Wednesday, July 13, 2022

ஹோட்டல் உணவுகளால் தொடரும் துயரங்கள்: அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை தேவை.

 ஹோட்டல் உணவுகளால் தொடரும் துயரங்களைத் தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். பணி நிமித்தம் காரணமாக பல்வேறு நகரங்களுக்கு பயணிக்க வேண்டி உள்ளது. அவ்வாறு பயண நேரத்தில் உணவு சாப்பிடும் நேரம் வரும் போது ஆங்காங்கே இருக்கும் நெடுஞ்சாலை ஹோட்டல்களில் வாகனங்களை நிறுத்தி சாப்பிடுகின்றனர்.



நெடுஞ்சாலை ஹோட்டல்


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்பிளாசா முதல் விழுப்புரம் வரை சாலையின் இருபுறமும் 20 ஹோட்டல்கள் உள்ளன. உளுந்துார்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் வரை 21 ஹோட்டல்கள் இயங்குகின்றன. ஒலக்கூர் முதல் சென்னை வரை நெடுஞ்சாலைகளில் 27 ஹோட்டல்கள் உள்ளன. விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் ஜானகிபுரம் வரை 16 ஹோட்டல்கள் நெடுஞ்சாலையில் இயங்கி வருகின்றன.


latest tamil news




இருமடங்கு விலை


நெடுஞ்சாலை ஹோட்டல்களில் உணவு வகைகளுக்கு இரு மடங்கு விலை நிர்ணயித்து விற்பனை செய்வது, காலாவதியான தின்பண்டங்களை விற்பது தொடர்கிறது. அந்த நேரத்தில் பயணிகள் உணவுக்கான விலையைப்பற்றி கவலைப்படுவதில்லை. பசி மயக்கத்தில் ஹோட்டல்களில் வினியோகிக்கப்படும் உணவுகளை சாப்பிடுகின்றனர்.



உணவால் உயிர் பலி


உணவு சில நேரங்களில் கெட்டுப் போயிருந்தால் ஒவ்வாமையும் உடலுக்கு கெடுதியும் ஏற்படுத்தி அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது. சில நேரங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டு உணவு கெட்டு விஷமாகி உயிர் பலியும் ஏற்படுகிறது.



சம்பிரதாய ஆய்வு


உயிரிழப்பு ஏற்படும் போது அந்தந்த பகுதியில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பாதிப்பு ஏற்படுத்திய ஹோட்டலையும் அருகில் உள்ள ஹோட்டல்களையும் சோதனை செய்கின்றனர். சோதனையில் 25 கிலோ முதல் 50 கிலோ வரை தரமற்ற உணவுகளை பறிமுதல் செய்து அழிக்கின்றனர். அதே நேரத்தில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அபராதமும் எச்சரிக்கையும் விடுக்கின்றனர். இது சம்பிரதாய நிகழ்வாகவே உள்ளது.ஆனால், ஹோட்டல் உரிமையாளர்கள் கடைசிவரை உணவு பற்றிய விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது கிடையாது. பணம் ஒன்றே குறிக்கோள் என்ற அடிப்படையில் உணவு விற்பனையை தொடங்கி விடுகின்றனர். இதனால், மீண்டும் மக்கள் மத்தியில் உயிர் பலியும், பாதிப்புகளும் ஏற்படுகிறது.


latest tamil news




தொடர் சோதனை


இது போன்ற பாதிப்புகளையும் உயிர் பலிகளையும் போக்க, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ஆய்வாளர்கள் குழுக்களை அமைத்து தொடர் சோதனையில் ஈடுபட வேண்டும். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விலை கட்டுப்பாடுகள் குறித்தும் குழந்தை தொழிலாளர்கள் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் உணவு குறித்த பாதுகாப்பு விதிகளை முறையாக ஹோட்டல் உரிமையாளர்கள் கடைபிடிப்பர்.



விழிப்புணர்வு தேவை


அதேபோன்று மக்கள் மத்தியில் உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது ஏற்படுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஹோட்டல் உணவுகளால் தொடரும் துயரங்களில் இருந்து விடுபட முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...