Friday, August 12, 2011

மு.க.அழகிரி மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா முன்மாதிரி முதல்வராக திகழ்வார்: முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ

 மு.க.அழகிரி மற்றும் அவரது ஆட்கள் மீது நடவடிக்கை எடுப்பதின் மூலம் முதல்வர் ஜெயலலிதா முன்மாதிரி முதல்வராக திகழ்வார். தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர் முத்துராமலிங்கம் கூறினார்.
நேற்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் முத்துராமலிங்கம் பேசியதாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் அ.தி.மு.க. பெற்ற மாபெரும் வெற்றியை ஜெயலலிதாவின் கால் அடியில் சமர்ப்பித்து இருக்கிறோம். ஜெயலலிதாவின் ஆட்சியில் மதுரை புதுப்பொலிவு பெற்று எந்த குறையும் இன்றி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.கருணாநிதி மாணவ, மாணவியர்களை கெடுக்கும் வகையில் இலவச கலர் டி.வி.யை வழங்கி கருணாநிதியின் குடும்ப வருவாயை பெருக்க கேபிள் டி.வி. மூலம் படிப்பை பாழாக்கினார்.

ஆனால் முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மடிக் கணினி வழங்குவதாக அறிவித்தீர்கள். 5-வது படிக்கும் மாணவ, மாணவிகள் கூட நீங்கள் மடிக் கணினி வழங்குவீர்கள் என்று மகிழ்ச்சி பூரிப்போடு கூறி வருகிறார்கள். கருணாநிதி ஆட்சியில் அவரது குடும்பம் தான் முன்னேறியது. உங்கள் ஆட்சியில் நாடு முன்னேறுகிறது.

ஒரு பத்திரிகை தாக்குதலின் போது 3 பேர் உயிரிழந்தார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதற்கு முழு காரணம் யார் என்றாலும் தவறு செய்பவர்களை விட தூண்டுபவர்களுக்குதான் அதிக தண்டனை வழங்க வேண்டும். கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தான் இவ்வளவுக்கும் காரணம். அவரையும் வழக்கில் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கை மைனாரிட்டி தி.மு.க. அரசின் முன்னாள் முதல்வரான கருணாநிதி சித்தூரில் நடத்தி அதில் மு.க.அழகிரியை நிரபராதி என்று கூறி விடுதலையை விலைக்கு வாங்கி விட்டார். சித்தூரில் தினமும் ஒரு அமைச்சர் வந்து அச்சுறுத்தினார்கள். அரசு தரப்பு சாட்சிகள் எல்லாம் பயந்து ஓடி விட்டாலும் நான் கடைசி வரை நின்று சாட்சி கூறினேன்.

இதனால் என் மீது கருணாநிதி அரசு பொய் வழக்கு போட்டு என் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோது சட்டப் பேரவையில் அன்றைய எதிர்க்கட்சி துணைத் தலைவரும், கொறடாவும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் கொண்டு வந்தபோது கூட ஏற்க மறுத்து விட்டார்கள்.

அன்றைய தினம் முதல்வர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் முத்துராமலிங்கத்திற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று பாதுகாப்பேன் என்று கூறியதால் அதே அரசு எனக்கு பாதுகாப்பு கொடுத்தது. அதோடு எனது மகன் மீது கொலை முயற்சி வழக்கு போட்டு 3 மாத காலம் துன்புறுத்தினார்கள்.

மு.க.அழகிரி மற்றும் அவரது ஆட்கள் மீது நடவடிக்கை எடுப்பதின் மூலம் முதல்வர் ஜெயலலிதா முன்மாதிரி முதல்வராக திகழ்வார். இதை மதுரை மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதா துவங்கிய குடிநீர் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்டது என்றார்.  அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி குறுக்கிட்டு, கடந்த கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த குடிநீர் வசதி உள்ளிட்ட திட்டங்களை கிடப்பில் போட்டார்கள். தற்போது அனைத்து திட்டங்களும் மேம்படுத்தப்படும் என்றார்.

தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்  முத்துராமலிங்கம் பேசுகையில், திருமங்கலம் தொகுதியில் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி சிப்காட்டுக்காக விவசாய நிலங்களை கைப்பற்றினார்கள். அதை மீட்டு விவசாயிகளிடம் வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...