Saturday, August 20, 2011

சட்டசபையில் யார், எங்கே உட்கார வேண்டும்?

சட்டசபையில் ஒரே வரிசையில் தங்கள் கட்சியினருக்கு இருக்கைகள் ஒதுக்கவில்லை என்று தி.மு.க., கூறி வருகிறது. தி.மு.க., வினருக்கு இருக்கை ஒதுக்கியதில் தவறில்லை என ஆளுங்கட்சி கூறுகிறது. இதில் யாருடைய வாதம் சரியானது?தமிழக சட்டசபையை பொறுத்தவரை, புதிய அரசு அமைந்ததும், மீண்டும் கோட்டையில் உள்ள சட்டசபையை பயன்படுத்த முடிவு செய்தது. இதற்காக, சட்டசபை புதுப்பிக்கப்பட்டது. அவ்வாறு புதுப்பித்த போது, முன்பு எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த வரிசையை பயன்படுத்த ஆளுங்கட்சி முடிவு செய்தது.
இதனால், சபாநாயகர் இருக்கை எதிர்புறத்துக்கு மாற்றப்பட்டது. அதேபோல, முன்பு ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த வரிசை, எதிர்தரப்புக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை, தே.மு.தி.க., எதிர்க்கட்சியாக வந்ததால், அக்கட்சிக்கு முதல்வருக்கு எதிர்தரப்பில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.அந்த தொகுப்பில், மொத்தம் 30 இருக்கைகள் உள்ளன. அதில், முதல் ஆறு வரிசைகள் தே.மு.தி.க., வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.


கடைசியில் உள்ள இரண்டு வரிசைகள், தி.மு.க., வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த தொகுப்பில், முதல் வரிசையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், துரைமுருகனுக்கும், ஸ்டாலினுக்கு பின்னால் உள்ள இருக்கை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், அடுத்ததாக, தே.மு.தி.க.,வினருக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள இடங்கள் தி.மு.க., வினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.தாங்கள் வெளிநடப்பு செய்தால், சட்டசபையில் காலியாக இருக்கைகள் இருப்பது தெரியக்கூடாது என்பதற்காக இவ்வாறு இருக்கைகள் ஒதுக்கியதாக தி.மு.க., கருதுகிறது. இது விதியல்ல என்பதும் தி.மு.க.,வின் வாதம்.


அதேநேரத்தில், முந்தைய ஆட்சியில், சட்டசபையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்ட போது, மரபுகளை கடைபிடிக்கவில்லை என்பது ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டு. அதாவது, மரபுப்படி, முன்வரிசை மற்றும் அதற்கு அடுத்த வரிசைகளில், முன்னாள் முதல்வர், முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர்கள் போன்றவர்களுக்கு தான் இடம் ஒதுக்க வேண்டும்.ஆனால், முந்தைய ஆட்சியில், செ.ம.வேலுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் உட்பட முன்னாள் அமைச்சர்களுக்கு கடைசி வரிசையில், ஒதுக்குப்புறமாக இடம் ஒதுக்கப்பட்டது. தற்போதைய சபாநாயகர் ஜெயக்குமார், இரண்டு முறை அமைச்சர் பதவி வகித்திருந்தும், அவருக்கும் கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. முந்தைய அரசு என்ன முறையை கடைபிடித்ததோ, அதைத் தான் தாங்களும் பின்பற்றியுள்ளதாக, ஆளுங்கட்சி தரப்பு கூறுகிறது.


இதில் எது நியாயம் என்று ஆராய்வதை விட, இருக்கைகள் பிரச்னை தவிர, வேறு பிரச்னைக்காக சட்டசபைக்கு வரப் போவதில்லை என்று தி.மு.க., அறிவித்துள்ளதால், இப்போதைக்கு விதிமீறல் பற்றிய சிக்கல் எழவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...