Tuesday, October 31, 2023

"தபு"

 இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தந்தை மூன்று வயதில் விலகிப் போய் விட, மெத்தப் படித்திருந்த தாய், தாத்தா மற்றும் பாட்டியிடமிருந்து, தன் வாழ்வை நிர்ணயித்துக் கொள்வதற்கான பூரண சுதந்திரம் அவருக்கு கிடைத்திருக்கிறது.11 வயதாகும் போது திரையில் ஏதோ ஓரிடத்தில் பதிவாக, 14 வயதில் இந்தியில் தேவ் ஆனந்திற்கு மகளாக நடிக்கிறார்.அதன் பின்னர் சரியாக ஆறாண்டுகள் கழித்து, தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ்க்கு ஜோடியாக "கூலி நம்பர் 1" படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பமைய, அங்கு தொடங்கியது அவரின் கேரியர். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் என நடிக்காத மொழிகளில்லை. தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது என அங்கீகாரங்களுக்கும் பஞ்சமில்லை.மனுஷிக்கு 51 வயதாகிறது.பல்வேறு சர்ச்சைகள், விவாதங்களைத் தாண்டியும் சினிமா இண்டஸ்ட்ரியில் தொடர்ந்து பயணிக்கிறார்.ஒருபுறம் அல்லு அர்ஜூனுக்கு அம்மாவாக நடிக்கும் அதே வேளையில், இன்னொருபுறம் கதை நாயகியாக இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

"Khufiya"
பாலிவுட்டில் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்ட விஷால் பரத்வாஜ்ஜின் இயக்கத்தில் "Escape to Nowhere" என்கிற நாவலைத் தழுவி ஸ்பை - த்ரில்லராக உருவாகி வெளியாகியிருக்கிறது. இந்திய உளவுத்துறையான "RAW"வில் ரிசர்ச் & அனைலைஸ் குழுவில் பணிபுரியும் மெஹ்ரா கிருஷ்ணா என்கிற தபுவின் கீழ், ஹீனா என்கிற வங்கதேசப்பெண், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் மிஸ்ரா பற்றிய தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியிலிருக்கிறாள். பணிச்சுமை காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மீனாட்சிக்கு, ஒரு கட்டத்தில் ஹீனாவோடு உடல்ரீதியான உறவும் ஏற்படுகிறது.ஹீனா ISIக்கும் உளவாளியாக வேலை செய்து கொண்டிருப்பது பின்னர் தெரிய வர, மீனாட்சி அவளை விட்டு விலக முற்படுகிறாள். ஆனால் மீனாட்சியின் மீதான தன் அன்பை நிரூபிக்க, வங்கதேச பாதுகாப்புத்துறை அமைச்சரை கொலை செய்ய முற்படும் "Octopus" என்கிற ஆப்ரேஷனில், ஹீனாவே சிக்கி கொண்டு உயிரிழக்க நேர்கிறது.கடைசி நிமிடத்தில் தோல்வியுற்ற இந்த ஆப்ரேஷன் குறித்து அமைச்சருக்கு தகவல் சொன்னது யாரென்று விசாரித்தால் அதே "RAW" பிரிவில் பணியாற்றும் ரவியிடம் வந்து முடிய, அவனை பின்தொடர்ந்து உளவு பார்க்கிற போது, அதன் முடிச்சுகள் ஆப்கானிஸ்தான், அமெரிக்க CIA வரை நீள்வது தெரிய வருகிறது.இப்போது "Octopus" ஆப்ரேஷன் "Brutus" என்கிற வேறு பெயரில் தொடர்கிறது. இன்னொருபுறம் ரவியின் மனைவி சாரு (வாமிகா) இதைப்பற்றி எதுவும் அறியாமல் மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு கட்டத்தில் தன்னை RAW அதிகாரிகள் உளவு பார்ப்பது ரவிக்கு தெரிய வர, அங்கிருந்து தாயார், மனைவி, மகனோடு தப்பிக்க நினைக்கும் கணத்தில் எதிர்பாராத விதமாக மனைவிக்கு அசம்பாவிதம் நிகழ்ந்து விடுகிறது.மீத மூன்று பேரும் அமெரிக்காவுக்கு தப்பி போக, தபுவின் வழிகாட்டுதலில் மகனைத் தேடி அங்கும் போகிற சாரு மகனை மீட்டாளா..? "Brutus" ஆப்ரேஷன் வெற்றியடைந்ததா..? அமைச்சர் மிர்சா என்னவானார் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்பை த்ரில்லர் என்ற உடனே ஜேம்ஸ்பாண்ட் மற்றும் நம்மூர் விஸ்வரூபம் 1 பாணியில் இருக்குமென நம்பி அமர வேண்டாம்.அதிரடி ஆக்சன் காட்சிகள் பெரிதாக எதுவுமின்றி அன்றாட வேலைகளை செய்யும் சராசரி பணியாளரைப் போல, இங்கும் அத்தனை யதார்த்தமாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்கிறார்கள் அதிகாரிகள்.எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி தெளிவாக, அதே நேரத்தில் அடுத்தென்ன நடக்கப் போகிறதோ என நாம் ரசிக்கிற அளவுக்கு பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தை தபுவும், வாமிகாவும் (மாலை நேரத்து மயக்கம்) தோள்களில் சுமந்திருக்கிறார்கள்.தபுவின் நடிப்பைத் திரையில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல.பணிச் சூழலால் மகனின் சிறிய விருப்பங்களைக் கூட நிறைவேற்ற முடியாத தாய், விவாகரத்து ஆனாலும் மதிப்போடு நடத்தும் கணவனின் பரிவை புரிந்து கொள்ளும் மனைவி, உளவுத்துறையில் அதிகாரி, லெஸ்பியன் பார்ட்னர் என பல்வேறு பரிமாணங்களில் மிளிர்கிறார்.ஆஷிஷ் வித்யார்த்தி, அதுல் குல்கர்னி மாதிரியான பரிட்சயப்பட்ட முகங்கள் நம்மை ஈர்ப்பாக பார்க்க வைக்கிறது.படத்தின் பல்வேறிடங்களில் வருகிற உரையாடல்கள் வாழ்வின் யதார்த்தத்தை மிக அப்பட்டமாக உணர்த்துகிறது.நன்மை, தீமை என்கிற குணங்கள் எல்லோருக்குள்ளும் பொதுவாகவே இருக்கையில், பல சூழல்களில் பிறரை எடை போடுவதன் வாயிலாக நாம் தான் வாழ்வை மிகச் சிக்கலாக்கி கொள்கிறோமோ என படம் பார்த்த பின்னர் தோன்றியது. நெட்ஃப்ளிக்சில் தமிழிலும் கிடைக்கும் இப்படத்தை உரையாடலை அதிகம் நேசிக்கும் பார்வையாளர்கள் தவறாது பாருங்கள்..!
May be an image of 3 people and text
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...