Thursday, October 26, 2023

தேங்காய் சீனிவாசன் 85 வது பிறந்தநாள் அக்டோபர் 21 .

 ஒரு சில கலைஞர்களின் வாழ்க்கையில் காலச் சக்கரம் பின்னோக்கிச் சுழன்றிருக்கிறது. ‘தேங்காய்’ சீனிவாசனின் வாழ்க்கையிலும் அப்படியொரு சுழற்சி உண்டு. சிட்டாடல் நிறுவனம் தயாரித்து ஜோசப் தளியத் ஜூனியர் இயக்கிய ‘இரவும் பகலும்’ (1965) படத்துக்கு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டார் தேங்காய் சீனிவாசன். அதில்தான் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஜெய்சங்கரும் தேங்காய் சீனிவாசனும் நாடக உலகம் வழியே நல்ல நண்பர்கள். இருவரும் ஒரே படத்தில் அறிமுகமாகும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். அந்த மகிழ்ச்சி சில நாட்கள்கூட நீடிக்கவில்லை. ‘கதாநாயகனும் புதுமுகம், காமெடியனும் புதுமுகம் என்றால் படம் எப்படி வியாபாரமாகும்?’ என்று கணக்குப் போட்ட பட நிறுவனம், தேங்காய் சீனிவாசனை படத்திலிருந்து நீக்கிவிட்டு, அன்று பிரபலமாக இருந்த நாகேஷை ஒப்பந்தம் செய்தது. காலம் சுழன்றது.. கே.பாலசந்தர் இயக்கத்தில் 1972இல் வெளியானது ‘வெள்ளி விழா’.அந்தப் படத்தில் நாகேஷுக்காக எழுதிய கதாபாத்திரத்தில் “நாகேஷைவிட இந்தக் கேரக்டர்ல சீனு பெட்டரா பெர்ஃபாம் பண்ணுவான்.. அவனக் கூப்பிடு” என்று கூறி, அதில், நாகேஷுக்குப் பதிலாக அவரை நடிக்கவும் வைத்தார்.
பாலசந்தரை ஈர்த்த பாணி: தான் அறிமுகப்படுத்தும் நடிகர்களிடம் தனித்துவமான நடிப்பு பாணி இருந்தால் அதில் குறுக்கீடு செய்ய விரும்பாதவர் கே.பாலசந்தர். ஆனால், தேங்காய் சீனிவாசனுக்கு மட்டும் அதில் விதிவிலக்குக் கொடுத்ததை ‘தில்லுமுல்லு’ படத்தின் நினைவலைகளில் பதிந்து சென்றிருக்கிறார். அந்தப் படத்தில் கண்டிப்பான, பக்திச் சிரத்தை கொண்ட, ஏமாளி முதலாளியாக வந்து, நடிப்பு ராட்சசியான சௌகார் ஜானகியையும் தூக்கிச் சாப்பிட்டிருப்பார் தேங்காய் சீனிவாசன்.
“‘தில்லுமுல்லு’வில் தேங்காய் சீனிவாசனின் வசன மாடுலேஷனை நான் மாற்ற விரும்பல. அந்தக் கேரக்டரை அவரோட பாணியிலேயே செய்யணும்னு விரும்பினேன். கதாபாத்திரத்தை விளக்கிச் சொல்லிட்டு, வர்ற ஒவ்வொரு காட்சியையும் உன்னோட ஸ்டைல்லயே போயிடுப்பா அது இந்தப் படத்துக்கு வேணும்னு கேட்டு வாங்கினேன். அவரோட தனித்துவமான உடல்மொழி, வசன உச்சரிப்பு, கண்களை, உதடுகளை, புருவங்களை அவர் பயன்படுத்துவதில் வசனத்தின் வீச்சு இன்னும் வேகமாகத் தாக்கும். படப்பிடிப்பில அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிச்சவன் நான்.
அது மட்டுமில்ல; எல்லா வேடங்களுக்கும் பொருந்திவிடக் கூடிய ஒரு உடலமைப்பும் உடல்மொழியும் தோற்றமும் தேங்காய் சீனிவாசனுக்கு ஒரு வரப்பிரசாதம். சில சமயம் மிகை நடிப்புபோல தோணும். ஆனால், உணர்ச்சிய அவர் சரியான இடத்தில் சமப்படுத்தி, தேவைப்படும் வார்த்தைகளுக்குக் கொடுக்கும் அழுத்தமும் மென்மையும் அந்த எண்ணத்தை அடுத்த நொடியே இல்லாம ஆக்கிடும். அதுதான் சீனுவோட மேஜிக். அவருடன் இன்னும் பல படங்களில் வேலை செய்ய விரும்பியவன். காலம் அனுமதிக்கல. 50 வயசுல குட் பை சொல்லிட்டான்” என்று நெகிழ்ந்திருக்கிறார்.
அமெச்சூர் குழுவில் ஒரு அசத்தல் நடிகர்! - அறுபதுகளின் சென்னையில், பெரும்பாலான மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களால் நடத்தப்பட்டு வந்த அமெச்சூர் நாடகக் குழுக்கள் பிரபலமாக இருந்தன. அவற்றில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையின் ஊழியர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்த நாடகக் குழுவும் ஒன்று. அதில் தொழில்முறையில் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு கலைஞர் இருந்தார்.
அவர்தான் பாலசந்தரே ரசித்த தேங்காய் சீனிவான். நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் ஆகியவற்றுடன் கதாநாயகனாகவும் நடிக்க முடியும் என்று 965 படங்களின் வழியாக நிரூபித்து, இறக்கும்வரை 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இடையறாது களமாடிச் சென்றிருக்கிறார் அவர், எம்.ஜி.ஆருடன்பல படங்களில் எதிரும் புதிருமாக மல்லுக்கட்டிய ‘கவர்ச்சி வில்லன்’ கே.கண்ணனின் நாடகக் குழுவில் முக்கியமான நடிகராக அங்கம் வகித்தார். ஜெய்சங்கரை மேடைகளில் புகழ்பெற வைத்த கூத்தபிரானின் குழுவிலும் தேங்காய் சீனிவாசனுக்கு இடமிருந்தது. ‘சித்ராலயா’ கோபு எழுதிய நாடகங்கள், சிவாஜி மன்ற நாடகங்களிலும் தேங்காய் சீனிவாசனுக்கு கதாபாத்திரங்களை ஒதுக்கித் தந்தார்கள்.
அப்பா வழங்கிய கலை: தூத்துக்குடி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ராஜவேல் சென்னைக்கு குடியேறி, ‘தசாவதாரம்’ ஸ்பெஷல் நாடகம் நடத்தி நாற்பதுகளில் புகழ்பெற்றிருந்த கண்ணையா நாடகக் குழுவில் இணைந்து தன்னை வளர்த்துக்கொண்டவர். அவர்தான் தேங்காய் சீனிவாசனின் தந்தை. பின்னாளில் தனக்கென்று தனி குழுவொன்றை தொடங்கி பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தினார். தன்னைப் போல் மகன் நாடகத் துறைக்கு வரக் கூடாது என்று கருதிய ராஜவேல், மகன் பள்ளிப் படிப்பை முடித்ததும் தொழிற்கல்வி முடிக்க வைத்து, ஐ.சி.எஃப்பில் வேலைக்கும் சேர்த்துவிட்டார்.
தந்தை சொல் தட்டாத பிள்ளையாக அரசு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் நாடக நடிகனாகி அதன் வழியே சினிமாவிலும் நுழைந்து பெயர் வாங்கிவிட வேண்டும் என்கிற கனவு சீனிவாசனின் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜியின் ரசிகன்தான் என்றாலும் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும் சந்திரபாபுவின் நடிப்பும் தான் தேங்காய் சீனிவாசனுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. வந்தால் அவர்களைப் போல் வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால், பளிச்சென்ற நிறம், ஆஜானுபாகுவான 6.2 அங்குல உயரம், அச்சில் வார்த்ததுபோன்ற அழகான தோற்றம் என அந்நாளைய கோடம்பாக்கம் கதாநாயகனுக்கு உரிய அத்தனை தகுதிகளும் சீனிவாசனுக்கு இருந்தன.
நாடக ஒத்திகையில் இருக்கும் அப்பாவுக்கு மதிய உணவு கொடுக்கச் செல்வதை வழக்கமாக வைத்திருந்த இளைஞர் சீனிவாசன், ஒத்திகையில் நடிகர் ஒருவர் பேச மறந்த வசனத்தை எடுத்துக்கொடுத்ததுடன் நில்லாமல் கதாபாத்திரத்தின் ‘மாடுலேஷ’னுடன் அதைச் சொல்லி, அப்பாவின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். அதன்பிறகும் மகனைப் புறக்கணிப்பது சரியல்ல என்று கருதி, தனது நாடகங்களில் சிறுசிறு வேடங்களைக் கொடுத்தார் அப்பா ராஜவேல். தனது ‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தில் மகனைக் கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தினார். 100 காட்சிகளைக் கடந்து ஹிட்டடித்தது அந்த நாடகம்.
தேங்காய் சீனிவாசனின் வாழ்க்கையில் இரண்டு நாடகங்கள் திருப்புமுனையாக அமைந்தன. ஒன்று ‘கவர்ச்சி வில்லன்’ கே.கண்ணன் குழுவினர் நடத்திய ‘கல்மனம்’. அந்த நாடகத்துக்கு தலைமை வகித்த தங்கவேலு, அதில் தேங்காய் வியாபாரியாக வந்து, நொடிக்கொரு ஹாஸ்ய வெடிகளைக் கொளுத்திப் போட்டு வெடித்துக்கொண்டிருந்த சீனிவாசனின் நடிப்பைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார், நாடகத்துக்குத் தலைமையேற்க வந்திருந்த ‘டணால்’ கே.ஏ.தங்கவேலு. நாடகம் முடிந்ததும் மேடையேறிப் பேசினார். “ நான் சாதாரணமாக சிரிக்க மாட்டேன். ஆனால் சீனிவாசனின் நடிப்பு என்னை விலா எலும்பு உடையும் அளவுக்குச் சிரிக்க வைத்து விட்டது.
தேங்காய் வியாபாரியாக நடித்து முற்றிய தேங்காய் போல் தன் நடிப்பால் ருசிக்க வைத்த இவரை, இனி ‘தேங்காய்’ சீனிவாசன் என்றே அழைப்போம்” என தன்னுடைய குரு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வழியில் ஒரு பட்டத்தையும் கொடுத்து விட்டுப்போனார். அன்றைக்கு சீனிவாசனுடன் ‘தேங்காய்’ மட்டுமல்ல; கூடவே அதிர்ஷ்டமும் ஒட்டிக் கொண்டது.
சிவாஜியையும் மிரள வைத்தவர்: நாற்பது வயதுக்குள் 400 படங்களில் நடித்து முடித்திருந்த தேங்காய் சீனிவாசன், வாலி எழுதிய ’கண்ணன் வந்தான்’ என்கிற நாடகத்தில், அப்பளம் செய்து விற்று தொழிலதிபராக உயரும் கதாபாத்திரத்தில் கதா நாயகனாக நடித்தார். அது சூப்பர் டூப்பர் ஹிட்! அதைக் கேள்விப்பட்டு முன்னறிவிப்பு இல்லாமல் வந்து நாடகத்தைப் பார்த்து பாராட்டினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதே நாடகம் படமானபோது அதில் கதாநாயகனாக நடிக்க சிவாஜிக்கு அழைப்பு வந்தபோது மறுத்தார். ‘அந்தக் கதையும் அதில் சீனிவாசனின் நடிப்பும் என்னைத் தொந்தரவு செய்துவிட்டது. அதில் அவன்தான் நடிக்க வேண்டும்’ என்றார்.
கதாநாயகனாக மட்டுமல்ல; காமெடியனாக நடித்தும் கதாநாயகனை விஞ்சி நின்ற ஒரே நடிகர் தேங்காய் சீனிவாசன்தான். ‘சித்ராலயா’ கோபுவின் ‘காசேதான் கடவுளடா’ படத்தில் அப்பாசாமியாக நடித்த தேங்காய் சீனிவாசனுக்கு சென்னை பைலட் திரையரங்கின் வாசலில் கட் அவுட் வைக்கப்பட்டது. இது எந்த நகைச்சுவை நடிகருக்கும் கிடைத்திராத அங்கீகாரம். இன்று பைலட் திரையரங்கு இல்லை.. தேங்காய் சீனிவாசனின் புகழ் நிலைத்தி ருக்கிறது. -
May be an image of 2 people
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...