Saturday, August 13, 2011

சமச்சீர் கல்வி பற்றி சோ

சமச்சீர் கல்வி பற்றி சோ எழுதிய துக்ளக் கட்டுரை வாசகர் விருப்பம்...

இதற்கு, ஜனநாயகம் உகந்தது அல்ல!

எம்.எல்.ஏ. : (இரு மாணவர்களைப் பார்த்து) நாட்டிலே படிப்பு மேலே அக்கறை இல்லை. உங்களையே கேக்கறேன். ஒளுங்கா படிக்கிறீங்களாய்யா நீங்க? என்ன படிக்கிறோம்னு உங்களுக்கே தெரியலை. நீங்க என்ன படிக்கிறீங்கன்னு உங்களுக்கு தெரியுமாய்யா?

ஒரு மாணவன் : எப்படி ஸார் தெரியும்? நீங்கதான் எங்க பாடங்களை தினம் தினம் மாத்தறீங்களே! தினம் ஒரு எஜுகேஷனல் பாலிஸி! காலண்டர்லே தேதி கிழிக்கிற மாதிரி, கிழிச்சுத் தள்றீங்க! என்ன படிக்கிறோம்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? இன்னைக்கு படிக்கிறதுக்கு நாளைக்கு மதிப்பு கிடையாது! எதுக்கு ஸார் படிக்கணும்?

– இது 1961-ல் எழுதி, நடிக்கப்பட்ட ‘கோ வாடிஸ்?’ (எங்கே போகிறாய்?) என்ற எங்கள் நாடகத்தில் வருகிற வசனம்.

ஐம்பது ஆண்டுகள் கழிந்துள்ளன; ஆனால் மாணவர்களின் நிலை மாறவில்லை.

சென்ற ஆட்சியாளர்கள் சமச்சீர் கல்வி என்ற பெயரில், ஒரு ஸ்டண்ட் அடித்தாலும் அடித்தார்கள் – ஆட்சி மாறியும், அதன் பாதிப்பு அகலவில்லை; குழப்பம் தீரவில்லை. புதிய ஆட்சி, ‘சமச்சீர் கல்வி முறையில் மாற்றங்கள் தேவை’ என்று முடிவு எடுத்தது; இதற்கு உயர் நீதிமன்றத் தடை வந்தது; தமிழக அரசு அப்பீல் செய்தது; சுப்ரீம் கோர்ட், ‘ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தேவை’ என்றும், ‘மற்றபடி இதை பரிசீலிக்க ஒரு கமிட்டி நியமிக்கப்பட வேண்டும்’ என்றும் உத்திரவிட்டது.

‘1-ஆம் வகுப்பில் சமச்சீர் முறையில் படித்துவிட்டு, பிறகு அது மாறினால், 2-ஆம் வகுப்பில் வேறு முறை; அதுபோல ஆறாம் வகுப்பில் சமச்சீர் முறை – அது மாறினால் 7-ஆம் வகுப்பில் வேறு முறை’ என்ற விளைவை ஏற்படுத்தக் கூடிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குழப்பத்தைத் தீர்க்கவில்லை; கூட்டியது. இத்துடன் உயர் நீதிமன்ற விசாரணைக்கு, விஷயத்தை அனுப்பி வைத்தது சுப்ரீம் கோர்ட்.

இப்போது சென்னை உயர் நீதிமன்றம், எல்லா வகுப்புகளுக்குமே சமச்சீர் கல்வி கற்பதற்கான புத்தகங்கள் ஜூலை 22-ஆம் தேதிக்குள் கொடுக்கப்பட வேண்டும் – என்று தீர்ப்பளித்து விட்டது.

தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டிற்குச் சென்றது. ‘ஹைகோர்ட் உத்திரவிற்குத் தடை கிடையாது; ஆனால் தமிழக அரசின் அப்பீல் பரிசீலிக்கப்படும்; அதே சமயத்தில் சென்னை ஹைகோர்ட் கூறியபடி, சமச்சீர் கல்விப் புத்தகங்கள் கொடுக்கப்படுவதற்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை அவகாசம்’ என்று உத்திரவிட்டிருக்கிறது.

ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு செய்துள்ள அப்பீல் முடிவாகவில்லை; அப்பீல் தமிழக அரசுக்குச் சாதகமாக முடிந்தால், சமச்சீர் புத்தகங்கள் தேவைப்படாது; ஆனால் சுப்ரீம் கோர்ட் ‘ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்கள் வினியோகிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது; அப்பீலில் இறுதி தீர்ப்பு வருவதற்குள், தமிழக அரசின் நிலைக்கு எதிராக அமைகிற இந்த உத்திரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்பது புரியவில்லை.

இதற்கிடையில் மாணவர்களின் கல்வி ஆண்டில், இரண்டு மாதங்கள் கோவிந்தா! என்ன படிக்கப் போகிறோம் என்பது அவர்களுக்கு இன்னமும் தெரியாது. சென்ற அரசின் சமச்சீர், சமத்தாழ்வுதான்; அதை நீதிமன்றம் ஏற்றது சரியல்ல; கொள்கை முடிவில் நீதிமன்றம் குறுக்கிட்டதாகத்தான் இது காட்சியளித்தது. ஆனால், சரியோ தவறோ, நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தபோது – நிச்சயமற்ற தன்மை தொடர்வதால், மாணவர்களுக்கு ஏற்படுகிற பிரச்சனையை மனதில் கொண்டு – புதிய அரசு, இந்த ஆண்டு அதையே அமல்செய்து, அடுத்த ஆண்டுக்கு மாற்றங்களுடன் கூடிய புதிய முறையை வகுத்திருக்கலாம். அப்படிச் செய்யாமல், ‘அப்பீல்கள் செய்து, தமிழக அரசு மாணவர்களின் குழப்பத்தை நீட்டித்தது; இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்’ – என்ற விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது. இனி சுப்ரீம் கோர்ட் இறுதியாகத் தன் தீர்ப்பைக் கூறிய பிறகு (ஜூலை 26-ஆம் தேதி), மாணவர்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டால்தான் உண்டு.

இவை ஒருபுறம் இருக்க, இந்த சமச்சீர் விவகாரம், வெறும் வாய்ச் சவடால் சீர்திருத்தம் என்பது, அந்த சமச்சீருக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கூறுகிற கருத்துக்களிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

சமச்சீர் வக்காலத்துக்கள் என்ன சொல்கின்றன? ‘வசதி உள்ளவர்கள் மட்டும், நல்ல தரமுள்ள கல்வியைப் பெறுவது; மற்றவர்கள் சாதாரண கல்வியைப் பெறுவது – என்கிற நிலை அநீதி அல்லவா?’

அதாவது, ‘சில வழிமுறைகளில் (மெட்ரிகுலேஷன் போன்ற) தரமான கல்வி புகட்டப்படுகிறது’ என்பதை இவர்கள் ஏற்கிறார்கள். இப்படி வசதியுள்ளவர்கள் பெறுகிற கல்விக்கு நிகராக, வசதி அற்றவர்களுக்குக் கிட்டும் கல்வியையும் உயர்த்த வேண்டியதுதானே? அது முடியவில்லை. அதற்கு வக்கில்லை. ஆகையால், உயர்ந்தவற்றையும் தாழ்த்தி, சமச்சீர் கல்வி தருவதுதான் நியாயம் – என்பது இவர்கள் வாதம்.

‘சிலர் விமானத்தில் போகிறார்கள்; சிலர் கார்களில் போகிறார்கள்; சிலர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள்; ஆனால், பலர் நடந்து போகிறார்களே! ஐயோ, இந்த அநீதி தொடரலாமா? இனி ‘கால் நடை’தான் எல்லோருக்கும் சமச்சீர் போக்குவரத்து’ என்று சொல்வதா நியாயம்?

இந்த சமச்சீர் வக்காலத்துகளுக்கு, வசதியிருப்பவர்களைப் பார்த்தால் துக்கம் பொங்கிக் கொண்டு வருகிறது. அந்தத் துக்கம் கல்வியுடன் மட்டும் நிற்பது என்ன நியாயம்? வசதியுள்ளவர்களின் பிள்ளைகள், நல்ல ஹோட்டல்களில் சாப்பிடுகிறபோது, வசதி அற்றவர்களின் பிள்ளைகள் டீக்கடைகளில் ‘ஸிங்கிள் டீ, டபுள் பொரை’ சாப்பிடுவது என்ன நியாயம்? எல்லோருக்கும் வசதியான ஹோட்டல் சாப்பாடு தர முடியாது; ஆனால் சம நிலை வேண்டும்; ஆகையால் இனி எல்லோரும் ‘ஸிங்கிள் டீ, டபுள் பொரைதான்’! சமச்சீர் சிற்றுண்டி!

இந்தப் பித்துக்குளித்தனத்திற்கு ஒரு எல்லை உண்டா என்ன? சமச்சீர் கல்வி மட்டும்தான் இன்றைய அவசியத் தேவையா? சமச்சீர் சாப்பாடு – சமச்சீர் போக்குவரத்து... என்று கொண்டு வந்து, சமச்சீர் என்ற பெயரில் எதிலும் தரமே கூடாது என்று செய்து விட்டால், அதன் பின்னர் உயர்வு ஏது? தாழ்வு ஏது?

இந்த சமச்சீர் சன்மார்க்கவாதிகளின் பார்வை, இப்போது அரசு அதிகாரிகளின் பக்கம் திரும்பி இருக்கிறது. ‘அதிகாரிகள், தங்கள் வீட்டுச் சிறுவர் சிறுமிகளை, அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும். அவர்களே இதைச் செய்யவில்லை என்றால், அப்புறம் அரசுப் பள்ளிகளுக்கு என்ன மரியாதை?’ என்று ஒரு வாதம் புறப்பட்டிருக்கிறது. இத்துடன் விடுவானேன்? ‘அரசு அதிகாரிகள் காரிலோ, வேறு எந்த வாகனத்திலோ போகக்கூடாது; அவர்கள் அரசு பஸ்ஸில்தான் – மன்னிக்கவும் – அரசுப் பேருந்தில்தான் செல்ல வேண்டும்; இல்லாவிட்டால், அரசுப் பேருந்துகளை யார் மதிப்பார்கள்?’ என்று வாதம் புரிந்து, அரசு அதிகாரிகளை ஒரு அமுக்கு அமுக்க வேண்டியதுதானே!

அதே மாதிரி, அந்த அதிகாரிகள் தங்கள் வீடுகளில் அல்லது ஃப்ளாட்களில் குடியிருக்கும் அக்கிரமத்தை நிறுத்த வேண்டும். பல பிள்ளைகள் குடிசைகளில் வாழ்கிறபோது, இந்த அரசு அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு வீடும், ஃப்ளாட்டும் வேண்டிக் கிடக்கிறதா? அட்டூழியம். குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில்தான் அவர்கள் இனி குடியிருக்க வேண்டும். அப்போதுதான் சமச்சீர் குடியிருப்பு உருவாகி, சமநீதி வேரூன்றி, சமத்தாழ்வு முழுமை அடையும்.

அதாவது, சமத்துவம்தான் நமது லட்சியம் என்றால், அதைக் கல்வியோடு நிறுத்துவானேன்? எங்கும் சமத்துவம், எதிலும் சமத்துவம் வேண்டாமா? உணவு, இருப்பிடம் போன்றவையும் தேவைகள் அல்லவா? அதில் எல்லாம் சமத்தாழ்வு வேண்டாமா? இதுதான் லட்சியம் என்றால் – பேசாமல், கம்யூனிஸப் பிரேதத்தை, அதன் சமாதியிலிருந்து தோண்டி எடுத்து, அந்தப் பிரேதத்திற்கு சமநீதி இயந்திரத்தைப் பொருத்தி, அதை இயக்கி, முழு சமத்தாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!

இந்த சமச்சீர் பேர்வழிகள், சென்ற அரசு, சமச்சீரினால் கல்வியைத் தாக்கியபோது, அதை ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்கள். தரம் தாழ்வது பற்றி அப்போது இவர்கள் பேசவில்லை. சரி. இப்போது, ‘சமச்சீர்தான் உயர்வு’ என்கிறார்கள். ஒரே பாடத் திட்டம் வந்தால், அது உயர்வாகி விடுமா?

தரமுள்ள கல்வி தரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முயற்சியில் நம்பிக்கை; பல வகைப்பட்ட திறன்களுக்கு ஊக்கம்; பொதுஅறிவு; நல்ல நடத்தை; ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிற திறமை; தன்னுடைய எண்ணத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிற திறன்; தன்னம்பிக்கை... போன்ற பல நன்மைகள் கிட்டுகின்றன.

அதனால்தான், நல்ல பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், தைரியமாகப் பேசுகின்றன; நன்றாக நடந்து கொள்கின்றன; நம்பிக்கையுடன் உலவுகின்றன. இந்த மாதிரி கல்வி தரக் கூடிய தன்னம்பிக்கை, ஆங்கில அறிவு, தைரியம் போன்றவற்றுக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் உதாரணமாகத் திகழ்கின்றனர்; இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கூட அவர்களில் ஒருவர். அதனால்தான், இம்மாதிரி கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக, சமத்தாழ்வு கல்வியை மாற்றுவதற்கான நடவடிக்கையை அவர் எடுத்தாரோ, என்னவோ!

இந்த மாதிரி கல்வியைப் புகட்டும் பள்ளிகளில் ஒரு தனி கலாசாரம் நிலவுகிறது; அது ஜாதிக் கலாசாரம் அல்ல; பணக் கலாசாரம் அல்ல; அது முனைப்பு கலாசாரம்; தன்னம்பிக்கையை தருகிற கலாசாரம். பாடத் திட்டங்களினால் மட்டும் அதை சாதிக்க முடியாது. நல்ல ஆசிரியர்கள் தேவை; நல்ல நோக்கம் தேவை. இன்றைய அரசுப் பள்ளிகளில் இவை இருக்கின்றன என்று கூறுவது அபத்தம் கூட அல்ல – அநியாயம்.

‘சரி, இதெல்லாம் வேண்டாம்; நம்மால் ஆகாது; ஆகையால், சமத்தாழ்வுதான் ஒரே வழி’ என்று தீர்மானித்த பிறகு – அதை ஏன் பள்ளிகளோடு நிறுத்த வேண்டும்? அது என்ன நியாயம்? கல்லூரியில் சமத்தாழ்வு வேண்டாமா? உதாரணத்திற்கு, சிலர் மட்டுமே – மருத்துவப் படிப்பு பெற முடிகிறது. அதாவது வசதி படைத்த வர்க்கத்தினர் மட்டுமே மருத்துவப் படிப்பு பெற முடிகிறது. அநியாயம் இல்லையா இது?

எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும், அலோபதி மருத்துவ முறையை போதிக்க முடியாது. ஆகையால், சித்த வைத்தியம்தான் இனி மருத்துவக் கல்லூரிகளில் போதிக்கப்படும் என்று சட்டம் இயற்றினால் – அடடா! நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது! சமச்சீர் மருத்துவம் வந்து விடுமே! சிலர் மட்டும், உயர்ந்த பயிற்சி பெறுகிற அவலநிலை மாறி எல்லோருக்கும் லேகியம், சூரணம் பற்றிய பயிற்சி! ஆஹா!

இந்த சமச்சீர் அபத்தத்தை ஆரவாரத்துடன் வரவேற்பவர்கள் யார் என்று பார்த்தாலே, இது வெறும் உடான்ஸ் என்பது புரியும். தங்கள் வீட்டுக் குழந்தைகளை, மிக நல்ல தனியார் பள்ளிகளிலும், அயல்நாடுகளிலும் கூட படிக்க வைக்கிற தலைவர்கள்; வசதிக் குறைவு இல்லாத அறிவாளிகள்... போன்றவர்கள்தான் இந்தச் சமச்சீர் வக்காலத்து ஆசாமிகள்... அதாவது, வசதியானவர்களால் வசதியானவர்களுக்காக நடத்தப்படுகிற, வசதியானவர்களின் பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்று. இந்த மேடை முழக்கத்தினால் அவர்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. இவர்களுடைய சமச்சீர் புரூடா, சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளும். அதனால் அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்களுடைய வீட்டுப் பிள்ளைகள், சென்ட்ரல் போர்ட் முறையில் படிப்பார்கள். சமச்சீர் சாமியாட்டம் அவர்களைப் பாதிக்கப் போவதில்லை.

ஆகையால், இந்த சமத்தாழ்வை வரவேற்கிற அப்பாவிகள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். தங்கள் மகன் அல்லது மகள் என்ன கல்வி பெறுவது என்பது, பெற்றவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது அல்ல என்றால் – அதற்கு ஜனநாயக ஆட்சி முறை உகந்தது அல்ல. பேசாமல், சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்துவிட வேண்டியது தான்.

இப்போது, சமச்சீர் குடாக்குத்தனம், சமூகத்தைப் பீடித்திருப்பதால் என்ன நடக்கும்? இந்த சமச்சீர் தாக்குதலினால் பாதிக்கப்படாதவர்கள் பலர் உண்டு; அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வீட்டுப் பிள்ளைகளை, மத்திய கல்வி முறைக்கு (சென்ட்ரல் போர்ட்) மாற்றி விடுவார்கள். இந்தச் சமச்சீர் பித்துக்குளித்தனம், தன்னுள்ளே அடக்கியுள்ள நன்மை இது ஒன்றுதான்!


சரி, தமிழகத்தின் கதி? அதற்கென்ன? இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்நாளும் காப்போம் – கல்வியின் தரத்தினை அழித்திடுவோம்!.

நன்றி: துக்ளக்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...