'நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரிகள் அல்ல; மனிதர்களை மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிளவுபடுத்திப் பார்ப்போருக்கு மட்டுமே எதிரிகள். ஆன்மிகம் என்ற பெயரில், மத வெறியை, ஜாதி வெறியை துாண்டுவோர் ஆன்மிகவாதிகளாக இருக்க முடியாது; அவர்கள் ஆன்மிக வியாதிகள்' என்று, திருவண்ணாமலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஹிந்து மத ஆன்மிகவாதிகளான சங்கராச்சாரியாரோ, விவேகானந்தரோ, ராமனுஜரோ, மதம் என்ற பெயரில் மக்களைப் பிரித்துப் பார்த்ததே இல்லை. ஹிந்து மதமே, மற்ற மதங்களை விட உயர்ந்தது என்றும் சொன்னதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களை, பகவான் விஷ்ணுவின் பிள்ளைகள் என்று சொல்லி, அரவணைத்து போற்றினார் ராமானுஜர். கலைஞர் 'டிவி'யில், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து எழுதிய கருணாநிதிக்கு இது நன்றாகவே தெரியும்! தன்னை தரிசனம் செய்ய வரும் பக்தர்களை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு காட்டாமல், அனைவருக்கும் அருளாசி வழங்கும் பெருந்தன்மை குணமுள்ளவர், காஞ்சி மடத்தைச் சேர்ந்த சந்திரசேகர பரமாச்சாரியார் சுவாமிகள். திராவிட செம்மல்கள் மட்டுமே மதம், ஜாதி, இனம் பார்த்து நடந்து கொள்வர்.முஸ்லிம்களின், கிறிஸ்துவர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வர்; ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு சொல்ல மாட்டார்கள். அம்பேத்கர் பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடும் திராவிட செம்மல்கள், உயர் குடியில் பிறந்த தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை.'எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்; அதுதான் நாங்கள் போற்றும் சமூக நீதி' என்று சொல்லிக் கொண்டே, ஹிந்துக்களை மட்டும் அவமதிப்பர். ஹிந்து ஆன்மிகவாதிகளை ஆன்மிக வியாதிகள் என்று விமர்சிப்பர். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று இவர்கள்சொல்வது, தமிழர்களின் காதுகளில் பூச்சூடும் சமாச்சாரம் தான். ஹிந்து என்றால் திருடன் என்று சொல்லும் இவர்களுக்கு, முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் இதுபோல் சொல்லும் துணிச்சல் உண்டா? தமிழை உண்மையில் வளர்த்தோர் திராவிடர்கள் அல்ல... ஆன்மிகவாதிகளான ஆழ்வார்களும், நாயன்மார்களும் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
No comments:
Post a Comment