Friday, September 22, 2017

ஜெயலலிதா மரணத்தில் இன்னும் விலகாத 16 மர்மங்கள்!

மிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பால் (Cardiac Arrest) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்' என்று அந்த மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை அமைக்கப்படும்' என அறிவித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'எந்த நீதிபதி விசாரணையைத் தொடங்கப் போகிறார்?' என தமிழக அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. ‘75 நாள்களாக ஜெயலலிதாவைச் சுற்றி என்ன நடந்தது? அவர் இயற்கையாகத்தான் இறந்தாரா?' என்ற சந்தேகம் இன்றளவும் பொதுமக்கள் மத்தியில் உலவி வருகிறது. 'எங்கள் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இந்த விசாரணைக் கமிஷன் உதவும்' என அப்போலோ மருத்துவமனையும் அறிக்கை வெளியிட்டுவிட்டது. ஆனால், 'ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவருக்கு உண்மையில் என்ன ஆனது என்பதை வெளிக்கொண்டு வருவதில் அரசு இயந்திரங்கள் ஏன் இவ்வளவு மெத்தனம் காட்டுகின்றன?' என்ற கேள்வி எழாமல் இல்லை. 
ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களைப் போக்குவதற்காக அவர் இறந்து 60 நாள்கள் கழித்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பெயலும் அப்போலோ மருத்துவர்களும். இந்த சந்திப்பில், 'முதல்வருக்கு வீட்டில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டபோது அவரது மூச்சுத்திணறல் மேலும் அதிகமாகியது. அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது மூச்சு மண்டலம் திடீரென்று செயலிழந்துபோனதுதான் (Acute Respiratory Failure) அவருக்கு ஏற்பட்டுள்ள மூச்சுத் திணறலுக்கான காரணம் என்ற முதல்கட்ட முடிவுக்கு வந்தனர். 'திடீரென்று அவரது மூச்சு மண்டலம் ஏன் செயலிழந்து போக வேண்டும்' என்ற கேள்விக்கான பதிலை அவர்கள் தேடுகையில், 'கிருமித் தொற்றுதான் (Infection) அதற்கான காரணம்' என்ற முடிவை எட்டினர்.  'இந்தக் கிருமித் தொற்றானது சிறுநீரகம் அல்லது நுரையீரலில் துவங்கியிருக்கலாம்' என்று கருதினர்.
இதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டபோது அவரது ரத்தத்திலேயே பாக்டீரியா கிருமித் தொற்று இருப்பதை அறிய முடிந்தது. 'இந்தக் கிருமிகள் அவரது இதயத்தின் உள் அடுக்கில் குடிகொண்டு Endocarditis (இருதய உள்ளடுக்கு அழற்சி) என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன' என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது. மேலும், இந்தக் கிருமித் தொற்றானது உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்புகளையும் முடுக்கிவிட்டிருந்தது; அவை நோயை எதிர்த்ததோடு நிற்காமல் அவரது உடல் உறுப்புக்கள் பலவற்றையும் தாக்கத் தொடங்கியிருந்தன என்பதை அறிந்துகொண்டனர். இந்த செயல்பாடே செப்சிஸ்(Sepsis) என்று அழைக்கப்படுகிறது. இதுவே முதல்வரின் மூச்சு மண்டலத்தைத் தாக்கியிருப்பதையும் அதன் விளைவாகவே அந்த மண்டலம் திடீரென்று செயலிழந்து போயிருப்பதையும் அவர்கள் அறிந்துகொண்டனர். இதன் காரணமாக அவருக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. கூடுதலாக, முதல்வருக்கு இருந்த பிற நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவையும் இந்தப் பிரச்னைகளை சிக்கலாக்கின' - இது லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலின் கருத்து. 
“அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முதல்வர் கொண்டுவரப்பட்டபோது அவர் அரைத் தூக்க நிலையில்(drowsy) இருந்தார். முதல் ஆறு நாள்களுக்கு மாஸ்க் மூலம் பிராண வாயுவைக் கொடுத்தோம். அதன்பிறகும் அவரது மூச்சுத் திணறல் குறையவில்லை; எனவே, அவரது மூச்சுக் குழாய்க்குள் செயற்கை மூச்சுக் குழாய் நுழைக்கப்பட்டு (intubate) செயற்கை சுவாசக் கருவியுடன் (ventilator) இணைக்கப்படவேண்டி வந்தது. இதன் பிறகும் கூட அவரது மூச்சுத் திணறல் குறையவில்லை. செயற்கை மூச்சுக்குழாய் நுழைக்கப்பட்டதற்கு 10 நாள்களுக்குப் பிறகு அவரது மூச்சுக் குழாயிலேயே துளைபோட்டு (Tracheostomy) செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது” - இது மருத்துவர் பாபு ஆப்ரஹாமின் கூற்று.
“முதல்வர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்த் தொற்று இருந்ததை அறிந்துகொண்டோம்” - இது டாக்டர். பாலாஜியின் வாதம்.
புகழேந்திமருத்துவர்களின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை அடிப்படையாக வைத்து விரிவான ஆய்வை நடத்தி முடித்தனர் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி மற்றும் கோவை மருத்துவர் ரமேஷ். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இவர்கள் முன்வைத்த ஆய்வுக் குறிப்புகள் பொதுவெளியில் அதிர்வை ஏற்படுத்தின. ஜெயலலிதா மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை இவ்விரு மருத்துவர்களின் ஆய்வுகளில் இருந்தே பார்ப்போம். 
1. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட், மருத்துவர்கள் பாபு ஆப்ரஹாம், பாலாஜி ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழகப் பத்திரிகைகளில் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதிக்குள் வெளிவந்த பெரும்பாலான தகவல்களோடு ஒத்துப்போகின்றன. இதே பத்திரிகைகளில், 'முதல்வர் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே காய்ச்சலால் அவதியுற்றார்' என்ற செய்திகள் உள்ளன. செப்டம்பர் 21-ம் தேதியன்று அவரால் திறக்கப்படவிருந்த 107 அம்மா உணவகங்களுக்கான திறப்புவிழா நிகழ்ச்சி காரணம் ஏதுமின்றி ரத்துசெய்யப்பட்டது என்பதும், அதேநாளில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்ட மெட்ரோ ரயில் துவக்கவிழா நிகழ்ச்சியில் மிகவும் சிரமப்பட்டே அவர் கலந்துகொண்டார் என்பதும் அவருக்கு இருந்துவந்த உடல் நலப்பிரச்னைகளால்கூட இருந்திருக்கக் கூடும் என்றே கருதத் தோன்றுகிறது. 'அவருக்கு ஏற்கெனவே இருந்து வந்த பிரச்னைகளைத் திறம்பட கையாளாமல், தாமதமாக மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றதே அனைத்துக் குளறுபடிகளுக்கும் காரணம்' என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். 
2. தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் ஒருவர், சசிகலாவிடம் 2017 பிப்ரவரி 8-ம் தேதியன்று நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில், 'மருத்துவமனைக்கு முதல்வரைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதா?' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு, “தாமதமின்றி, உடனடியாகக் கொண்டுவந்துவிட்டீர்கள். அதனால் பிரச்னை இல்லை என்று அப்போலோ மருத்துவர்கள் 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு என்னிடம் கூறினார்கள்” என்ற பதிலை சசிகலா அளித்துள்ளார். ஆனால், முதல்வரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஏற்பட வாய்ப்புள்ள விளைவுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, “முன்கூட்டியே முதல்வரைக் கொண்டுவந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது அனுமானம் தொடர்பான கேள்வி; என்னால் அதற்குப் பதிலளிக்க முடியாது; மேலும், எமது பணி முதல்வர் மருத்துவமனைக்கு வந்த பிறகே என்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்” என்றும் டாக்டர். பாபு ஆப்ரஹாம் பதிலளித்தார். ஆனால், நோயாளியை மருத்துவர் ஒருவர் புதிதாகப் பரிசோதனை செய்யும்போது அந்த நோயாளியின் மருத்துவ மற்றும் உடல்நலம் குறித்த வரலாறு அனைத்தையும் மருத்துவர் சேகரித்தாக வேண்டும் என்பதும் இந்தத் தகவல்கள் அந்த நோயாளியின் சிகிச்சைக்கு இன்றியமையாதவை என்பதும் பாபு ஆப்ரஹாம் அறியாததல்ல. அப்போலோ மருத்துவமனையில் உலகத்தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஒரு திறந்த புத்தகம் என்றும் அந்த மருத்துவமனை நிர்வாகமே கூறிவருகிறது. அப்படி இருக்கும்போது டாக்டர்.பாபு ஆப்ரஹாமோ அவரைச் சார்ந்தவர்களோ மேற்கூறிய தகவல்களை பொதுவெளியில் வைக்க ஏன் தயங்க வேண்டும்?
3. செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் முன்வைத்த தகவல்களில் பெரும்பாலான தகவல்களை, பல்வேறு நாள்களில் அப்போலோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகளில் காணமுடியவில்லை. “அரைத் தூக்க நிலை, மூச்சுத் திணறல், மூச்சு மண்டல செயலிழப்பு, கிருமித் தொற்று, கிருமித் தொற்றால் தூண்டப்படும் உடலின் எதிர்வினைகளால் ஏற்படும் விளைவு (Sepsis), கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு, இதய உள் அடுக்கு அழற்சி (Endocarditis), எளிய பிராண வாயு சிகிச்சை, கிருமிகளைக் கண்டறியத் தேவையான பரிசோதனைகள்” -ஆகியவையே செப்டம்பர் 22-29-ம் தேதிவரை நடந்த நிகழ்வுகள் என்று 2017 பிப்ரவரி 6 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட டாக்டர் பெய்ல் மற்றும் பாபு ஆப்ரஹாம், பாலாஜி ஆகியோர் கூறினர்.
இந்தக் காலகட்டத்தை முதல் காலகட்டம் என்று அழைப்போம். ஆனால், அப்போலோ மருத்துவமனையால் இந்த முதல் காலகட்டத்தின்போது (செப்டம்பர் 22-29) முன்வைக்கப்பட்ட செய்திக்குறிப்புகளில் இவை எதுவும் இடம் பெறவில்லை. மாறாக. 'காய்ச்சல்; நீர்ச்சத்துக் குறைவு; பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; சிகிச்சையால் உடல் நலம் நன்றாக முன்னேறிக்கொண்டிருக்கிறது; வழக்கமான உணவை உட்கொள்ளத் தொடங்கியுள்ளார்'  என்ற குறிப்புகளையே காணமுடிகிறது. முதலாம் காலகட்டத்தின்போது, 'முதல்வருக்கு காய்ச்சல் குறைந்தது என்றும், ஆனால் அவரது மூச்சுத் திணறல் கூடுதலாகிப் போனது என்றும், அதனால் எளிய முறையில் அளிக்கப்பட்டுவந்த பிராண வாயுவுக்குப் பதிலாக, மூச்சுக்குழாய்க்குள் செயற்கை மூச்சுக்குழாயை நுழைத்து அதை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்க வேண்டி வந்தது' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் தெரிவித்தனர். 
4. ஆனால், அப்போலோ அறிக்கைகளோ இந்த முதலாம் காலகட்டத்தின்போது முதல்வரின் உடல்நலம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது என்றே அறிவித்தது. 2016 செப்டம்பர் 30-ல் இருந்து அக்டோபர் 7-ம் தேதிவரை உள்ள காலகட்டத்தை இரண்டாம் கால கட்டமாகக் கொள்ளலாம். முதல்வரது மூச்சுக்குழாய்க்குள் செயற்கை மூச்சுக்குழாயை நுழைத்து அதை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைத்ததில் இருந்து (endotracheal intubation) மூச்சுக் குழாயில் துளையிட்டு (Tracheostomy) அதனை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்கும் செயல்பாடு வரை உள்ள காலகட்டமே இது. இந்த இரண்டாம் காலகட்டத்தின்போது -அதாவது அக்டோபர் 2,3,4 மற்றும் 6-ம் தேதியன்று அப்போலோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில்-'முதல்வரது உடல்நிலை தொடர்ச்சியாக முன்னேற்றம் அடைந்து வருவதாகவே' கூறப்பட்டது. ஆனால், முதல்வருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் பிப்ரவரி 6-ம் தேதியன்று இந்த காலகட்டத்தைப் பற்றிக் கூறும்போது, 'முதல்வரின் மூச்சுத் திணறல் வெகுவேகமாக மோசமடைந்து கொண்டிருந்தது' என்றனர்; இதன் காரணமே, செப்டம்பர் 29-ம் தேதியன்று செயற்கை மூச்சுக் குழாயை அவரது மூச்சுக் குழாய்க்குள் நுழைத்தும் பின்னர் அது எதிர்பார்த்த பலனைத் தராத காரணத்தால் அக்டோபர் 7-ம் தேதியன்று அவரது மூச்சுக்குழாய் துவாரமிடப்பட்டது என்றும் கூறினர். 
மருத்துவர் ரமேஷ்5. முதல்வரின் மூச்சுக் குழாய் துளையிடப்பட்ட நாளுக்கு அடுத்த நாளான அக்டோபர் 8-ம் தேதியில் இருந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நாளான டிசம்பர் 4-ம் தேதிவரை உள்ள காலகட்டத்தினை மூன்றாம் காலகட்டம் என்று கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தின்போது இரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் பெரிதளவில் மாறுபடவில்லை. 
6. அப்போலோ அறிக்கைகளின்படியும் பிப்ரவரி 6-ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவர்களின் விளக்கத்தின்படியும் ' அக்டோபர் மாத இறுதியில் இருந்தே முதல்வரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. என்றாலும் கூட, டிசம்பர் 4-ம் தேதி மாலை சுமார் 4.30 மணி அளவில் அவரது இதயம் திடீரென செயலற்றுப்போய், துடிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது' என்றும் அவர்கள் கூறினர். நின்றுபோன இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் முதல்வருக்கு ஏற்கெனவே இருந்து வந்த நோய்கள் காரணமாகவே (அவை என்ன என்பதை அந்த அறிக்கை தெரிவிக்கவில்லை) தோல்வியில் முடிந்தன என்று அப்போலோ நிர்வாகத்தின் டிசம்பர் 5-ம் தேதிக்கான அறிக்கை கூறியது. இதுவரை நன்றாக இருந்து வந்த முதல்வரின் இதயம் திடீரென்று செயலிழந்து நின்றுபோனதற்கான (Cardiac Arrest) காரணம் தங்களுக்குத் தெரியாது என்று மருத்துவர் பெய்லும் பாபு ஆப்ரஹாமும் அடித்துக் கூறினார்கள். 'முதல்வரின் வயது, அவரது இதயத்தைப் பாதித்திருந்த கிருமித் தொற்று, கிருமித் தொற்றினால் ஏற்பட்ட உடலின் எதிர் விளைவுகள், அவரைப் பல ஆண்டுகள் பாதித்திருந்த சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்கள் ஆகியவற்றால் ஒருவேளை இது நிகழ்ந்திருக்கலாம் என்றாலும் உறுதியாகக் கூற இயலாது' என்று டாக்டர் பெய்ல் கூறினார்.
ஜெயலலிதா உடல்
7. ரத்தத்தில் உள்ள பொட்டாசியம் அளவின் மாற்றம், குறிப்பாக உயர் அளவு இதயத் துடிப்பை செயலிழக்கும் தன்மை (Cardiac arrest) கொண்டது. அவருக்கு இதயத் துடிப்பில் மாற்றம் அடிக்கடி வந்து போயுள்ள நிலையில், குறிப்பாக ரத்தத்தில் உள்ள பொட்டாசியம், கால்சியம், பிற தேவையான விஷயங்கள் அளக்கப்பட்டு, தேவைக்கேற்ப உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக, அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி காலையில் அது உயர் விளிம்புக்குச் சென்றுள்ளது. அதற்காக மருந்துகளில் மாற்றம் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் மறுநாள் காலை அது வழக்கமான அளவை எட்டியது. அன்று மாலை 4:20 மணிக்கு அவருக்கு இதயத் துடிப்பு செயலிழந்த பாதிப்பு, (Cardiac arrest) ஏற்பட்டபின் செய்த ரத்தப் பரிசோதனையில் (Venous Blood Gas Analysis)-ல் பொட்டாசியத்தின் அளவு 6.2 என இருந்ததால் அதைக் குறைப்பதற்காக, கால்சியம் குளூக்கோனெட், இன்சுலின்/டெக்ஸ்ட்ரோஸ், பை கார்பனேட் சிகிச்சை அளிக்கப்பட்டது.
8. இவையனைத்தும் ரத்தத்தில் உள்ள பொட்டாஷியத்தின் அளவைக் குறைக்க கொடுக்கப்பட்ட சிகிச்சைகள். எனவே, இதயத் துடிப்பு செயலிழந்து போனதற்கு உயர் பொட்டாசிய அளவு ஏன் காரணமாக இருக்கக்கூடாது? டிசம்பர் 3-ம் தேதி காலையில் அவருக்கு பொட்டாஷியத்தின் அளவு உச்சத்தை எட்டிய நிலையில், அவரை ஏன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றவில்லை. இதில், மருத்துவமனையின் நடவடிக்கைகள் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. பிப்ரவரி 6 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இதயத்துடிப்பு செயலிழந்து போனதற்கு பொட்டாஷிய அளவு காரணமா? என்று கேள்வி எழுப்பியபோது, அன்று காலை செய்த பரிசோதனையில் ரத்தத்தில் பொட்டாசிய அளவு வழக்கமானதாக இருந்தது என்று பாபு ஆபிரகாம் பதிலளித்தார். ஆனால், முந்தைய நாளில் வழக்கமான அளவின் உச்சத்தை அது எட்டியிருந்தது என்பதையும், இதய முடக்கம் வந்தபின் அதன் அளவு அதிகரித்தது (6.2 meq/Dl) என்பதையும் ஏன் மறைக்க வேண்டும்?
9. 'முதல்வரின் இதயம் செயலிழந்து நின்ற பிறகு அதை மீண்டும் இயங்கச் செய்யும் நடவடிக்கைகள் (Cardio Pulmonary Resuscitation-CPR) உடனடியாக எடுக்கப்பட்டது' என்று பாபு ஆப்ரஹாம் கூறினார். இந்த நடவடிக்கை 20 நிமிடம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இறுதியில் அதனால் பலனில்லை (Refractory Cardiac Arrest - CPR நடவடிக்கைக்கு 15 நிமிடங்களுக்கு மேலும் இதயம் செயல்படாது நிற்கும் நிலை) என்று அறிந்த உடனேயே, முதல்வர் இருந்த அறையிலேயே தயாராக வைக்கப்பட்டிருந்த (உடம்புக்கு வெளியில் நுரையீரலாக செயல்பட்டு உடல் உறுப்புகளுக்குத் தேவையான பிராண வாயுவை அளிக்கும்) ECMO (Extra Corporeal Membrane Oxygenation) கருவியுடன் முதல்வரின் ரத்த நாளங்கள் இணைக்கப்பட்டன' என்றார்; 'அடுத்த 24 மணி நேரம் அந்தக் கருவி இயக்கப்பட்ட பிறகும்கூட முதல்வரின் இதயத்தால் மீண்டும் இயங்கமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி அவரை மீட்க விளையும் மருத்துவ நடவடிக்கைகளை நாங்கள் நிறுத்திக் கொண்டோம்' என்று கூறினார்.
இந்த நடவடிக்கையை சந்தேகத்துக்கு இடமின்றி விளங்கிக் கொள்ள மேலும் சில தகவல்களை அவர் அளித்திருக்க வேண்டும். 'இதயம் செயலிழந்து போயுள்ளது' என்பதை அறிந்த உடன் அடுத்த 20 நிமிடங்களுக்கு CPR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நின்றுபோன இதயத்தை மீண்டும் துடிக்கச்செய்வதே CPR நடவடிக்கையின் நோக்கமாகும். 8-10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவானது தடைபட்டால் மூளைச் சாவு ஏற்படும். இந்த நிலையில் 20 நிமிடங்களுக்கு CPR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முதல்வர் எக்மோ கருவியில் இணைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. முதல்வரை எக்மோ கருவியில் இணைக்க எவ்வளவு நேரம் எடுத்தது. ரத்த நாளங்களுக்குள் எக்மோ குழாய்களைப் பொருத்த ஆகும் சராசரி நேரமே 32 நிமிடங்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. அப்படியென்றால், எக்மோ கருவி எப்போதிருந்து இயங்கத் தொடங்கியது, இடைப்பட்ட நேரத்தில் முதல்வர் அவர்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது மிக முக்கியமான கேள்விகள்.  
10. 'முதல்வரை (எக்மோ கருவியுடன் சேர்த்து?) அன்று இரவு 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு சென்றார்கள்' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர்.பாலாஜி கூறியிருக்கிறார். 'எதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?' என்று பாபு ஆப்ரஹாம் பதில் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். '75 நாட்கள் போடப்பட்ட அனைத்து முயற்சிகளும் ஒரு வினாடியில் வீணாகிப் போயின. இதுபோன்ற நிகழ்வு இன்னொருமுறை நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?' என்ற கேள்வியை அப்போலோ நிர்வாகமோ, மதிப்பிற்குரிய இந்த மருத்துவர்களோ எழுப்ப மறந்துவிட்டனர். தீவிர சிகிச்சையில் உலக அளவில் புகழைப் பெற்ற மருத்துவர் பெய்ல் அவர்களே இந்தக் கேள்வியை எழுப்ப மறந்துபோனதுதான் ஆச்சர்யம் மற்றும் கவலையை அளிப்பதாக இருக்கிறது. 'இதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்றுபோன இதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் ரிச்சர்ட் பெயலும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. உலகம் முழுவதும் கடந்த இருநூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் செயல்பாடுதானே இது? 
ரிச்சர்ட் பெயல்
11. உண்மை இப்படியிருக்க, முதல்வரின் உடல் மருத்துவ அடிப்படையிலான பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை; உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை உலகத்தரம் வாய்ந்த அப்போலோ மருத்துவமனையோ, முதல்வருக்கு இரவு பகல் பாராது சிகிச்சை அளித்த மருத்துவர்களோ முன்வைக்கவில்லை. என்றாலும்கூட, உயிரற்ற அவரது உடலில் இருக்கும் ரத்தத்தை வெளியில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அவரது ரத்த நாளங்களிலும், வயிறு-நெஞ்சு-கபாலம் ஆகிய உள்வெளிகளிலும் நச்சுத் தன்மை மிகுந்த வேதித் திரவங்களின் கலவையை ஏற்றி உடலினை வறண்டு-கெட்டுப் போகாமல் இருக்க வைக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ளவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டபோது அதற்கான மாற்றுக் கருத்தினை எவரும் முன்வைக்கவில்லை. அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட முதல்நாள் தொட்டே அவரது உடல்நிலை மற்றும் அதற்கான சிகிச்சை குறித்தான கவலைகள், சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் பொதுவெளியில் பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றன. அவற்றுக்கான தீர்க்கமான, அறிவியல் அடிப்படையிலான, முழுமையான பதில்களை இன்றளவும் அப்போலோ நிர்வாகமோ, சிகிச்சை அளித்த மருத்துவர்களோ, தமிழ்நாடு அரசோ முன்வைக்கத் தவறியுள்ளன என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல்வரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்தாமல், அதன் ரத்தம் அனைத்தையும் வெளியில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாகக் கடுமையான நச்சுத் திரவக் கலவையை உள்ளே செலுத்துவதென்பது அவரது உடலின் உண்மை நிலைமையை அழிக்கும் செயலாக அமைந்துவிடும் என்பது அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் மருத்துவர்களுக்கும் தெரியாதா என்ன? 
12. ஒருவேளை, அவரது இறப்புக்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தாக வேண்டும் என்ற முடிவை நீதிமன்றம் எடுக்கும்பட்சத்தில் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடம்பானது ரத்தம் நீக்கப்பட்டு, கடுமையான நச்சுத் திரவங்களால் அடைக்கப்பட்ட ஒன்றாகத்தானே இருக்கும்? அந்தத் திரவக் கலவையானது உடலின் அனைத்து இடுக்குகளிலும் புகுந்து உடல் உறுப்புக்களின் இயல்புத் தன்மைகளை அறவே மாற்றி அமைக்கும் திறனைக்கொண்டது என்பதை உறுதிசெய்யும் ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றன என்பது அப்போலோ நிர்வாகத்துக்கும் மருத்துவர்களுக்கும் தமிழக-இந்திய அரசுகளுக்கும் தெரியாதா என்ன? இதற்குப் பதிலாக, அவரது இறப்புக்குக் காரணமாகக் கூறப்படும் இதய செயலிழப்புக்கான காரணங்களை அறிய உதவிடும் மருத்துவரீதியான பிரேதப் பரிசோதனையை நடத்தியிருப்பதுதானே அறிவுகூர்ந்த செயலாக இருந்திருக்க முடியும்? மேற்கத்திய உலகில் நடைமுறையில் உள்ள நிகழ்வுதான் இது என்றாலும் கூட, மேற்கத்திய உலகுக்கும் மருத்துவம் செய்யும் அப்போலோ நிர்வாகமோ, மருத்துவர்களோ இந்த நடவடிக்கையை சம்பந்தப்பட்டோர் மேற்கொள்ள வேண்டும் என்று ஏன் நிர்ப்பந்திக்கவில்லை? தமிழக - இந்திய அரசுகள் இந்த நடவடிக்கையில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பூத உடலைக் காப்பாற்ற ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை? 
13. 2016 டிசம்பர் 5-ம் தேதியன்று இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. அதையடுத்த ஐந்து நிமிடத்தில் (இரவு 11.35 மணி) தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறையின் தலைவரான டாக்டர். சுதா சேஷய்யனிடம், 'முதல்வர் மரணமடைந்து விட்டார். அவரது உடலை உடனடியாகப் பதப்படுத்தியாக வேண்டும்' என்றும் அதற்காக அவர் அவரது பணியாளர்களுடன் அப்போலோ மருத்துவமனைக்கு விரைய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். டாக்டர். சுதா சேஷய்யனும் அவரது பணியாளர்களும் அடுத்த 45 நிமிடங்களில் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளார்கள். 6-ம் தேதியன்று அதிகாலை 12.20 மணிக்கு முதல்வரின் உடலைப் பதப்படுத்தும் பணி துவங்கியது. வலது தொடையில் உள்ள ஃபெமோரல் தமணியின் வாயிலாக அவர்கள் 5.5 லிட்டர் பதப்படுத்தும் திரவத்தை உடலுக்குள் செலுத்தினர். இதற்காக அவர்கள் தானியங்கி பம்ப் ஒன்றை உபயோகித்தனர். இந்தப் பணி அடுத்த 15 நிமிடங்களில் - அதாவது, டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 12.35 மணிக்கு - முடிவுக்கு வந்தது. வழக்கமாகப் பயன்படுத்தும் உடல் பக்குவத் திரவத்தை (embalming fluid) முதல்வரின் தோல் நிறத்தை மனதில் கொண்டு  சற்று மாற்றி அமைக்க மருத்துவர். சுதா முடிவு செய்தார். '5.5 லிட்டர் திரவத்தில் 2.5 லிட்டர் அளவுக்கு ஃபார்மலின் திரவத்தையும் கூடுதலாக ஐசோ புரோப்பைல் ஆல்கஹாலையும் கலந்தது இதற்காகத்தான்' என்று கூறினார். ரத்தக் குழாய்களைத் தவிர, நெஞ்சு - வயிறு - கபாலம் ஆகிய உள்வெளிகளிலும் இந்த உடல் பக்குவத் திரவத்தை செலுத்த வேண்டும் என்பது நியதி. ஆனால், அவ்வாறு செலுத்தப்பட்டதா என்பது பற்றி 6 பிப்ரவரி 2016 அன்று தமிழக அரசால் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது அவர் தெளிவுபடுத்தவில்லை. முதல்வர் அவர்களின் இடது கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகளுக்கான காரணம் என்ன என்பதையும் அவரால் விளக்க முடியவில்லை.
14. முதல்வர் அவர்களின் எடை 105 கிலோ என்று கூறப்படுகிறது. இந்த எடையைக் கொண்ட ஒருவருக்குத் தேவைப்படும் பதப்படுத்தப்படும் திரவத்தின் அளவு என்ன? வெறும் 5.5 லிட்டர் திரவத்தால் இது சாத்தியம்தானா? முதல்வரின் உடலைப் பக்குவப்படுத்தும் செயலைத் தொடங்கும் முன்பு அதற்கான விண்ணப்பப் படிவம் யாரிடம் பெறப்பட்டது என்பது பற்றியோ, காவல்துறையிடமிருந்து ‘இந்த உடம்பைப் பதப்படுத்துவதற்கு ஆட்சேபனை ஏதும் இல்லை’ என்பதற்கான சான்றிதழ் வாங்கப்பட்டதா என்பது குறித்தோ, மருத்துவமனையில் இருந்து இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்டதா என்பது குறித்தோ, மருத்துவ அடிப்படையிலான பிரேதப் பரிசோதனை நடத்த அப்போலோ நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் எண்ணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அவர் தன்னைத் தெளிவுபடுத்திக் கொண்டாரா என்பது பற்றியோ மருத்துவர் சுதா ஏதும் பேசவில்லை. முதல்வரின் உடல் எவ்வாறு அடக்கம் செய்யப்பட உள்ளது என்பது பற்றியும் எத்தனை நாள்களுக்கு அது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது என்பது பற்றியும் சிந்தித்து அதற்கேற்ற உடல்பக்குவ திரவத்தை அவர் தேர்வு செய்தாரா என்பது பற்றியும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் ஏன் தெளிவுபடுத்தவில்லை? இறந்தவர் ஒருவரின் உடலைப் பக்குவப்படுத்தும்போது அவர் என்ன காரணத்தால் இறந்தார் என்பதை பக்குவப்படுத்தும் குழுவினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்பது நியதி. ஏனெனில், மரணமடைந்தவர் கடுமையான நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரது ரத்தம் மற்றும் உடலில் இருக்க வாய்ப்புள்ள கிருமிகளால் பக்குவப்படுத்தும் பணியினை மேற்கொள்பவர்கள் பாதிப்புக்கு உள்ளாக முடியும். முதல்வர் அவர்களின் ரத்தத்தில் கலந்திருந்த நோய்த்தொற்று குறித்து அப்போலோ மருத்துவர்கள் சுதா சேஷய்யனிடம் விளக்கினார்களா என்பது குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை. முதல்வரின் ரத்தம் முழுவதையும் வெளியேற்றிவிட்டு  அதற்குப் பதிலாக உடலைப் பதப்படுத்தும் நச்சுத் திரவத்தை அவரது உடலுக்குள் செலுத்தும் பணியை சுதா சேஷய்யன் குழுவினர் அப்போலோ மருத்துவமனையில் எங்கு மேற்கொண்டார்கள் என்பது குறித்தும் அவர் தகவல் தெரிவிக்கவில்லை.
15. இறந்தோரின் உடல் இரண்டு காரணங்களுக்காகப் பக்குவப்படுத்தப்படுகிறது. அடக்கம் செய்வதற்கு முன்பாகவே அந்த உடம்பு கெட்டுப்போய்விடக்கூடாது என்பது ஒரு காரணம். உடற்கூறு கல்விக்காக நீண்டகாலம் பதப்படுத்த வேண்டியது மற்ற காரணம். முதலாவது காரணத்துக்காகவே முதல்வரின் உடல் பக்குவப்படுத்தப்பட வேண்டியிருந்தது என்று டாக்டர். சுதா சேஷய்யன் குறிப்பிடுகிறார். அடுத்த 19 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்யப்படவுள்ள, இரண்டு கம்ப்ரெஸ்ஸர்களைக் கொண்ட சிறப்பு குளிர்சாதன சவப் பெட்டியில் வைக்கப்படவுள்ள ஓர் உடலைப் பதப்படுத்த வேண்டியது அவசியம்தானா என்ற கேள்வியை அவர் எழுப்பினாரா? முதல்வர் அவர்கள் ஐயங்கார் இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரது உடல் எரியூட்டப்படுவதே மரபு. அப்படி இருக்கும்போது அதற்கேற்ற பதப்படுத்தும் வேதிப்பொருள்களைத் தேர்வு செய்யாமல், எளிதில் வெடிக்கும் தன்மை கொண்ட ஐசோபுரப்பைல் ஆல்கஹால்(Iso propyl alchohol)ஐ உடலைப் பதப்படுத்தும் திரவத்தில் கலந்ததற்கான காரணம்தான் என்ன? 
16. முதல்வர் அவர்களின் தோலின் நிறத்தை நாள் முழுதும் குன்றாமல் வைக்கவேண்டுமென்றால், அதற்கான சிறப்பு பதப்படுத்தும் திரவங்கள் அனேகம் உள்ளனவே… அவற்றையெல்லாம் பயன்படுத்தாமல் மிகவும் விலை குறைந்த, மலிவான வேதிப்பொருள் ஒன்றை மருத்துவர் சுதா சேஷய்யன் எதற்காக தேர்வு செய்தார்? உடலைப் பதப்படுத்துவதற்குக் குறைந்தது 3-4 மணி நேரமாவது தேவை. மிக விரைவில் அதை முடிக்க வேண்டும் என்றால்கூட குறைந்தது ஒரு மணி நேரமாவது அவசியமாகும். உடலைப் பதப்படுத்தக் கோரும் விண்ணப்பப் படிவத்தை சரிபார்க்க வேண்டும். உடலைப் பதப்படுத்தும் திரவத்தை ரத்த நாளங்களுக்குள் செலுத்துவதற்கு முன்பாக ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். பின்னர் வயிறு, நெஞ்சு மற்றும் கபால உள் வெளிகளுக்குள்ளும் திரவத்தை செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் பணியாளர்களுக்குக் கேடு ஏற்படாத வண்ணம் செய்து முடிக்க வேண்டும். திரவத்தை உடலுக்குள் ஏற்றிய பிறகு அது எங்காவது கசிகிறதா என்று பார்க்க வேண்டும். பின்னர் அந்த உடம்பை சுத்தம்செய்து, அடக்கத்துக்குத் தயார் செய்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தனை செயல்பாடுகளையும்  வெறும் 15 நிமிடங்களில் முடித்துவிட்டதாக அவர் கூறுகிறார். 
பரிசோதனைகளை மேற்கொண்டபோது அவரது ரத்தத்திலேயே பாக்டீரியா கிருமித் தொற்று இருப்பதை அறிய முடிந்தது. 'இந்தக் கிருமிகள் அவரது இதயத்தின் உள் அடுக்கில் குடிகொண்டு Endocarditis (இருதய உள்ளடுக்கு அழற்சி) என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன' என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது. மேலும், இந்தக் கிருமித் தொற்றானது உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்புகளையும் முடுக்கிவிட்டிருந்தது; அவை நோயை எதிர்த்ததோடு நிற்காமல் அவரது உடல் உறுப்புக்கள் பலவற்றையும் தாக்கத் தொடங்கியிருந்தன என்பதை அறிந்துகொண்டனர். இந்த செயல்பாடே செப்சிஸ்(Sepsis) என்று அழைக்கப்படுகிறது. இதுவே முதல்வரின் மூச்சு மண்டலத்தைத் தாக்கியிருப்பதையும் அதன் விளைவாகவே அந்த மண்டலம் திடீரென்று செயலிழந்து போயிருப்பதையும் அவர்கள் அறிந்துகொண்டனர். இதன் காரணமாக அவருக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. கூடுதலாக, முதல்வருக்கு இருந்த பிற நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவையும் இந்தப் பிரச்னைகளை சிக்கலாக்கின' - இது லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலின் கருத்து.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...