கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, டாக்டர் கொலை வழக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரித் துறை சோதனை என, பல முனை தாக்குதல்களால், கொங்கு மண்டல அ.தி.மு.க., பிரமுகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்துள்ளது; கோவையில் தான் இதற்கான விசாரணை நடக்கிறது.
நேரடி தொடர்பு
அ.தி.மு.க., வர்த்தக அணி தலைவர் சஜீவன், அவரின் சகோதரர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, அவரின் மகன், தம்பி மகன் ஆகியோரிடம், தனிப்படை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், ஆற்று மணல் அள்ளும் ஒப்பந்ததாரராக இருந்து, அக்கட்சிக்கு முக்கிய நிதி ஆதாரமாக விளங்கிய ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களைத் தவிர்த்து, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான சேலம் இளங்கோவனையும் விசாரணை வளையத்தில் கொண்டு வர, போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.குற்றவாளிகள் கொடுத்துள்ள தகவல்கள், அ.தி.மு.க., புள்ளிகள் சிலருக்கு, இதில் நேரடி தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தி இருப்பதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை தீவிரமாகும் என்கின்றனர், போலீசார்.
வலுவான ஆதாரங்கள்
கட்சி தலைமையைக் கைப்பற்றும் நோக்கில் நடக்கும் மோதலில், கோடநாடு சம்பவத்தின் பின்னணி குறித்து, ஒரு தரப்பில் இருந்து பல உண்மைகள் போலீசிக்கு கசிந்துள்ளதாக தெரிகிறது.இதனால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., புள்ளிகள் சிலருக்கு சிக்கல் நெருங்கி விட்டதாகவும், சிலர் கைதாகலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
![]() |
இதற்கிடையில், கோவையில் தனியார் மருத்துவமனை நொறுக்கப்பட்ட வழக்கும், அதில் தொடர்புடைய டாக்டர் உமாசங்கர் விபத்தில் மரணம் அடைந்த வழக்கும், மீண்டும் விசாரிக்கப்பட உள்ளன.
டாக்டர் மரணத்தில் மர்மம் இருப்பதாக, அவரின் உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளதுடன், அதில் கோவை அ.தி.மு.க., புள்ளிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் கிளப்பியுள்ளனர். இந்த வழக்கில், அ.தி.மு.க., புள்ளி ஒருவரின் தொடர்பு குறித்து, வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், கைது நடவடிக்கை பாயுமென்ற தகவலும் பரவுகிறது.
இதற்கிடையில், 'மாஜி' அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் மற்றும் வேலுமணி மீதான 'டெண்டர்' முறைகேடு வழக்கில் சிக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோர் வீடுகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
நெருக்கடி
ஏற்கனவே, இவர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு விசாரணையும் தீவிரமடைந்து இருக்கிறது. இதனால், அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சிக்கும், அச்சத்துக்கும் உள்ளாகியுள்ளனர். கொலை, கொள்ளை, ஊழல் வழக்குகள், லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரித் துறை 'ரெய்டு'கள் என, கொங்கு மண்டல அ.தி.மு.க., புள்ளிகள் மீதான நெருக்கடி, நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

No comments:
Post a Comment