Saturday, August 20, 2011

ஜெயலலிதாவின் துணிச்சலான நடவடிக்கை; கலைஞரும் கையிலெடுப்பரா?

நில மோசடி புகாரில் சிக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் நில மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன. குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் திமுகவினரே பெரும்பாலும் சிக்குகின்றனர். இந்த வழக்கில் திமுக முன்னாள்  அமைச்சர்களே முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டு படியேறும் நிலையில், புதிய திருப்பமாக அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது தொடுக்கப்பட்ட நிலமோசடி புகார் பொய்யானது என்று காவல்துறை கூறுகிறது. அதேபோல், அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் மீதும் இத்தகைய நில மோசடி குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நில்லையில்,
 
சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் 24-வது வட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சித்தானந்தம் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.இதே வழக்கில் சூரமங்கலம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கனகராஜூம் கைது செய்யப்பட்டுள்ளனர்.நிலம் மோசடி புகாரில் சிக்கியுள்ள இந்த 2 பேரையும் கட்சியில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கி உள்ளார். இதன் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை ஜெயலலிதா நிலைநாட்டியுள்ளார். இதே போல் ஜெயலலிதா மீதான நில ஆக்கிரமிப்பு குற்றசாட்டு வழக்கையும் விரைந்து முடிந்து அவர் தன்னை தூய்மைப்படுத்துவது தான் சிறந்தது.
 
மேலும், எதிர் முகாமான திமுகவில், இந்த வழக்கில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்று தனது கட்சி வழக்கறிஞர் பிரிவுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, இவை யாவும் திமுகவை பழி வாங்கும் நடவடிக்கை என்று நாள்தோறும் சொல்லி வருகிறார். வெறுமனே திமுகவினர் மட்டுமே கைது செய்யப்பட்டால் அரசியல் வழக்கு என்று சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் அதிமுக என அனைத்துக் கட்சியினரும் சிக்குகிறார்கள். இதில் திமுகவின் சதவிகிதம் அதிகமாக உள்ளது என்பதற்காக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஒற்றை வரியில் ஒதுக்கித் தள்ளிட முடியாது. மேலும் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தனது கட்சியினரை நீக்கிய ஜெயலலிதாவை போன்று அதிரடியாக கருணாநிதியும்  நீக்கவேண்டும். 'உங்கள் மீதான புகாரை சட்டரீதியாக சந்தித்து அதில் வெற்றி கண்டு கழகத்தில் மீண்டும் இணையுங்கள்' என்று சொல்லவேண்டும். அவ்வாறு  சொல்லும் துணிவு கருணாநிதிக்கு இல்லையெனில், குறைந்தபட்சம் வழக்கு முடியும் வரை இடை நீக்கமாவது செய்யலாம். அதைவிடுத்து கட்சி வழக்கறிஞர்கள் மூலம் உதவுவதும், ஒரு மத்திய அமைச்சரே இவ்வழக்கில் கைதாகியுள்ளவர்களை சிறையில் சந்திப்பதும், இத்தகைய நிலமோசடி விஷயங்களுக்கு திமுக தலைமையே ஆதரவு அளிக்கிறதோ என்ற என்னம் பொதுமக்கள் மனதில் எழாமல் இல்லை. கலைஞர் புரிந்து கொண்டு சுதாரித்தல்  நன்று. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...