சில நாட்களுக்கு முன், சென்னையிலிருந்து பழநிக்கு, நானும், மனைவியும் சென்றோம். பழநி சென்றதும், அறைக்கு சென்று ஓய்வெடுத்து, மதியம் 'விஞ்ச்' மூலம் மலையேறி, ஆண்டவரை தரிசனம் செய்து, அறைக்கு திரும்பி, மாலை 6:05க்கு பழநியில் இருந்து சென்னை வரும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி அமர்ந்தோம்.
எங்கள் எதிரில் தன், 19 - 21 வயது மகளுடன், சென்னை கல்லுாரி ஒன்றில் இடம் கிடைக்க, 'இன்டர்வியூ' செல்லும் நடுத்தர வயது தந்தை பயணித்தார். ரயிலில் கூட்டம் அறவே இல்லை. 'ஏசி' இரண்டடுக்கு பெட்டியில் எங்களுக்கு எதிரே இருந்த அவர், துவக்கம் முதலே, காதில் மொபைல் போனை வைத்து, எல்லாருடனும்
'கலபுலா'வென பேசியபடியே இருந்தார்.அவர் முகத்தை நீண்ட நேரம் பார்த்தும், அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டே இருந்தார். எதிரே இருப்போரும் மனிதர்கள் தானே... அமைதியாக இருக்க வேண்டுமே என்ற இங்கிதமே அவரிடம் இல்லை.
ரயில் புறப்பட்டதில் இருந்து ஒரே பேச்சு தான்... அவரின் கர்ண கடூரமான குரல், எங்களுக்கு எரிச்சல் ஊட்டியது. 'சார், கொஞ்சம் மெதுவாக பேசுங்கள்...' என சொல்ல நினைத்தேன். என் மனைவி தடுத்தார். அவரும் பேச்சை விடுவது போல தெரியவில்லை.
பக்கத்து பெர்த்துகள் காலியாக இருந்ததால், அங்கு சென்று அமர்ந்து கொண்டோம். இரவு, 8:20 மணியாகி விட்டது; பசி எடுத்தது. எங்கள் பெர்த்துக்கு வந்தோம். அதற்குள் அவர் சாப்பிட்டு முடித்திருந்தார்.இனிமேல் பேச மாட்டார் என எண்ணி சற்று நிம்மதி அடைந்து, இட்லி பார்சலை அவிழ்த்தோம். பழநியின் முக்கியமான உணவகத்திலிருந்து வாங்கி வந்த அந்த இட்லி, அருமையாக இருந்தது.
ஒன்றிரண்டு துண்டுகள் தான் சாப்பிட்டிருப்போம். இதுவரை பேசியே எங்களை கொன்ற அந்த நபர் இப்போது, இடுப்பை ஒருபக்கமாக ஒருக்களித்து, 'காஸ்' விட்டாரே பார்க்கலாம்...கொஞ்சம் கூட நாகரிகம் என்பதே இல்லாமல், சத்தமாக அவர் காஸ் விட்டது, கடும் கோபத்தை வரவழைத்தது. 'நீயெல்லாம் மனுஷன் தானா...' என கேட்க நினைத்தேன். சபை நாகரிகம் தெரியாத நபரிடம் பேசி, மாட்டிக் கொள்ளக் கூடாது என, சும்மா இருந்து விட்டேன். எல்லா மனிதர்களும் செய்யும் செயல் தான் என்றாலும், ஓரடி கூட இடைவெளி இல்லாத இடத்தில் இப்படி அநாகரிகமாக ஒருவர் நடந்து கொள்வாரா என்ற கேள்வி இன்னமும் என் மனதை விட்டு நீங்கவில்லை.
மீதமிருந்த நான்கைந்து இட்லிகளை அப்படியே துாக்கி போட்டு விட்டு, பெர்த்துக்கு வந்து பார்த்தால், அவர் அப்பர் பெர்த்தில் ஏறி படுத்து, மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டே இருந்தார். இவர் போன்ற நாகரிகமற்ற நபர்கள் நிறைய பேரை, அவ்வப்போது ரயில் பயணங்களில் பார்க்கிறேன். பொது இடங்களில் எப்படி பேச வேண்டும், எப்படி நாகரிகமாக பயணிக்க வேண்டும் என்ற இங்கிதமே இல்லாமல் இருக்கின்றனர். இந்த லட்சணத்தில் இந்த நபர்களுக்கு, 24 மணி நேரமும் ஒலிக்கும் மொபைல் போன்; அவர்களுடன் பேச ஆட்களும் வேறு இருக்கின்றனர். நியாயமான பயணியின் நிலைமை இனி எப்போதுமே சிக்கல் தான் என நினைத்தபடி இரவு பொழுதை கழித்தேன்!
No comments:
Post a Comment