ஒரு நாட்டின் பிரதமர் இப்படி அரசு நிகழ்ச்சிகளில் ஒரு மதத்தின் சார்பான சம்பிரதாயங்களை பின்பற்றுவது சரியா?
ஒரு மதத்தின் சம்பிரதாயங்கள்னா எது எதைச் சொல்ல வறீங்க சகோ?
கடவுள், பூஜை, வழிபாடு இவற்றைப்பற்றி அரசு விழாக்களில் பேசுவது,செயல்படுவது போன்றவைதான். கூடாது என்கிறோம்!
சரி! சகோ நமது சமூக வாழ்வியலில் இன்றோ! நேற்றோ! பலநூறு ஆண்டுகளுக்கு முன்போ இதுபோன்ற பண்பாட்டு கலாச்சாரங்கள் இல்லாத இலக்கியமோ! விழாக்களோ! கல்வெட்டோ! செப்பேடுகளோ! அரசியலோ! நடந்துள்ளதா? இந்த பாரத தேசத்தை ஆட்சி செய்த அரசுகளில் ஆங்கிலேயர்கள், முகலாயர்கள், மௌரியர்கள், குப்தர்கள், சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் இவர்களில் யாரேனும் கடவுள், பூஜை, வழிபாடு, சம்பிரதாயங்கள் இன்றி ஆட்சி செய்துள்ளனரா?
அது வந்து

இவற்றில் ஒவ்வொரு பேரரசுகளும் அவரவர் மதம் சார்ந்த வழிபாட்டு நம்பிக்கைகளை பின்பற்றினார்கள் என்பதற்கு கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம்னு ஏராளமான ஆதாரங்கள் உண்டு சகோ. எனில் இந்த நாட்டின் பிரதமர் ஏன் இந்த பாரத தேசத்தின் பண்பாட்டு கலாச்சாரங்களை கடைபிடிக்க கூடாது?
அது வந்து
தமிழர்களின் அரசுகளோ இலக்கியங்களோ கடவுள், பூஜை வழிபாடு பற்றி குறிப்பிடுகிறதா சகோ!
ஆம்.! உதாரணமாக,
முன்னொரு காலத்தில் பாண்டியர்களின் ஆட்சியில் சிறப்பாக அனைத்து செல்வங்களையும் பெற்று செழிப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்களில் ஒருவரிடமிருந்த ஒரு ஊரை களப்பிரர்கள் அபகரித்ததாகவும் அபகரிக்கப்பட்ட அந்த ஊரானது சங்ககால பாண்டிய மன்னனான பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியால் "கொற்கைக் கிழான் காமக்காணி நற்சிங்கன்" என்பவரின் முன்னோர்களுக்குத் தானமாக வழங்கப்படதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து பாண்டிய மன்னனிடம் அந்த நிலத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுக்கிறான். இதை விசாரித்த ஜடில பராந்தக பாண்டியன் அந்த ஊரை திருப்பித்தந்ததும் அதை வாங்கிய அந்த நிலத்தின் உரிமையாளர் அந்த நிலத்தை என்ன செய்தார் என்பதையும் பதிவு செய்வதே வேள்விக்குடி செப்பேடாகும்.
இதை எதுக்கு இப்ப சொல்றீங்க சகோ?
அதாவது இது பாண்டியப் பேரரசால் வெளியிடப்பட்ட ஒரு அரச சாசனம். இந்த சாசனத்தின் முதற்பகுதி அதாவது சமஸ்கிருத பகுதியின் முதல் ஸ்லோகத்தில் கூறியிருப்பதாவது,
“குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரனை முடியில் சூடியவரும், புகலடைந்தவர்களின் துன்பங்களை தடுப்பதற்கு காரணமானவரும், பொன்மையான சடைகளால் அழகு பெற்றவரும், விஷமத்தனமான மன்மதனின் கர்வத்தை அழித்தவருமான பரமசிவன் உங்களுக்கு நிலையான செல்வத்தை வளர்ந்தோங்கச் செய்வானாக”
இதுபோன்று தான் சேர, சோழர்களின் அரச சாசனங்களிலும் கடவுள் பற்றிய வாழ்த்துச்செய்தி முதன்மை பெற்றிருக்கும். இதைத்தானே இன்று நமது அரசும் செய்கிறது? இதில் என்ன தவறு சகோ?
அது வந்து 
திருக்குறள் கடவுள் பற்றியோ வழிபாடு பற்றியோ சொல்ல தானே ? தமிழர்கள் மதம் சார்ந்து இருக்கமாட்டாங்க தானே?
திருக்குறள் இறைவனின் திருவடிகளைப் பற்றுபவனாலேயே பிறவியாக பெருங்கடலை கடக்க முடியும்னு சொல்லுது. திருவடிகளை பற்றுதல் என்பது மதத்தின் சம்பிரதாயங்களில் அதுவும் இந்துமதத்தில் மட்டுமே உள்ள கோட்பாடுதானே? மேலும், இந்திரன், திருமால், அடி அளந்தான், லட்சுமி, எமன், கண்ணன், மூதேவி, தவம், தானம், அறம், நோன்பு, மறை, மேல் உலகம், பூசனை, வேதம், வேள்வி, பார்ப்பான், என்று கூறுவதெல்லாம் இன்றைய மதக்கோட்பாடுகளில் வராதா சகோ?
புறநானூறு மற்றும் அகநானூறுகளில், கோவில்கள், பூஜைகள், வழிபாடுகள், இறை வருணனைகள், இதிகாசங்கள், புராணங்கள் என்று ஏராளமான குறிப்புகள் உண்டு. இவையெல்லாம் மதக்கோட்பாடுகளிலோ சம்பிரதாயங்களிலோ வராதா சகோதரா?
தமிழின் இலக்கண நூலான நன்னூல், தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இலக்கியங்களில் கடவுள் மற்றும் சம்பிரதாயங்கள் இல்லைதானே?
தொல்காப்பியத்திலும் உண்டு.!
மாயோன் என்றால் திருமால், சேயோன் என்றால் முருகன், வேந்தன் என்றால் இந்திரன். இது தவிர்த்து பார்ப்பான், கொற்றவை என்ற பெயர்களும் கடவுளிடம் தனக்கு தேவையானதை கேட்டு வழிபடும் வழக்கமும் இருந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது. மேலும் நன்னூலில்
“பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த நான்முகன் தொழுதுநன் கியம்புவ எழுத்தே"
என்று 13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட இலக்கண நூலிலும் நான்முகன் எனும் பிரம்ம தேவரை குறிப்பிட்டுள்ளதால் நன்னூலிலும், அவ்வளவு ஏன் புறப்பொருள் வெண்பா மாலையிலும் கடவுள் குறித்த தகவல்கள் உண்டு.!
இப்ப சொல்லுங்க ப்ரோ! தமிழர்களோ! இந்திய அரசோ! ஏன் அவர்கள் சார்ந்த விழாக்களில் இந்தியாவின் பண்பாட்டு கலாச்சாரங்களை பின்பற்ற கூடாது?
பின்பற்றலாம் சகோ! தவறில்லை.!
ஒரு செயலை செய்வதற்கு முன்பு கடவுளுக்கு நன்றி சொல்லி, இறைவனே நான் ஆரம்பிக்கும் இச்செயலை நல்லபடியாக செய்ய கருணை செய்வாய் என்று இறைவனுக்கு ஒரு வணக்கத்தை வைத்த பின்பே ஆரம்பிப்போம்.! அது எழுதுவதானாலும் சரி, ஒரு விழா எடுத்தாலும் சரி, எதாவது ஒரு நிகழவானாலும் சரி இறைவனுக்கே முதன்மை என்பது தமிழர்களின் பண்பாடுகளில் இரண்டறக் கலந்ததாகும். உதாரணமாக பொங்கல் பண்டிகையை எடுத்துக்கெண்டால் சிவனுக்கும் விநாயகருக்கும் படையலிட்ட பிறகே கொண்டாடுவார்கள். அதுபோல நடவு நடும்போதும் விநாயகருக்கு படையலிட்ட பின்னரே நடவு நட ஆரம்பிப்பார்கள். இலக்கியங்களின் அடிப்படையில் பார்த்தாலும் இது பழங்காலம் தொட்டு இருக்கும் பழக்கவழக்கங்கள் என்பதை அறிய முடிகிறது. இறை வணக்கம் செய்வது இன்று நேற்று அல்ல, அது 2000 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது தொல்காப்பிய காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பின்பற்றி வரும் மரபாகும். ஆகவே அரசு விழாக்களில் மட்டுமல்ல இந்த பாரத தேசத்தின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வானாலும் இறைவனை முன்னிலைப்படுத்துவதில் தவறே இல்லை!




No comments:
Post a Comment