Wednesday, August 24, 2011

‘மங்காத்தா’ தயாநிதி அழகிரி, தலையை உள்ளே இழுக்கிறார்!





ஆட்சி மாற்றத்துடன், அடக்கி வாசிக்கத் தொடங்கிய அழகிரி மகன் தயாநிதி, ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருப்பதே அச்சுறுத்தல் என்று நாட்டை விட்டே கிளம்பினார். அப்படியிருந்தும், தமிழகத்திலுள்ள தனது தொழில்களை ஒரேயடியாகக் கைவிட்டுவிட அவர் தயாராக இருக்கவில்லை. காரணம், கோடிக்கணக்கான பணம் அவற்றில் முடங்கியிருந்தது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சினிமா தொழிலில் அவர் தொங்கு நிலையில் விட்டிருந்த பல கொடுக்கல் வாங்கல்கள் இருந்தன. அவற்றையும் செட்டில் செய்து, அந்தத் துறையில் பெரிதாக புகார்கள் எழாதவாறு பார்த்துக் கொண்டார். இன்றைய தேதிவரை அவர்மீது என்ற புகாரும் பதிவாகவில்லை.

இப்படியான நிலையில்தான், அவர் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருந்த திரைப்படம் ‘மங்காத்தா’ முடிவடையும் கட்டத்துக்கு வந்தது.

துரை தயாநிதி நாட்டை விட்டு வெளியேறும் அவசரத்தில், தொழில் ரீதியாக பல ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தன. அவற்றில் ஒன்றாக இருந்தது, மங்காத்தா படத் தயாரிப்பு. ஆனால், நாட்டை விட்டு வெளியேறும் அவசரத்தில், இந்த புராஜெக்டில் பெரிதாக அக்கறை காட்டியிருக்கவில்லை அவர்.

அதுவரை செலவு செய்தது இருக்கட்டும். இதற்கு மேலும் செலவு செய்வதானால், படத்தை விற்று, அதிலிருந்து செலவு செய்து கொள்ளுங்கள் என்று பச்சைக்கொடி காட்டிவிட்டுப் பறந்திருந்தார். அது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. இதனால், மங்காத்தா, எப்போது வெளியாகும் என்பதிலேயே இழுபறிகள் ஏற்பட்டிருந்தன.

இந்தியாவுக்கு வெளியே சென்றபின், கையில் அவருக்கு ஓய்வு நேரம் அதிகம். நிதானமாக வரவு-செலவு கணக்கு பார்த்ததில், இந்தப் படத்தை அப்படியே கைவிடுவதில் உள்ள பொருளாதார ரீதியான பாதிப்பு நன்றாகவே புரிந்தது.

இதற்கிடையில் தமிழகத்தில், அவர்மீது எந்த மோசடி வழக்கும் பதிவாகும் அறிகுறிகள் தென்படவில்லை. எனவே, நாட்டுக்கு வெளியே இருந்தபடி, மங்காத்தா படத்தை தமிழகத்தில் ரிலீஸ் பண்ணும் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியிருந்தார். இந்தக் கட்டத்தில் அவரது சினிமா கம்பனியான கிளவுட் செவன், மங்காத்தா படத்தை ரிலீஸ் பண்ணப் போகின்றது என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் அடிபடத் தொடங்கியிருந்தது.

இந்த நிலையில்தான், அரசியல் ரீதியாக ஒரு வில்லங்கம் வந்து சேர்ந்தது.

சட்டமன்றத்தில் அமைச்சர் வேலுமணி, “கடந்த ஆட்சியில், மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை வளைத்து, அப்போதைய முதல்வரின் மகன் அழகிரியும் அவரது கூட்டாளிகளும் கிரானைட் குவாரிகள் நடத்தி கொள்ளையடித்தனர். தற்போது, அந்த குவாரிகள் மூடப்பட்டு விட்டன. அவற்றுக்கான லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது பற்றிய விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு உடனே பதில் வந்தது அழகிரியிடமிருந்து. “எனக்கும் கிரானைட் தொழிலுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அமைச்சர் வேலுமணி, தான் கூறிய குற்றச்சாட்டுகளை உடனடியாக நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்மீது வழக்குத் தொடுப்பேன்”

இதில் என்ன வில்லங்கம் இருக்கிறது?

அழகிரி கூறியது கிட்டத்தட்ட சரிதான். அழகிரிக்கும் கிரானைட் தொழிலுக்கும் நேரடிச் சம்மந்தம் கிடையாதுதான். ஆனால், அழகிரி மகன் துரை தயாநிதியின் தொழில்களில் ஒன்று கிரானைட் தொழில்!

அமைச்சர் வேலுமணி குறிப்பிட்ட விவகாரம், துரை தயாநிதியும் அவரது நண்பர் ஒருவருமாகச் சேர்ந்து நடாத்திய வியாபாரம்தான்! இவர்களுடைய வியாபாரத்தில் பல கோடிகள் புரண்டதே, நிழலான நடவடிக்கைகளால்தான். கடந்த ஆட்சியில் யாரும் அதைக் கண்டு கொண்டதில்லை. மதுரை மன்னரின் இளவலின் வியாபாரத்தில் யாரும் தலையிட முடியுமா?

இப்போது அழகிரி, அமைச்சர் வேலுமணிக்கு சவால் விட்டுள்ள நிலையில், துரை தயாநிதியின் கிரானைட் தொழிலைத் தோண்டத் தொடங்கியுள்ளது தமிழக அரசு. தேவையில்லாமல் வாயைக் கொடுத்து, தன் மகனை மாட்டி விட்டிருக்கிறார் அஞ்சா நெஞ்சர்!

நிலைமை எதிர்பாராத விதமாக இப்படித் திரும்பவே, ஆமை தனது ஓட்டுக்குள் தலையை இழுத்துக் கொள்வதுபோல, மீண்டும் தலையை உள்ளே இழுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது, துரை தயாநிதிக்கு! இதற்குப் பிறகும், சொந்த கம்பனி மூலம் மங்காத்தா படத்தை வெளியிட்டால், கிரானைட் விவகாரங்கள் இந்தப் படத்தையும் சேர்ந்து இழுத்து வீழ்த்திவிடும்.

வேறு வழியில்லாமல், மங்காத்தா திரைப்படத்தை விற்றுத் தலைமுழுகிவிட்டார் துரை தயாநிதி.

இப்போது மங்காத்தா, வேறு ஒரு பேனரில் வெளியாகவுள்ளது! ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், மங்காத்தா திரைப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. ஞானவேல்ராஜாவின் நிறுவனம் இது என்று விளம்பரப்படுத்தப்படும் ஸ்டூடியோ கிரீன், உண்மையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமாரின் பினாமி நிறுவனம் என்ற பேச்சு நீண்ட காலமாகவே கோடம்பாக்கத்தில் உண்டு.

எப்படியோ, துரை தயாநிதியின் ஒரு சிக்கலைத் தீர்க்க, பெட்டியிலிருந்த ‘மங்காத்தா’ கைமாறிவிட்டது. ஆனால், கோட்டையிலுள்ள ‘பெரியாத்தா’ மற்றைய சிக்கல்களில் இருந்து லேசில் தப்ப விடமாட்டாரே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...