ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழியின் தரப்பில், சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் முக்கிய ஸ்டேட்மென்ட் ஒன்று பதிவாகியுள்ளது. காங்கிரஸ் அரசின் மீதுள்ள கோபத்தை இந்த ஸ்டேட்மென்டில் காட்டியுள்ள தி.மு.க., “நாங்கள் சிக்கினால், உங்களையும் விவகாரத்துக்குள் இழுத்து விடுவோம்” என்று மறைமுகமாக மிரட்டல் விட்டிருக்கிறது!
தி.மு.க.வின் இந்த புதிய ஸ்டான்ட், டில்லி வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் விடாமல், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மாத்திரம் வழங்கி, அதனால் கனிமொழி, ஆ.ராசா உட்பட சிலர் ஆதாயம் அடைந்தார்கள் என்பதே, சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்கின் சுருக்கம். இந்தக் குற்றச்சாட்டில்தான், கனிமொழி சிறையில் இருக்கிறார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, கனிமொழியின் ஸ்டேட்மென்ட் என்ன?
“ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை, அப்போதைய அமைச்சர் ஆ.ராசா தனிப்பட்டு எடுக்கவில்லை. அந்த முடிவை எடுத்ததில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் பங்குண்டு” என்று சி.பி.ஐ. தனி கோர்ட்டில் கனிமொழி கூறியுள்ளார்.
தனது கூற்றுக்கு ஆதாரமாக, பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஆ.ராஜா ஆகிய மூன்று பேரும் இதுகுறித்து ஆலோசனை நடத்தியதற்கான ஆதாரம் ஒன்றையும் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறார் கனிமொழி. அவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரம், இந்த மூவரும் கலந்துகொண்டு, “ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் விடுவதில்லை” என்று முடிவெடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற்ற உரையாடல்கள் அடங்கிய குறிப்பேடு (மினிட் புக்)!
“ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலம் விடுவதில்லை” என்ற முடிவை தனக்கு தெரியாமலேயே ஆ.ராஜா எடுத்து விட்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ந்து கூறி வருகிறார். அப்படியான நிலையில், கனிமொழி இவ்வாறு குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதற்கு ஆதாரத்தையும் தூக்கிப் போட்டிருப்பது, அதை மேலும் விறுவிறுப்பாக்கி காங்கிரஸ் கட்சியை பதற வைத்திருக்கிறது!
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை, டில்லி பாட்டியாலா தனி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ.யின் வாதங்கள் முடிவு பெற்றுவிட்டன. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதங்களை நீதிபதி சைனி கேட்டு வருகிறார்.
முதல் ஆளாக, ஆ.ராசா தனது வாதத்தை முன்வைக்கத் தொடங்கிய முதலாவது நாளில், பிரதமரின் பெயரையும், அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் பெயரையும் பிரஸ்தாபித்தார். அப்போது அது, பரபரப்பை ஏற்படுத்தியது.
இரண்டாவது நாளும் தொடர்ந்த ஆ.ராசாவின் வாதத்தில், பிரதமரையும், ப.சிதம்பரத்தையும் மேலும் கேஸில் இழுத்து, சிக்கலில் ஆழ்த்துவார் என்று பலத்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பல்டியடித்தார் அவர்.
தான் யாரையும் நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை என்றார் ஆ.ராசா.
முதல் நாள் வாதத்திலும், ஆ.ராசா தரப்பில் மிகக் கவனமாகவே பிரதமருக்கும், ப.சிதம்பரத்துக்கும் எதிரான வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்திருந்தன. தனது கூற்றை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்கள் ஏதாவது தன்வசம் இருப்பதாக அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இப்போது, ஆ.ராசாவின் கூற்றை நிரூபிக்கத் தேவையான ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, கனிமொழியால்!
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஆ.ராசாதான் மத்திய அமைச்சராக இருந்தவர். அவர், பிரதமர் மற்றும் ப.சிதம்பரத்துடன் தாம் கலந்து ஆலோசித்ததாக முதலில் கூறுகிறார். ஆனால், அதற்கான ஆதாரம் எதுவும் தன்னிடம் இருப்பதாக அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சில நாட்களின்பின், கனிமொழி ஆதாரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்கிறார்.
கனிமொழி, மத்திய அமைச்சருமல்ல, தொலைத் தொடர்பு அமைச்சின் அதிகாரியாக இருந்தவருமல்ல. ஆனால், பிரதமர், அன்றைய நிதியமைச்சர், மற்றும் அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் கலந்து கொண்ட முக்கிய முடிவெடுக்கும் கூட்டத்தின் மினிட் புக் அவரிடம் இருக்கிறது! அதை இப்போது தாக்கல் செய்கிறார்.
கனிமொழி, இந்த ஆதாரத்தை தாக்கல் செய்யப்பட்டபோது, கோர்ட்டில் அவருக்காக வாதாடியவர், மூத்த வழக்கறிஞர் சுஷில்குமார். கனிமொழிக்காக வாதாடும் இதே சுஷில்குமார்தான், ஆ.ராசாவுக்காகவும் வாதாடுகிறார்.
இதிலிருந்து சில விஷயங்களை மிகச் சுலபமாக ஊகித்துக் கொள்ளலாம்.
1) ஆ.ராசா, தனது வாதத்தின்போது முதல்நாள் பிரதமர் மற்றும், ப.சிதம்பரம் பற்றி பிரஸ்தாபித்துவிட்டு, மறுநாளே அதை மழுப்பியது, தி.மு.க. தரப்பால் காங்கிரஸ் கட்சிக்கு காட்டப்பட்ட ஒரு எச்சரிக்கை சிக்னல்.
2) அது ஒரு எச்சரிக்கை மாத்திரமே என்பதால், ‘கைவசம் இருந்த’ ஆதாரங்கள் எதுவும் காண்பிக்கப்படவில்லை.
3) எச்சரிக்கை விடுத்தபின் சில நாட்கள் வெயிட் பண்ணியிருக்கிறார்கள். கனிமொழி விடுவிக்கப்படவில்லை.
4) இப்போது, ராசாவுக்காக வாதாடிய அதே வக்கீல், கனிமொழிக்காக வாதாடும்போது, ராசாவின் முன்னாள் அமைச்சு தொடர்பான ஆதாரம் ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த ஆதாரம், பிரதமரையும், ப.சிதம்பரத்தையும் கிளீனாக கேஸில் இழுத்து விடுகிறது.
5) இத்துடன், கனிமொழி குறைந்தபட்சம் ஜாமீனிலாவது வெளியே விடப்பட வேண்டும் என்று லாஸ்ட் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் மத்திய அரசு மசியாவிட்டால்…
6) நிச்சயமாக இவர்கள் வசம், மேலும் சில ஆதாரங்களும் உள்ளன!
No comments:
Post a Comment