Friday, August 19, 2011

காங்கிரஸ் பேரியக்கம் இனி சாதிக்குமா? அல்லது சமாதியாகுமா?

"இந்திய தேசிய காங்கிரஸ்", 1885 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு இப்படித்தான் பெயரிடப்பட்டது. பிறகு 1969 இல் ஏற்பட்ட பிளவில் "இந்திரா காங்கிரஸ்" என்று நாமகரணத்தை சூட்டிக் கொண்ட ஒரு கோஷ்டி தான் இன்றைக்கு, தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற அடிப்படையில் பழைய வரலாற்றையும் தன்னோடு இணைத்துக் கொண்டு, நூற்றாண்டு கடந்த இந்தியாவின் நடப்பிலிருக்கும் ஒரே கட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. அந்த இந்திரா காங்கிரஸும், சமீபகாலமாக "இத்தாலி காங்கிரஸ்" என்று புலகாங்கிதத்துடன் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கின்றன!



சரியாகச் சொல்லப்போனால், இக்கட்சி ஆரம்பித்ததன் நோக்கமே படித்த இந்தியர்களுக்கு இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஆங்கிலேயர்களுக்கு இணையாக உயர்பதவி வேலைகளை வாங்கித் தருவது தான். ஆனால் நம்ம துரைமார்கள் 'எஸ்மா' 'டெஸ்மா' வெல்லாம் போட்டு இவர்களை வெளுத்துக் கட்டியதால், லைட்டா கொள்கையை சேஞ்ச் பண்ணிக்கிட்டு, ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்பதை தங்கள் கொள்கையாக வைத்துக் கொண்டது! (ஆஹ... கொள்கைன்னு எல்லாம் எதையாவது புடிச்சிகிட்டு தொங்கறது இல்லைன்னு அப்பவே முடிவு பண்ணிட்டாங்க போல!)

அதேமாதிரி, 1907 லயே கோஷ்டி அரசியலிலும் பின்னி பெடலெடுத்திருக்காங்க நம்ம காங்கிரஸ்காரங்க! அதிரடி குரூப்புக்கு பாலகங்காதர திலகரும், அமைதிப்படைக்கு கோபாலகிருஷ்ண கோகலேயும் ஆள் சேர்த்து விளையாடியிருக்காங்க! நம்ம தங்கபாலு, இளங்கோவனுக்கெல்லாம் அவங்ககிட்ட தான் காப்பி ரைட் இருக்கு!

அடுத்ததா 1915 வாக்கில் ஆங்கிலேயர்கள்ட்ட இருந்து நம் நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்ற ஒரே ஒரு இலக்குடன் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவில் களம் காண வந்திறங்கிய காந்திஜிக்கு, தன்னுடைய போராட்டங்களை உடனடியாக செயல்படுத்த, நாடு தழுவிய கிளை அமைப்புகளையும், தொண்டர்களையும் கொண்ட ஒரு அமைப்பாக காங்கிரஸ் தென்படவே, அதில் தன்னை இணைத்துக் கொண்டு போரிட ஆரம்பித்தார்.
1920 க்குப் பிறகு அவர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு வடிவமைத்த போராட்டங்கள் தான், அதுவரையிலும் சுகமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்து ஒவ்வொரு வெள்ளைக்காரனுக்கும், கீழே மிளகாயைச் செறுகி பற்றவைத்தது போல் ஆகிவிட்டது. அடுத்த பத்து ஆண்டுகளிலேயே இனி இங்கிருந்தால் மரியாதையில்லை, வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவெடுத்துவிட்ட அவர்கள், இவர்களை அப்படியே விட்டுச் சென்றால் உலகையே ஆட்டிப் படைத்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்டனர். அதனால் தான் இதை அமைதியற்ற பிராந்தியமாக எப்பொழுதும் வைத்திருக்க வேண்டி, சிலபல உள்ளடி வேலைகளைச் செய்வதற்கு அடுத்த 15 வருடங்கள் அவர்களுக்கு தேவைப்பட்டது!

அதனால் தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தனையோ பேர் தங்கள் உயிர் முதல் எண்ணற்ற தியாகங்களைச் செய்திருந்தாலும், வெள்ளையர்களை வெளியேறத் தூண்டிய அதி தீவிரமான, மக்கள் எழுச்சியுடன் கூடிய வித்தியாசமான போராட்டங்களை முன்னெடுத்ததன் மூலம், "இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்தவர் மஹாத்மா காந்தி" என்று இன்றுவரையிலும் மக்களால் போற்றப்படும் உன்னத இடத்தைப் பிடித்திருக்கிறார்!



அப்படிப்பட்ட தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் பெயர், ஒரு மந்திரச்சொல்லாக நேருவின் மகள் இந்திராவின் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்ட பிறகு, விமானஓட்டியாக இருந்தாலும், இத்தாலிய மருமகளானாலும், ஸ்பானிஷ் மருமகனானாலும் எளிதாக பிரதமராகும் வாய்ப்போ அல்லது அதற்கு நிகரான அதிகாரமோ, மிக இலகுவாக இந்திய மக்களால் அவர்களுக்கு சாத்தியமாகிவிடுகிறது!

அவர்களுக்கு, காந்திஜியின் பிரதான ஆயுதமான "அஹிம்சை" வழியில் நாட்டை நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. பதவியை தக்கவைக்க அவசரநிலை பிரகடனப்படுத்தி அடக்குமுறை ஆட்சியை சாதாரணமாகச் செய்வார்கள். தம் நாட்டின் ஒரு பிரிவு குடிமக்களின் வம்சாவளியினர் அண்டை நாட்டில் சிறுபான்மை சமூகம் என்ற காரணத்தால் அடிமைப்படுத்தப்படும் போது, அந்த ஆட்சியாளர்களிடம், ஏன் அப்படிச் செய்கிறாய் என்று தட்டிக் கேட்டு(!), "இந்தா பிடி ஆயுதம், அவர்கள் எத்தனை லட்சம் பேர் என்றாலும், கொன்று கூறுபோடு!!" என்றும் சொல்வார்கள்!! -(
ஆனால் தங்கள் பெயருக்குப் பின்னால் காந்தி என்ற பெயரை மட்டும் மறக்காமல் போட்டுக் கொள்வார்கள்!
19 ஆம் நூற்றண்டில் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் உமேஷ் சந்திர பானர்ஜி என்ற ஒரு பெங்காலித் தொண்டர். ஆனால் இன்றோ இத்தாலி காந்தி அமெரிக்க சிகிச்சைக்கு செல்லும் போது, சில கழிசடைகளும், கற்றுக் குட்டிகளும் தான் காங்கிரஸைக் காப்பாற்றப் போகும் குழுவில் இடம்பெற்றிருக்கின்றார்கள். ஆனால் இன்றைய நிலையில் அங்கு எல்லா தகுதிகளுடனும் மூத்த காந்தியவாதியான பிரணாப் முகர்ஜி என்ற வங்க தேசத்தவருக்கு அக்குழுவில் ஒரு உறுப்பினர் அடையாளம் கூட வழங்கப்படவில்லை!!



இவ்வளவு ஏன்? இந்த அல்ட்ரா மாடர்ன் காந்தி குடும்பத்தில் எவரும் பிரதமராக முடியாத சூழ்நிலை வந்தபொழுது, எந்தவொரு காங்கிரஸ் காரனும் கிடைக்காமல் ஒரு முன்னால் நிதித்துறை அதிகாரிக்கே இரண்டு முறையாக அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது! அவரும் எந்தத் தவறு நடந்தாலும் நான் வெறும் சைனிங் அத்தாரிட்டி மட்டுமே, டெஸிஷன் எடுப்பதெல்லாம் மேனேஜ்மெண்ட் தான் என்கிற ரீதியிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்!

இவர்களது ஆட்சி பற்றியும் அதன் ஊழல்கள் பற்றியும் சொல்ல வேண்டுமானால் அரைத்த மாவையே அறைப்பது போல் சலிப்பு ஏற்பட்டுவிடும். உடனே ஜனதா கட்சியினரும், பிஜேபி யினரும் ரொம்ப யோக்கியமா ஆட்சி நடத்தினாங்களா? அது இதுன்னு வந்திடுவாங்க. அதனால இந்த கட்சியைப் பற்றி மட்டும், அதன் எதிர்காலத்தை மட்டும் நாம் கொஞ்சம் கூர்ந்து பார்த்தோமானால்,  வெளிச்சம் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை என்பது தான் நிதர்சனம்!

கடந்த 15 வருடங்களாக மத்திய ஆட்சியை நிர்ணயம் செய்து கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தில், மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருவர் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்கிறார்... இன்று வரையிலும் புதிய தலைவரை நியமிக்கக் கூட முடியாமல் கட்சி கோமா நிலையில் இருக்கிறது!!  இங்குள்ள பல கோஷ்டிகளும் தங்கள் தங்கள் தலைவர்கள் தலைமையில் தினம் தினம் வேடிக்கை விநோத சண்டைக்காட்சிகளை மக்களுக்கு மாநிலத்தலைநகரின் மையப்பகுதியில் அரங்கேற்றிக் காட்டிக் கொண்டிருக்கின்றன!

அதில் ஒரு கோஷ்டித் தலைவர், ராஜினாமா தலைவரை நில அபகரிப்பு வழக்கில் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று வேறு மிரட்டுகிறார்!! இப்படியெல்லாம் பேசும் அவர் மனநோயாளியா? அல்லது இதையெல்லாம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொது மக்கள் எல்லோரும் பைத்தியங்கள், என்ன கூத்தடித்தாலும் நமக்கு ஓட்டுப்போட்டு பதவியில் அமர்த்திவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அதி புத்திசாலியா? என்று புரியவில்லை!

இப்படி எல்லா முக்கிய மாநிலங்களிலும் கரையான் புற்றுகளாய் வளர்ந்து கொண்டிருக்கும் கோஷ்டிச் சண்டைகளை அடிக்கடி தட்டிச் சுத்தம் கூட செய்யாமல் அப்படியே விட்டுவிட்டது தான் இன்றைக்கு காங்கிரஸ் என்னும் ஆலகால விருட்சத்தின் ஆணி வேரையே பெறுமளவில் அரித்துவிட்டது. இந்த நிலையில் தான், இதுவரையிலும் விழுதாக இருந்து மரத்தை தாங்கிப்பிடித்திருந்த மேலிருக்கும் (டெல்லியில்) கட்சி அமைப்பும் தள்ளாட்டம் கண்டிருக்கிறது.

இந்த அ.மா. காந்தி குடும்பத்தைத் தவிர வேறொருவர் அந்த இடத்திற்கு வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இப்பொழுது செய்யப்பட்டிருக்கும் "புதிய ஏற்பாடு!" நிச்சயமாக கட்சியை தாங்கிக்கொண்டிருக்கும் விழுதுகளை துவளச் செய்துவிடும்!  இதில் எள்ளளவும் சந்தேகமில்லை!!

ஏனோ மஹாத்மா காந்தி சொன்ன வாசகங்கள் தான் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது. "பல்வேறு கருத்துக்கள் கொண்டோர் ஒன்றிணைந்து இந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கான காரணம் ஒன்று தான். அது தான் "சுதந்திரம்". எப்பொழுது அந்த சுதந்திரம் நமக்கு கிடைக்கிறதோ, அத்துடன் இந்த காங்கிரஸ் பேரியக்கத்தையும் கலைத்துவிட வேண்டும்" என்று!



பாரிஸ்டர் பட்டம், பகட்டான வெளிநாட்டு வாழ்க்கை, இத்தியாதிகளையெல்லாம் துறந்து, ஒற்றை ஆடையுடன், மக்களோடு மக்களாக, கடைசிவரை தொடர்ந்து சேவை செய்து, மதக்கலவரங்களை தடுக்கும் அடுத்தகட்ட போராட்டத்தில் முதல்பலியாக தன்னையே கொடுத்துக் கொண்ட ஒரு மஹான் சொன்ன வார்த்தைகள் என்றும் பொய்த்துப் போகாது!! உண்மையில் சொல்லப்போனால் அந்த "ஸ்தாபன காங்கிரஸ்" என்பது அறுபதுகளின் இறுதியோடு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால் அந்த உரிமையை தனதாக்கிக் கொண்டு நேற்றுவரையிலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த "இத்தாலி காங்கிரஸ்" மத்திய தலைமைக்கே தகுதியான ஆளில்லாமல் ஐசியூ வில் இருக்கிறது!! இதற்கும் ஒரு முடிவு ஏற்பட்டால் தான் இந்தியாவில் புது சிந்தனையோடும், சித்தாந்தங்களோடும் கூடிய உன்னத தலைவர்களைக் கொண்ட நல்லதான சில புதிய கட்சிகள் தோன்றி, இந்தியாவுக்கு ஒரு நல்ல விடிவுகாலம் கிடைக்கும்!!!  

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...