சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் வீட்டு வசதி வாரிய இடங்களை ஒதுக்கீடு செய்ததில் பல்வேறு முறைகேடுகளும், ஊழல்களும் நடந்துள்ளன. விதிகளை மீறி பலருக்கு அரசு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு ஊழியர், தொழிற்சங்க பிரதிநிதி 6 ஆயிரம் சம்பளம் பெறுபவர். பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவருக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டது.
10 நாளில் ரூ.60 லட்சம் கட்டுகிறார். 2 நாளில் விற்பனை பத்திரமும் பெற்றுள்ளார். இவரைப் போல் தமிழ்நாடு முழுவதும் பலர் இடம் பெற்றுள்ளனர். சமூக சேவகர் என்ற பெயரில் கருணாநிதி குடும்பத்தில் வீட்டு வேலை பார்த்த 8 பேருக்கு மனை ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு மனையின் மதிப்பு ரூ.40, ரூ.50, ரூ.60 லட்சம், இந்த 8 பேரில் ஒருவர் கூட வருமான வரி கட்டியதில்லை.
கருணாநிதியின் மனைவி வீட்டில் வேலை பார்ப்பவர்கள், துணைவியார் ராஜாத்தி வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கும் வீட்டுமனை கொடுக்கப்பட்டுள்ளது. சமூக சேவகர் பட்டியலில் தயாநிதி அழகிரிக்கு சோழிங்க நல்லூரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு வந்தால் தங்க இடமில்லையாம். எனவே வீட்டு வசதி வாரியத்தில் இடம் கொடுங்கள் என்று கேட்டு இடம் வாங்கி உள்ளார். இதன் மதிப்பு ரூ.60 லட்சத்து 30 ஆயிரம். த. கிருஷ்ணன் கொலை வழக்கில் இடம் பெற்ற எஸ்.ஆர். கோபிக்கும் சமூக சேவகர் பட்டியலில் மதுரையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரத்ததானம் அதிகம் செய்ததாக அவர் சர்டிபிகேட் கொடுத்துள்ளார். எத்தனையோ பேர்களின் ரத்தத்தை குடித்தவர் இவர். லயன்ஸ் கிளப்பில் ரத்ததான சான்றிதழ் வாங்கி கொடுத்துள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் கொலைகாரன், கொள்ளைக் காரர்களுக்கெல்லாம் வீட்டு வசதி வாரியத்தில் வீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரையில் பொட்டு சுரேஷ் எட்டு பேருக்கு சிபாரிசு செய்துள்ளார். அதில் ஒருவர் கூட வருமான வரி கட்ட வில்லை. வீட்டு வசதி வாரிய இடத்துக்கு போலியாக போட்டோ ஒட்டி இடம் பெற்றுள்ளனர். இது கண்டுபிடிக்கப்பட்டு 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
வடசென்னை பொதுக் கூட்டத்தில் நேற்று கருணாநிதி பேசும்போது, 100 நாட்களில் கொலை, கொள்ளை நடந்ததாக கூறி உள்ளார். தி.மு.க. ஆட்சியில் ஒரே மாதத்தில் 40 கொலைகள் நடந்தது பற்றி சட்டசபையில் நான் கேட்டதற்கு அப்போது கருணாநிதி பதில் கூற வில்லை.
தமிழ்நாட்டை கூறு போட்டவர்கள் எங்களை குறை கூறுவதா? கண்ணதாசன் எழுதிய வன வாசத்தை படித்தால் கருணாநிதியின் முழு சுயரூபமும் தெரியும். அண்ணா வையே ஏமாற்றியவர் இவர். புரட்சித்தலைவி ஆட்சியை குறை கூற இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
காட்பாடியில் வீட்டு வசதி சங்கத்தில் முன்னாள் அமைச்சர் துரை முருகனின் குடும்பத்தினர் 15,600 சதுர அடி இடத்தை ஏலத்தில் எடுத்தனர். பின்னர் சிக்கல் வந்து விடும் என்று கருதி 2009-ல் திருப்பி கொடுத்து விட்டனர். ஆனால் இவரது தம்பி துரைசிங்காரமும் அவரது மனைவியும் இடத்தை திருப்பி கொடுக்க வில்லை. நேற்று சட்டசபைக்கு வந்த கருணாநிதி தனக்கு உள்ளே வீல்சேரில் வந்து உட்கார வசதி செய்யப்படவில்லை என்று கூறி இருக்கிறார்.
2001-2006-ல் கருணாநிதி சட்டசபைக்கு வந்து கலந்து கொள்ளாமல் கையெழுத்து மட்டும் போட்டு சென்றவர் இப்போது சாக்கு போக்கு கூறுகிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவருடன் படித்த மகேந்திரன் என்பவருக்கு 61 ஆயிரத்து 600 சதுர அடி இடம் விழுப்புரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
சதுர அடிக்கு 100 ரூபாய் என நிர்ணயித்துள்ளனர். ஆனால் மார்க்கெட் மதிப்பு இப்போது சதுர அடி ரூ.1500 ஆகும். எனவே இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதேபோல் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் உறவினர் உள்பட பலரும் முறைகேடாக இடம் பெற்றது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சென்னையை சிங்கார சென்னையாக ஆக்கப்படும்.
ஜெயலலிதா (குறுக்கீட்டு):- நம்முடைய கோஷம் எழில் மிகு சென்னை. அவர்கள் கோஷம் சிங்கார சென்னை.
வைத்திலிங்கம்:- அம்மாவின் அறிவிப்புபடி எழில் மிகு சென்னையாக கண்டிப்பாக ஆக்குவோம். தி.மு.க. ஆட்சியில் பலகோடி முறைகேடு ஊழல் செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment