாகாரமாக்கி, தாங்களாகவே சிக்கலை உண்டாக்கி; அதிலிருந்து எப்படி மீள்வது என்று புரியாமல் விழித்து; பிடிவாதம், வரட்டுத்தனம், கவலை, பயம், பல்டி என்று மாறி மாறி நின்று; திக்கித் திணறுவது எப்படி என்று தெரிந்து கொள்ள யாராவது விரும்பினால், மத்திய அரசிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.
‘அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரத உற்சவத்தை அவர் நடத்திவிட்டுப் போகட்டும்; அது போகிற போக்கை வைத்து அடுத்த நடவடிக்கையை முடிவு செய்யலாம்’ – என்று முதலில் முடிவெடுத்திருக்கலாம். இந்த நாடு பார்க்காத உண்ணாவிரதமா? காந்திஜி, மொரார்ஜி போன்றவர்களின் நீண்ட நாள் உண்ணாவிரதங்களிலிருந்து, கலைஞர் போன்றவர்களின் ‘பிட்வீன் நாஸ்தா அண்ட் லஞ்ச் உண்ணாவிரதம்’ வரை பலவகைப்பட்ட உண்ணாவிரதங்களையும் பார்த்தாகி விட்டது.
காந்திஜி, மொரார்ஜி போன்றவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள் என்றால் அது சீரியஸ் விஷயம். இப்போது நடக்கிற உண்ணாவிரதங்கள் அப்படிப்பட்டவை அல்ல. அது தொடங்கிய பிறகு, ‘உடல் நலத்திற்குக் கேடு’ என்று கூறி, அந்தப் போராட்டக்காரரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதுதான் – நமது ‘ஜனநாயக மரபு’. அல்லது, உண்ணாவிரதம் இருப்பவர்களின் ஆதரவுத் தலைவர் ஓரிருவர் ‘வேண்டாம், வேண்டாம்’ என்று கெஞ்ச, ஆரஞ்சு ஜூஸ் நைவேத்யம் நடைபெறும்.
அன்னா ஹஸாரேவின் முந்தைய லோக்பால் உண்ணாவிரதம் ஒரு சில நாட்களில் ‘வெற்றி, வெற்றி’ என்ற அறிவிப்புடன் முடிந்தது. அந்த மாதிரி வெற்றியை, இந்த உண்ணாவிரதத்திற்கும் மத்திய அரசினால் கொடுத்திருக்க முடியாதா, என்ன?
சரி. நிபந்தனைகள் விதிக்கப்பட்டன; அன்னா ஹஸாரே அவற்றில் சிலவற்றை ஏற்கவில்லை; சட்டப்படியான உத்திரவை அவர் மீறுகிற வரையில் கூடக் காத்திராமல், ‘என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்கப்பட்டது. ‘பேசாமல் இருந்து விடுவேன்’ என்றா, அவரால் சொல்ல முடியும்? ‘உத்திரவை மீறுவேன்’ என்றார். கைது! எத்தனையோ சட்ட மீறல் ஆர்ப்பாட்டங்கள், பெரிய ஊர்வலங்கள் நடந்தபடி இருக்கின்றன. அவற்றில் சட்டத்தை மீறுபவர்கள், ‘கைது’ ஆகி, அங்கேயே எங்காவது வைக்கப்பட்டு, சில மணி நேரங்களில் ‘விடுதலை’ ஆவார்கள். இது வழக்கம்.
ஆனால், மத்திய அரசு என்ன செய்தது? அன்னா ஹஸாரே கைது; மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்; ஒரு வாரம் சிறை என்று, போலீஸ் கேட்காமலேயே மாஜிஸ்ட்ரேட் உத்திரவு பிறப்பித்தார்; திஹார் ஜெயிலுக்கு அன்னா ஹஸாரேவை அழைத்துப் போனார்கள்.
வேறு இடமா இல்லை? திஹார் என்றாலே, இன்று கேவலமான நினைப்புகள்தானே வருகின்றன! எத்தனையோ மைதானங்கள். அவற்றில் ஒன்றில் அவரை உட்கார வைத்து, உபசாரம் செய்து, மாலை நேரம் வந்தவுடன் விட்டிருக்க வேண்டியதுதானே?
திஹார் ஜெயில் வரை தம் பிடித்த மத்திய அரசு, இந்த நிலையில் நடுங்க ஆரம்பித்தது. அன்னா ஹஸாரேவிடம் பேரம் நடத்தியது. ‘மூன்று நாள் உண்ணாவிரதம்’ என்று அரசு ஆரம்பிக்க, அன்னா ஹஸாரே ‘முப்பது நாளுக்கு ஒரு நிமிடம் குறையாது’ என்று தொடங்க, கடைசியில், 15 நாள் உண்ணாவிரதம் என்று பேரம் படிந்தது.
வாடகை சைக்கிள் எடுக்கிறபோது, ‘நாள் முழுவதும் கொடு’ என்று வாடிக்கையாளரும், ‘அதெல்லாம் முடியாது; ஒரு மணிநேரம்தான்’ என்று கடைக்காரரும் ஆரம்பித்து, பேரம் பேசி, கடைசியில் ‘அரை நாள்’ என்று முடித்துக் கொள்கிற மாதிரி – அரசும், அன்னா ஹஸாரேவும் பேரம் பேசி, ‘அரை மாதம்’ என்று பேரத்தை முடித்துக் கொண்டார்கள். இது என்ன போராட்டமோ, என்ன உண்ணாவிரதமோ, என்ன அரசோ!
சரி; இருக்கட்டும். சாகும் வரை உண்ணாவிரதம், காலவரையற்ற உண்ணாவிரதம், ஒருநாள் உண்ணாவிரதம், அடையாள உண்ணாவிரதம் என்று பார்த்து விட்ட நமக்கு இப்போது, அன்னா ஹஸாரேவும் அரசும் சேர்ந்து ‘பேர நேர உண்ணாவிரதம்’ என்ற புதிய வகை உண்ணாவிரதத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது, ஒரு புரட்சிதான்.
அரசு ஏன் இப்படி நடந்து கொண்டதோ, தெரியவில்லை. அன்னா ஹஸாரே, ஜெயிலை விட்டு வெளியே போக மறுத்தார். ஜெயில் கைதியாகவோ, ஜெயில் அதிகாரியாகவோ இல்லாமல், அனுமதியின்றி ஜெயிலில் எப்படி இருக்க முடியும்? அது என்ன ஹோட்டலா, இல்லை சத்திரமா அல்லது எவரெஸ்ட் லாட்ஜா?
பேசாமல், அவரை மரியாதையுடன் ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, சாமி பல்லக்குத் தூக்குகிற மாதிரி நாற்காலியோடு தூக்கிக் கொண்டு வந்து, ஜெயில் கதவிற்கு வெளியே மதிப்புடன் விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவருடைய ஆதரவாளர்கள், ‘அன்னா ஹஸாரேவை உள்ளே தள்ளு’ என்று போராடியிருக்க முடியுமா? அல்லது அவர்தான் ‘என்னை உள்ளே விடு’ என்று கூச்சல் கிளப்பி, ஜெயில் கதவுகளை மடால் மடால் என்று தட்டியிருக்க முடியுமா? ‘ஜெயிலில் என்னை போடுகிற வரை உண்ணாவிரதம்’ என்று அவர் கூறியிருந்தால், அவருடைய ஆதரவாளர்களுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டிருக்குமே!
அரசு, நிபந்தனைகளை விதிக்காமலே இருந்திருக்க வேண்டும். சரி, விதித்ததுதான் விதித்தார்கள்; அதற்குப் பிறகு ஏன் பதட்டம்? பாராளுமன்றத்தில் பிரதமர்தான் தெளிவில்லாமல் பேசினாரே தவிர, சிதம்பரம் தெளிவாகவே விளக்கினார். அவர் கூறியபடி, அரசு நிபந்தனைகளை விதித்தபோது, ஒரு ‘காந்தியவாதி’ என்கிற முறையில் அன்னா ஹஸாரேவுக்கு மூன்று வழிகள் இருந்தன. ஒன்று – நிபந்தனைகளை ஏற்பது; இரண்டு – நிபந்தனைகளை எதிர்த்து நீதிமன்றம் செல்வது; மூன்று – நிபந்தனைகளை மறுத்து, சட்டத்தை மீறி, அதன் விளைவுகளை ஏற்பது.
இதில் முதல் இரண்டு நடக்கவில்லை. மூன்றாவது? அன்னா ஹஸாரேவின் ஆதரவாளர்கள், சட்டத்தின் விளைவை அவர் சந்திப்பதை விரும்பவில்லை. அரசை எதிர்த்தார்கள். இது சாதாரணமாக நடப்பதுதான். ஆனால், மத்திய அரசு பயந்து விட்டது; பேரம் பேச முனைந்தது.
மத்திய அரசின் பயத்திற்கு அன்னா ஹஸாரே காரணம் அல்ல; அவருக்குக் கூடிய கூட்டமும் காரணம் அல்ல. அன்னா ஹஸாரேவுக்கு, டெலிவிஷன் சேனல்கள், ஒன்றுக்கு ஒன்று பரஸ்பரப் போட்டா போட்டியில் இறங்கி, வரிந்து கட்டிக் கொண்டு கூட்டம் சேர்க்கத் தொடங்கி விட்டன.
நேரில் வராதவர்களும் இன்புறும் வண்ணம், அவர்களுடைய மெஸேஜ்கள் கோரப்பட்டன. கிரிக்கெட் மேட்ச்களில் நடக்கிற மாதிரி, கூட்டத்தில் போஸ்டர்கள் பிடித்தவர்களைக் கேமிராக்கள் நன்கு கவனித்தன. குழந்தைகள் கூட, ஊழலுக்கு எதிராகப் பேசி, டெலிவிஷனில் தோன்றி, பெற்றோரைப் பெருமைப்படுத்தின. ஊழல், என்ன பெரிய ஊழல்! மழலைக்கு எதிரே ஊழல் எம்மாத்திரம்? சிதம்பரம் இனிது, கபில் சிபல் இனிது என் போர், டெலிவிஷனில் தம் குழந்தை மழலைச் சொல் கேளாதோர்!
நல்லவேளை. அரசு பிழைத்தது. டெலிவிஷன் சேனல்கள் ‘மெஸேஜ் அனுப்புங்கள், ஆதரவு தெரிவியுங்கள், உங்கள் பெயரைக் காட்டுகிறோம்’ என்று அறிவித்தனவே தவிர, ‘முதல் ஐந்து மெஸேஜ்களுக்கு மாருதி கார் பரிசு!’, ‘ஒரு வாக்கியம் முழுமையாகப் பேசுகிற குழந்தைக்கு ஒரு தங்க நகை இனாம்!’... என்றெல்லாம் அறிவிக்கவில்லை. அப்படி மட்டும், டெலிவிஷன் சேனல்கள் முனைந்திருந்தால், ஊழல் எதிர்ப்புப் போர், மேலும் உக்கிரம் அடைந்திருக்கும்.
இப்போதே, இந்த டெலிவிஷன் போரின் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ‘15 நாள்’ என்ற பேரத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அன்னா ஹஸாரே, வெளியில் வந்து கூட்டத்தைப் பார்த்தபின், ‘எங்களுடைய லோக்பால் மசோதாவைத்தான் பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு 10 நாள் டைம் தருகிறேன். அப்படி நிறைவேற்றாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம்’ என்று அறிவித்திருக்கிறார். இது என்ன காந்திய வழியோ! ‘ஜெயிலில் அரசிடம் பேசியது ஒன்று; வெளியே வந்து பேசுவது வேறொன்று – என்பதுதான் காந்தியம்’ என்று சொல்பவர்கள், காந்தியத்திற்குப் பெருமை சேர்ப்பவர்கள் அல்ல.
இது சரியான வழிதான் என்றால், நாளையே ஒரு ஷாருக்கானோ, ஒரு அமிதாப்பச்சனோ, பெரும் கூட்டத்தைக் கூட்டி, ‘இந்திய கிரிமினல் சட்டம் சரியில்லை; நாங்கள் ஒரு கிரிமினல் சட்டம் தயாரித்திருக்கிறோம்; ஜன் கிரிமினல் சட்டம்! இதை பாராளுமன்றம் பத்து நாட்களில் நிறைவேற்றா விட்டால், சாகும் வரை உண்ணாவிரதம்’ என்று அறிவித்தால் – ஜன் கிரிமினல் சட்டம் வர வேண்டியதுதானா? கூட்டம்தானே கணக்கு? ஷாருக்கானுக்கும், அமிதாப் பச்சனுக்கும், அன்னா ஹஸாரேவுக்கு வருவது போல நூறு மடங்கு அதிக கூட்டம் வருமே! டெலிவிஷன் சேனல்களுக்கு அது லட்டு அல்லவா! வேறு நிகழ்ச்சியே டெலிவிஷனில் வராதே! குழந்தைகளுக்கும் ஜோர்! மெஸேஜ்களுக்கும் கன ஜோர்! அப்புறம் என்ன, வெற்றிதானே? இதுதான் ஒரு பாராளுமன்ற ஜனநாயகத்தை நடத்திச் செல்கிற வழியா? இது, ஜனநாயகம் அல்ல; டெலிவிஷன் நாயகம்.
இப்படியாகத்தானே, இந்த சேனல்கள் கொடுத்த ‘கீ’ நன்றாகவே வேலை செய்திருக்கிறது. அன்னா ஹஸாரேவே இதில் மயங்கிப் போய், தன்னுடைய இயக்கத்தை, ‘இது இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று வர்ணித்துக் கொண்டு விட்டார். மற்றவர்கள் ஜெயப்ரகாஷ் நாராயண் இயக்கத்தை மறந்து இருக்கலாம். இவர் மறக்கலாமா? ஊழலுக்கு எதிராக, ஜெ.பி. நடத்திய இயக்கத்திற்குக் கிட்டிய ஆதரவைக் கண்டு, அன்று பிரமித்தது – இன்றைய பிரதமரைப் போன்ற பலவீனமான ஆட்சியாளர் அல்ல – பலம் மிக்கவராகத் திகழ்ந்த இந்திரா காந்தி! மற்ற கட்சிகளை நம்பி நடத்தப்பட்டது அல்ல அவருடைய அரசு. அசுர பலம் பெற்றிருந்த அவரே திகைத்துப் போய், அரசுக்கு ஆபத்து என்று பயந்து, (ஒரு நீதிமன்ற உத்திரவும் சேர) எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்தார். பல தலைவர்கள், பத்தொன்பது மாதம் தனிமைச் சிறையில் இருந்தனர். ஜெ.பி. யின் அந்தப் போராட்டம் ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று பின்னர் பாராட்டப்பட்டது. ஆனால், அன்னா ஹஸாரே அதை அமுக்கி விட்டு, தன் இயக்கத்திற்கு ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று, தானே பட்டம் சூட்டுகிறார்!
சரி, மக்கள்? அன்னா ஹஸாரேவிடம் மன உறுதி இருந்தால், அவருடைய இயக்கத்தை நம்பலாம். ஆனால், தன்னுடைய உறுதியின்மையை, அவரே பிரகடனப்படுத்திக் கொண்டதை எப்படி மறப்பது?
குஜராத் அரசைப் பாராட்டி விட்டு – தன்னுடைய மதச்சார்பின்மை சகாக்கள் முணுமுணுத்த உடனே பயந்துபோய், ‘நான் அங்குள்ள முன்னேற்றத்தைத்தான் பாராட்டினேன். வேறு ஒன்றுமில்லை...’ என்று மழுப்பி – அப்போதும் மதச்சார்பின்மை கூட்டத்தின் முனகல்கள் ஓயாததால், ‘குஜராத்தில் மகா ஊழல். எதற்கெடுத்தாலும் லஞ்சம். எனக்கு இப்போதுதான், இங்கு வந்த பிறகுதான் இது தெரிந்தது’ என்று ஒரு குட்டிக் கரணம் அடித்து, கன்னத்தில் போட்டு கொண்டார் இவர்.
ஒன்று – காங்கிரஸ்காரர்கள் மாதிரி ‘குஜராத்தில் எல்லாமே அநீதி’ என்று கூறுகிற பிடிவாதமாவது இருக்க வேண்டும். அல்லது ‘இந்தியாவிற்கே முன் மாதிரி குஜராத்’ என்று கூறுகிற நேர்மைத் துணிவாவது வேண்டும். அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல், அப்படி ஒருநாள், இப்படி ஒருநாள் என்று பேசி, தன் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முனைகிற இவரிடம், எப்படி மன உறுதியை எதிர்பார்ப்பது?
மத்திய அரசு, முதலிலேயே இவருடன் பேச முனைந்தபோது, அதை சர்வ கட்சி முயற்சியாக மாற்றியிருந்தால், எல்லா கட்சியினருமே ‘லோக்பாலின் கீழ் பிரதமர் கிடையாது; நீதித்துறை கிடையாது’ என்ற நிலையை எடுத்திருப்பார்கள். அப்போது அன்னா ஹஸாரே பாடுதான் திண்டாட்டமாகி இருக்கும். ஆனால், ஆட்சியாளர்கள் ஆரம்பத்தில் தாங்களே பேசி, தாங்களே தீர்மானித்து, தாங்களே ஒரு சாதனை புரிந்துவிட்ட மாதிரி, காட்டிக் கொள்ள முனைந்தார்கள்.
அந்தத் தவறிலிருந்து, தொடர்ந்து தவறாகவே இந்த விவகாரத்தை அணுகி வருகிறது மத்திய அரசு. இறுதியில், அன்னா ஹஸாரே மீது அவதூறு பிரச்சாரத்தைக் கொட்டுவது என்று அரசு தரப்பு கேவலமாக முனைந்தபோது, அவர்களுடைய வீழ்ச்சி முழுமை பெற்றது.
லோக்பால் வந்து எதையாவது புதிதாகச் சாதிக்கப் போகிறதா? சட்டங்களா இல்லை? ஊழல் தடுப்புச்சட்டம், இந்திய கிரிமினல் சட்டம் போன்றவற்றின் கீழ், இப்போது யாரும் போராடாமலேயே பிரதமரும் வருகிறாரே? இன்று 2-ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்றவை விசாரிக்கப்பட யார் காரணம்? லோக்பாலா? அன்னா ஹஸாரேவா? சுப்ரீம் கோர்ட் முனைந்தது; தணிக்கை அதிகாரி முனைந்தார்; விசாரணைகள் நடக்கின்றன.
ஆக, சட்டம் மட்டும் ஊழலை ஒழிக்காது; அதை நிர்வகிப்பவர்கள் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும்; இன்றைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, மத்திய தணிக்கை அதிகாரியைப் போல, தேர்தல் கமிஷன் என்றும்தான் இருக்கிறது. ஆனால், அது இருப்பதே டி.என். சேஷன் வந்தபின்புதானே தெரிந்தது? அதுவரை தேர்தல் கமிஷன், அரசின் ஒரு இலாகா போல் அல்லவா செயல்பட்டது? பாட்டு முக்கியம்தான் – ஆனால் பாடகர் மிக முக்கியம்; இல்லாவிட்டால் பாட்டு கெடும்.
ஒவ்வொரு முக்கியப் பதவியிலும் நேர்மையாளர்கள் அமைவதற்கு, மக்கள்தான் வழி செய்ய வேண்டும். தமக்குரிய வாக்கை, இதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மக்கள் முனைகிறபோதுதான், ஊழல் ஒழிப்புக்கு வழி பிறக்கும்.
அதுவரை, டெலிவிஷன் மெகா சீரியல் நடக்கும். வில்லனாக அரசும், ஹீரோவாக அன்னா ஹஸாரேவும், காமெடியனாக கிரண் பேடி போன்றவர்களும் நடிக்கிறார்கள். பார்த்தால் பொழுது போகும்.
அன்னாவிற்கு டில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் நன்றி கூற வேண்டும். கடந்த 11 நாட்களாக அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை !
Comments: