Thursday, August 25, 2011

அ.தி.மு.க. அரசு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்: கட்சிகள் வாழ்த்து

அ.தி.மு.க. அரசு 100 நாள்களைக் கடந்துள்ள நிலையில், பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,
மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. பேரவை புதன்கிழமை கூடியதும் அதிமுக அரசு 100 நாட்களைக் கடந்ததற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.

அ.சௌந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஐந்தாண்டுகளில் மொத்தம் 18, நூறு நாட்கள் உள்ளன. அந்த நூறு நாட்கள் எனக் கூறும் வகையில், இந்த நூறு நாட்கள் இருக்கும். அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற கொள்கையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்): திராவிட இயக்கத்தில் தேர்தலில் வெற்றி பெற, அண்ணா, சம்பத், என்.வி.என். போன்ற தலைவர்கள் களத்தில் இறங்குவார்கள். ஆனால், இப்போது, திராவிட இயக்கத்தைக் கேலிக் கூத்தாக்கும் வகையில் குஷ்பு, வடிவேலு, பாக்கியராஜ் போன்றோர் தேர்தல் களத்தில் பணியாற்றினர். இந்த 100 நாட்களில் பிரமாண்ட அரசியல் தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்னையை முன்னிறுத்திக் கொண்டு வரப்பட்ட தீர்மானமும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிற தீர்மானமும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் ஆகும்.
ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி): நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறும் வகையில், ஏழை மக்களுக்கு ஒளியை ஏற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இலங்கையில் நடந்த இன ஒழிப்பு குறித்த தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாள்தான், தனிச் சாதனை புரிந்த நன்னாள்.
இந்த அரசு சிறப்பாக தைரியமாக செயல்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் இந்த 100 நாள் ஆட்சி ஏற்படுத்தி இருக்கிறது. 100 நாளில், ரூ.415 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி சொன்னதைச் செய்யும் அரசாகத் திகழ்கிறது.
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): கடந்த ஐந்தாண்டுகளில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் இப்போது அவர்களையே சென்றடையக்கூடிய வகையில் இருக்கிறது என்றால் அதுதான் ஒரு அரசின் இலக்கணம். அனைத்துத் துறைகளிலும் முதல்வரே வல்லுநராக இருக்கிறார்.
சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி): 100 என்பது மந்திர எண்ணாக அமைந்திருக்கிறது. 100 நாட்கள் எந்தப் படமும் ஓடுவதில்லை. கடந்த ஆட்சியில் படங்களே ஓடவில்லை. இப்போது, இந்த ஆட்சியின் 100 நாட்களை முதல் முறையாகப் பலரும் பார்க்கிறோம். பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. இதேபோன்று, குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் பி.வி.கதிரவன், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பெண் உறுப்பினர்கள் சார்பில், சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திராவும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...