Tuesday, July 4, 2023

உண்மை இதை நானும் உணர்ந்தேன்.

 ஒரு பிரச்சினையில் மூழ்கியிருந்தேன் (பிரச்சினை இல்லாத நாட்கள் எது? வாழ்வே பிரச்சினைதானே!). அப்போது சொல்லி வைத்தாற்போல எனது அருமை நண்பன் வந்தான். அவனை 'அட்வைஸ் அண்ணாசாமி என்றுதான் கூப்பிடுவேன். கேட்டாலும் கேட்காவிட்டாலும் அட்வைஸ் மழை பொழியும்.

என்னுடைய பிரச்சினையைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவன், "நான் சொல்றதைக் கேளு, வாரம் இருபது பேருக்கு அன்ன தானம் பண்ணு, உன் பிரசினை எல்லாம் தீரும்" என்று கூறி அதை செயல் படுத்துவதற்கான வழிமுறைகளையும் கூறினான்.
அடுத்த ஞாயிறு காலையே புறப்பட்டேன். ஒரு பிக் ஷாப்பர் பையில் இருபது சாப்பாட்டுப் பொட்டலங்களுடன். குன்றத்தூர் கோவில் வரை ஸ்கூட்டரில் பயணம். (நாம் யாரென்பது யாருக்கும் தெரியக்கூடாது, அதுதான் முழுப்பலன் கொடுக்கும் அ.அ).
முதலில் ஒரு குறவன் சகதர்மிணியுடன் வந்து கொண்டிருந்தான். "இந்தாப்பா, சாப்பிடு" இரண்டு பொட்டலங்களை நீட்டினேன் எகத்தாளமாகப் பார்த்தான். "என்ன சாமி இது, காட கவுதாரி இருந்தா கொடு, இது எதுக்கு சாமி" என்றான்.
அடுத்து இன்னொரு பிச்சைக்காரன், என்னையே கேவலமாகப் பார்த்தான், "ஈன்னபா இது, லெக் பீஸ் இருக்கா?" என்றான்
ஒரே ஓட்டம்.
அய்யப்ப சாமி கூட்டம் ஒன்று வந்து கொண்டிருந்தது, "அப்பா, இருபதையும் இங்கே தள்ளி விடலாம்". குருசாமியைக் கண்டுபிடித்து தயக்கத்துடன், "சாமி, இருபது சாம்பார்ப் பொட்டலம் இருக்கு, சாப்பிடறேளா" என்றேன். " சாப்பாடா" பலமாக சிரித்தார். "ஓரு அரை மணி நேரம் இருங்கோ, வடை பாயசத்துடன் பிரசாதம் ரெடியா இருக்கு. சாப்பிட்டுப் போங்கோ" என்றார்.
நான் மனம் தளரவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் பெரு வியாதிக்காரர்கள் குழுவாக வந்து கொண்டிருந்தார்கள் " சாம்பார் சாதம் இருக்கு, சாப்பிடறிங்களா?" என்றேன். "அப்படியா, எத்தனி பொட்டலம் இருக்கு" என்றார். "இருபது" என்றேன்
உற்சாகத்துடன். "கொடுங்க" என்றார் பிக் ஷாப்பர் பையை அப்படியே கொடுத்தேன். "யெய், பொண்ணு எடுத்து வையி, நம்ம ஜிம்மி, டைகர் எல்லாத்துக்கும் உபயோகம் ஆகும்" என்றார். " இன்னா சார் பாக்கறெ, இல்லாம் நம்ம நாயிங்கதான், ஹோம்ல இருக்கு" என்றார்.
வீட்டுக்கு வந்து படுத்துக் கொண்டென்.
சாயங்காலமே அட்வைஸ் அண்ணாசாமி வந்தான்.
"ஏன்னடா சோத்துப் பொட்டலம் தந்தயா?" என்றான்.
"தந்தேன்" என்று கூறி விட்டு பெரு வியாதிக்காரர்கள் ஹோமில் உள்ள நாய்களுக்கு என்று நினைத்துக் கொண்டேன்.
அடுத்த வாரம் மனைவி எழுப்பி"ஏன்னா, அன்ன தானம் செய்யப் போகலியா?" என்றாள்.
"சூடா ஒரு கப் காபி கொடு என்று சொல்லி விட்டு இழுக்கப் போர்த்தி க்கொன்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தேன்.
பிரச்சினை என்ன ஆச்சு என்கிறிர்களா, அது தானாகவே தீர்ந்து விட்டது.
அடுத்த பிரச்சினை வரட்டும், பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...