Tuesday, October 31, 2023

நல்ல பெயர் வாங்கினாள்...

 மிகுந்த எதிர்ப்புடன் பல போராட்டங்களுக்கு இடையே தான் அருண் அவன் அழகு மனைவி சத்யாவை திருமணம் செய்து கொண்டான்...

அருணுக்கு காதலித்து ரொம்ப நாள் கழித்து தான் தெரியும் சத்யா சைவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று...
"உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேங்க "என்று எப்போதும் உருகினாள் சத்யா.. இப்படிப் பட்ட மனைவி வாய்த்ததை நினைத்து அருணுக்கு ஒரே பெருமை...
சத்யா மணமுடித்து வந்ததும் மாமியாரிடம் "அத்தை இனிமேல் சமையலை நான் பார்த்துக் கொள்கிறேன்.. இனிமேல் நீங்க டிவி பார்த்துக்கிட்டு ரெஸ்ட் எடுங்க" என்று மாமியார் மோகனத்திடமும் நல்ல பெயர் வாங்கினாள்...
அருணும் அவனது அம்மாவும் "இதுவரை இந்த மாதிரி எல்லாம் சாப்பிட்டதே இல்லைமா" என்று சத்யா சமைத்த கிழங்குகள் வறுவல் பருப்பு உசிலி வத்தக்குழம்பு பாயச வகைகள் என்று அசத்தலாக இருந்தன...
ஞாயிற்றுக்கிழமைகளில் அடுத்த தெருவில் வசிக்கும் அருணின் அக்கா வீட்டிற்கு புது மணமக்கள் விருந்திற்கு போனார்கள்.
சத்யா போன இடத்திலும் "எனக்கு ரசம் தயிர் ஊறுகாய் போதும் க்கா.. எனக்காக தனியாக சைவம் சமைக்க வேண்டாம். நீங்க எல்லாரும் நான்வெஜ் சாப்பிடுங்க"என்று நாத்தனாரிடமும் நல்ல பெயர் வாங்கினாள்...
அருணுக்கு ஒரே பெருமை..." என் காதல் மனைவி எப்படி அட்ஜஸ்ட் பண்ணி போகிறாள்.. பார்த்தியா"என்று அக்காவைப் பார்த்து கேட்டே விட்டான்.."ஆமாடா சத்யா ரொம்ப நல்ல பெண் தான்... எல்லாருக்கும் பிடித்த மாதிரி நடந்து கொள்கிறாள்"என்று அவன் அக்காவும் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை வந்தது... "வாரம் பூராவும் தான் சைவம் சாப்பிட்டியே.. இன்னிக்கு என்ன டா வாங்கி வரப் போற "என்று மகன் அருணைப் பார்த்து கேட்டாள் சத்யாவின் மாமியார்..
அப்போது "மீன்..ஏறா..மீன்"என்று வழக்கமாக மீன் கொண்டு வருபவர் அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினார்..
"சங்கரா மீன் வாங்கி குழம்பு வைத்து விட்டு கொஞ்சம் வறுவலும் எறா வாங்கி தொக்கும் செய்து விட்டால்... அப்படியே அக்காவிடம் ஒரு எட்டு கொஞ்சம் போய் குடுத்து விட்டு வந்து விடு "என்று சத்யா மாமியார் அருணிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்...
அருண் அம்மாவின் குரலைக் கேட்டு வாசலுக்கு வந்தவன் அதே வேகத்தில் உள்ளே போய் "சத்யா அம்மா மீனும் ஏறாவும் வாங்க சொன்னாங்க..வச்சிடுவேல்ல" என்று எதுவுமே யோசிக்காமல் கேட்டான்...
சத்யா தன் அன்புக்கணவன் ஆசை ஆசையாக கேட்கிறான்... என்று உடனே "மீன் குழம்பு தானே செய்து விடுறேன் ங்க"என்று ஒப்புக் கொண்டாள்...
அருணும் மீன் விற்பவரிடம்"என் மனைவி சுத்த சைவம்.. மீன் ஆயத் தெரியாது.. நீங்க தான் ஆய்ந்து தரணும் "என்று கேட்க அவரோ"மற்ற நாள் னா பரவாயில்லை தம்பி... நான் இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை..நாலு தெரு போகணும் நிறைய மீன் இருக்குப்பா "என்று மீனுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு அடுத்த தெருவிற்குப் பறந்து விட்டார்...
அருண் வேறு வழி இல்லாமல் "அம்மா சத்யாவுக்கு.."என்று ஆரம்பிக்கும் போதே " என்ன அவ சுத்த சைவம்... அதானே சொல்லப் போற...குடு குடு மீனையும் எறாவையும்...நானே ஆய்ஞ்சு தரேன்" என்று சத்யா மாமியார் மோகனம் சலிப்புடன் வாங்கி கொண்டு போனார்...
மீனையும் எறாவையும் மாமியார் சுத்தம் செய்யும் போதே சத்யாவுக்கு அந்த வாசம் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது...
அவள் கணவன் அருண் கேட்டதும் என்ன வத்தக்குழம்பு மாதிரி வைத்து அதில் வத்தலுக்குப் பதிலாக மீன் துண்டங்களைத் தூக்கிப் போட வேண்டியது தானே மீன் குழம்பு வைப்பது உருளைக்கிழங்கு காரக்கறி மசாலாவில் கிழங்குக்குப் பதிலாக எறாவைத் தூக்கிப் போட்டு விடலாம் அவ்வளவு தான் எறாத் தொக்கு என்று சர்வ சாதாரணமாக நினைத்து விட்டாள் சத்யா..
இப்போது மாமியாரும் முகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து ஆய்ந்து முடித்த மீன் பாத்திரங்களை சமையல் மேடையில் நங்கென்று வைத்து விட்டு போனதைப் பார்த்து சத்யாவுக்கு ஒரு மாதிரி இருந்தது...
இப்போது சமையலைப் பார்ப்போம் அப்புறமாக அத்தையை சமாதானப் படுத்தலாம் என்று குழம்புக்கு சின்ன வெங்காயத்தை நறுக்கி வாணலியை அடுப்பில் வைத்தாள்...
மீன் ஆய்ந்ததைப் பார்த்தால் சத்யாவுக்கு திரும்பவும் நன்றாக கழுவ வேண்டும் என்று தோணியது... கணவன் ரசித்து சாப்பிட போவதை கற்பனை செய்து கொண்டே மீனையும் எறாவையும் குழாயில் இன்னும் நன்றாக திருப்தியாகும் வரை அலசி ஒரு வழியாக மீன் குழம்பும் எறாத் தொக்கும் சமைத்து விட்டு ஒரு ரசம் தனக்காக உருளை ஃபிரை மட்டும் வைத்து கணவனைக் கூப்பிட்டு "ஏங்க.. எல்லாமே செய்து முடித்து விட்டேன்.. நீங்க உப்பு மட்டும் சரியாக இருக்கா என்று டேஸ்ட் பண்ணி சொல்லுங்க..பத்தலன்னா போடுறேன்"என்று கொஞ்சலாக சொன்னாள்..
அருணும் மீன் குழம்பைக் கரண்டியில் எடுத்துக் கையில் ஊற்றி ருசி பார்த்து "அய்யோ.. எங்க அம்மா அக்கா கூட இப்படி ஒரு மீன் குழம்பும் எறாத் தொக்கும் செய்தது இல்லை "என்று புது மனைவியைப் பாராட்டி சத்யாவை ஐஸ் மழையில் நனைய வைத்துக் கொண்டு இருந்தான்..
"ஏங்க.. சத்தமா புகழாதீங்க... அத்தை காதில் விழுந்தால் கோவித்துக் கொள்ளப் போறாங்க "என்று சத்யா அருணை ஆசையாகப் பார்த்துக் கொண்டே டேபிளில் சமைத்ததை எடுத்து வைத்து விட்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்த அவள் மாமியாரை "அத்தை பசியா இருப்பீங்க சாப்பிட வாங்க " என்று கூப்பிட்டாள்..
காலையில் மீன் ஆய்ந்த கடுப்பில் பேசாமல் இருந்த மோகனம் களைப்புடன் வந்த மருமகளைப் பார்த்ததும் பாவமாக தோண "இதோ வரேம்மா சத்யா"என்று அவள் தோளைப் பிடித்துக் கொண்டு சாப்பிட வந்து உட்கார்ந்தார்...
அருண் தட்டில் சுட சுட சாதத்தை வைத்து மீன் துண்டங்களைப் போட்டு மீன் குழம்பையும் ஊற்றி எறாத் தொக்கையும் சத்யா ஆசையாக சைட் பிளேட்டில் எடுத்து வைத்தாள் ...
ஒரு வாய் சாப்பாட்டை அள்ளி அருண் சாப்பிட்டதும் அவன் முகத்தையே சத்யா பார்த்துக் கொண்டு இருந்தாள்.. மீன் குழம்பு எப்படி இருக்கிறது என்று ஏதாவது சொல்வானா என்று... அருண் எதுவும் சொல்லாமல் சாப்பாட்டை மிகவும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்
சத்யாவின் மாமியார் மோகனம் "டேய் அருண் நீ சாப்பிட்டு விட்டு அக்காவுக்கு மீன் குழம்பு ஃபிரை எறாத் தொக்கு எல்லாம் கொண்டு போய் குடுத்து விட்டு வந்து விடு டா"என்று சொல்லி விட்டு சாப்பிட உட்கார்ந்தார்
சத்யா"நான் சமைத்த உடனே எல்லாமே டப்பாவில் போட்டு அக்காவுக்கு பேக் பண்ணி வைத்து விட்டேன் அத்தை"என்று மோகனத்திற்கு பரிமாற வந்தாள்...
"நானே போட்டுக்கறேன் மா..நீ அருணைக் கவனி"என்று சொல்லி விட்டு வெறும் குழம்பு மட்டும் ஊற்றி உருளைக்கிழங்கு ஃபிரை வைத்து சாப்பிட ஆரம்பித்தார்...
"என்ன அத்தை ஏன் எதுவுமே எடுத்து வைத்துக் கொள்ளவில்லை"என்று சத்யா பதறிப் போய்க் கேட்டாள்..."இல்லமா நீ பதறாத...வயசு ஆயிடுச்சு எண்ணெயில் பொரித்த பண்டங்கள் ஜீரணம் ஆகுவது இல்லை.. வீட்டில் நான்வெஜ் அருணுக்காகவும் அவன் அக்காவுக்கு குடுத்து விடுவதற்காக மட்டுமே செய்வது தான் மா "என்று மென்மையாக சத்யாவிடம் மோகனம் சொன்னார்...
அருண் சாப்பிட்டு முடித்ததும் அவன் அக்கா வீட்டுக்கு சத்யா பேக் பண்ணி வைத்த கூடையை எடுத்துக் கொண்டு பைக்கில் கிளம்பி விட்டான்..
சத்யாவின் மாமியாரும் "ரொம்ப நல்லா இருந்தது மா குழம்பு.. நாங்க கூட இவ்வளவு ருசியாக மீன் குழம்பு வைக்க மாட்டோம்... சரி நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு... நானும் கொஞ்ச நேரம் படுத்துக் கொள்கிறேன்"என்று தன் அறைக்குள் போய் விட்டார்...
மாமியார் சமையலைப் பாராட்டியதில் மனம் நிறைந்து சத்யா ஒரு தட்டில் சாதத்தைப் போட்டு ரசத்தை ஊற்றி உருளைக்கிழங்கு ஃபிரை எடுத்துப் போட்டுக் கொண்டு வாய் அருகே சாப்பாட்டை கொண்டு போனதும் உமட்டிக் கொண்டு வந்தது ...
சத்யாவால் ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிடவே முடியவில்லை... தண்ணீர் கூட குடிக்க முடியாமல் கையை மூக்கருகே கொண்டு போகவே முடியவில்லை... அக்கா வீட்டுக்குப் போன கணவனும் அரட்டை அடித்து விட்டு வர நேரம் ஆகும் என்று தெரிந்ததால் சத்யா அவர்கள் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து வேலை செய்த அசதியிலும் பசிக் களைப்பிலும் தூங்கி விட்டாள்...
அக்கா குழந்தைகளுடன் வாரத்திற்கு ஒரு நாள் தானே விளையாட முடிகிறது என்று அருணும் அவனது அக்கா வீட்டில் இருந்து சாயங்காலம் தான் வீட்டுக்கே வந்தான்... அருணின் அக்காவும் "சமையல் எல்லாமே அட்டகாசமா இருக்குடா தம்பி " என்று பாராட்டியதும் "எனக்காக அவ முதல் முறையாக சமைச்சாக்கா " என்று காலரைத் தூக்கி விடாத குறையாக அவனது மச்சான் முன் அருண் பெருமைப் பட்டுக் கொண்டான்...
சாயங்காலம் அருண் வீட்டிற்குள் நுழைந்த போது மோகனமும் அப்போது தான் தூங்கி எழுந்து அறையை விட்டு வெளியே வந்து காஃபி குடிக்க மருமகளைத் தேடினாள்...
"என்னடா அருண் இன்னமுமா உன் மனைவி தூங்குறா" என்று கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் சென்று சாதம் வைத்த பாத்திரத்தை திறந்து பார்த்தார்.. அவர்கள் இருவரும் சாப்பிட்டது போக மீத சாதம் அப்படியே இருந்தது...
"அருண், சத்யா மதியம் சாப்பிடலயாப்பா "என்று மோகனம் கேட்டதும் தான் "தெரியலம்மா .. நானும் இப்ப தான் வந்தேன் "என்ற அருணுக்கு சத்யா மதியம் சாப்பிடாததே தெரிந்தது...
கணவனின் குரல் கேட்டதும் தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்ட சத்யா "அச்சோ அசதியில் இவ்வளவு நேரம் தூங்கி விட்டேன் போல...இதோ காஃபி போட்டுத் தர்றேன் அத்தை"என்று சத்யா வேகமாக சமையலறைக்குள் நுழையப் போனாள்...
"இரு சத்யா நீ காலையில இருந்து எதுவும் சாப்பிடவே இல்லையே ..நீ சாப்பிட்டுவிட்டு பிறகு காஃபி போடும்மா " என்று சொல்லி விட்டு மோகனம் உள்ளே சென்று விட்டார்..
"ஏன் சத்யா சாப்பிடல.. எனக்காக நீ காத்திருக்க வேண்டாம் என்று எத்தனை முறை சொல்வது" என்று அருண் கேட்டான்...
"இல்லைங்க... நான் அப்பறமா சாப்பிட்டுக்கிறேன்"என்ற சத்யாவை "இல்லை அம்மா சொன்னாங்கல்ல...நீ சாப்பிட்டு காஃபி போடு" என்று சத்யாவை சாப்பிட சொல்லி வற்புறுத்தவே வேறு வழி தெரியாமல் "இல்லங்க... என்னால் சாப்பிட முடியவில்லை" என்று சத்யா தயங்கி தயங்கி சொல்லி முடித்தாள்.
அசைவம் சமைக்க ஒத்துக் கொண்டாலும் சத்யவால் அசைவ சாப்பாட்டை சாப்பிடுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று நன்கு அறிந்தே இருந்தான் அருண்...
"ஏன் உனக்கு காய்கறிகள் எதுவும் செய்யவில்லையா"என்று அருண் கேட்டான்...
"அதில்லைங்க... எனக்கு ரசம் ஊறுகாய் கூட போதும்... ஆனாலும் அந்த... மீன் வாசம் கையை விட்டுப் போகவில்லை... என்னால் சாப்பிட முடியல... " என்று சத்யா மென்று முழுங்கிக் காரணத்தை சொன்னாள்... கணவன் முகம் வாடிப் போனதைக் கண்டதும் "அதனால் என்னங்க... அசைவம் சமைக்கும் அன்று மட்டும் ஒரு நாள் விரதம் என்று நினைத்துக் கொள்கிறேன்... எங்க வீட்டில் அம்மா பாட்டி கூட சேர்ந்து நானும் விரதம் இருந்து பழக்கம் தான் " என்று சத்யா அருணை சமாதானப் படுத்த முயன்றாள்...
இதைக் கேட்டதும் அருண் இன்னமும் நொறுங்கிப் போனான்.. இவ்வளவு நாளும் தன் மனைவி தனக்காக எது வேண்டுமானாலும் செய்வாள் என்று எல்லாரிடமும் பெருமையாக சொல்லி கொண்டு திரிந்தோமே... தான் தன் காதல் மனைவிக்கு என இதுவரை எதுவுமே செய்யவே இல்லையே என்று முதல் முறையாக உணர்ந்து மனதார வருந்தினான்...
உடனே பைக் எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குப் போய் சிப்ஸ் பாக்கெட்டுகள் வீட்டில் பூண்டு ஊறுகாய் தான் இருக்கும்...மனைவிக்குப் பிடித்த ஆவக்காய் ஊறுகாய் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து ஃபிரிட்ஜில் இருந்த தயிரை எடுத்து சாதத்தில் போட்டு கரண்டியால் மசித்து தட்டில் எடுத்து வைத்து ஒரு ஸ்பூன் போட்டு அருணே சத்யாவுக்கு அருகில் அமர்ந்து ஊட்டி விட்டுக் கொண்டே சொன்னான்...
"சத்யா நான் இத்தனை நாட்களும் நீ எனக்கு செய்வதையே பெருமையாக நினைத்துக் கொண்டு இருந்து விட்டேன்... உன்னைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க தோணவில்லை... என்னை மன்னித்து விடு..."என்று சொன்ன அருணின் வாயைப் பொத்தின சத்யாவின் கைவிரல்களை முத்தமிட்டுக்கொண்டே
"என்னால் உடனே வெஜிடேரியனாக மாற முடியாது.. மாற முடியாமல் கூட போகலாம்..நான் வளர்ந்த விதம் அப்படி...ஆனால் உன்னை இனிமேல் வீட்டில் நான்வெஜ் சமைக்கச் சொல்ல மாட்டேன்...இது உறுதி.."என்று கண்ணீருடன் தன் தோளில் சாய்ந்த மனைவியின் தலையை வருடிக் கொடுத்தான்...
மருமகள் சாப்பிட்டாளா என்று பார்க்க அறையை விட்டு வெளியே வந்த மோகனம் தன் மகன் சத்யாவுக்கு ஊட்டி விட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்து விட்டு திருப்தியாக தலையை ஆட்டிக் கொண்டே தன் அறைக்குள் நுழையப் போனார்...
அருண்"அம்மா..நில்லுமா... உங்களுக்கு வேண்டும் என்றால் அக்கா வீட்டுக்குப் போய் நான்வெஜ் சாப்பிட்டுக் கொள்ள முடியுமா... இனிமேல் சத்யா நம் வீட்டில் நான்வெஜ் சமைக்க மாட்டா ம்மா"என்று சொன்னான்...
"ஏன்டா நான் என்ன நான்வெஜ் சமைத்தாலும் குழம்பு மட்டுமே ஊற்றி சாப்புடுறேன்... என் மருமகள் சத்யா வைக்கும் காய்கறிக் குருமா குழம்பே கறிக் குழம்பு மாதிரி தானே இருக்கிறது "என்று மோகனம் சிரித்ததும் அருணும் சத்யாவும் கூட சேர்ந்தே சிரித்தனர்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...