Saturday, November 18, 2023

திரைத்துறையின் போக்கு இப்போது எப்படி இருக்கிறது?

 அந்த காலகட்டத்தில் நான் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற உணர்வோடுதான் அந்த திரையுலகத்திற்குள் நுழைந்தேன். என்னுடைய ஆண் தாய் என்று சொல்லத்தக்க அளவிற்கு என் உள்ளத்தில் ஊடுருவியிருக்கும் பாரதிராஜா அவர்களுடைய 16 வயதினிலே என்கிற திரைப்படம்தான் என்னையும், என்னைப் போன்றவர்களையும் நீங்களும் திரைப்பட இயக்குனர்களாக வரலாம். திரைக்கதை எழுதலாம், பாடல் எழுதலாம் என்கிற நம்பிக்கை ஊட்டிய படம். அதுவரையிலும் திரைப்பட உலகம் என்பது தமிழர்களுக்கு அதுவும் அடிநிலைத் தமிழர்களுக்கு ஒரு இரும்புக் கோட்டையின் சுவர் எப்போது திறக்கும், திறக்காது என்கிற அவநம்பிக்கையிலேயே இருந்த தமிழர்களுக்கு அந்த இரும்புக்கதவை உடைத்து எங்களையும் உள்நுழைய வைத்த உணர்வுகளுக்குக் காரணமானவர் எம் ஆண் தாய்கள் இசைஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர். அப்போது அந்த தளத்தில் என் நண்பர்கள் ஆங்காங்கே நீ எழுது, எழுது என்று சொன்ன போது நான் இயக்குனராக வேண்டும் என்பதற்காக மறுத்து வந்தேன்.

அந்த காலகட்டத்தில் தான் ‘கிழக்குச் சீமையிலே’ என்கிற படத்தில் பாரதிராஜா அவர்களோடு இணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த என் உணர்வுகளைக் கவனித்த அண்ணன் தயாரிப்பாளர் தாணு அவர்கள் ‘நான் சிறைச்சாலை என்கிற ப்ரியதர்ஷனின் படத்தின் தமிழ்மொழியை எடுக்கிறேன். அதில் உரையாடல்கள், பாடல்கள் அறிவுமதி என்று போடப் போகிறேன். என்ன சொல்கிறாய்’ என்று கேட்க நான் மறுக்காமல் சரியென்று சொல்லிவிட்டேன். சிறைச்சாலை என்கிற படத்தில் இசைஞானியின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல்கள்தான் ‘செம்பூவே பூவே’, ‘மன்னன் கூறைச்சேலை’, ‘சுட்டும் விழிச் சுடர் பார்வையிலே’, ‘ஆலோலங்கிளி தோப்பிலே’, ‘இது தாய் பிறந்த தேசம்’, என்கிற 5 பாடல்கள். அது உலகத் தமிழர்கள் அனைவரின் இல்லத்திற்கும் அழைத்துச் சென்று அவர்களுடைய செல்லப் பிள்ளையாக என்னை அறிமுகம் செய்து வைத்தன.
திரைத்துறையின் போக்கு இப்போது எப்படி இருக்கிறது?
இப்போது திரைப்படத்துறையின் அகப்போக்கு சரியானதாக, திருந்தியதாக தெரியவில்லை. ஆனால் புறப்போக்கு என்று பார்க்கிற போது தமிழ் இன உணர்விற்கும், உலகத்தில் எங்கே தமிழன் காயப்பட்டாலும் அதற்கு மருந்து தடவ நாங்களும் தயாராக இருக்கிறோம் என்கிற உணர்வுகளை இன்றைக்கு திரைப்படத்துறை காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் திரைப்படத்துறை என்பது பல்வேறு வகையான இன் மக்களுடைய கூத்துப்பாடல்கள், நடவுப் பாடல்கள், தாலாட்டுகள், தெம்மாங்குகள், ஒப்பாரிகள், அவர்களுடைய கூத்து அடவுகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு நவீன துறைதான். அந்த தமிழ்த்திரைத்துறை என்பது தமிழர்களுக்கானத் திரைத்துறையாக இன்னும் முழுமையாக ஒரு வெற்றியைக் காட்டவில்லை.
திடீர்னு விவசாயத்துல கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டீர்களே ஏன்?
16 வயது வரை எந்த வாழ்க்கையை வாழ்ந்தேனோ, எந்த மண்ணில் வளர்ந்தேனோ அங்கே இப்போது சென்றிருக்கிறேன். விவசாயக் குடும்பங்களின் பண்பாட்டில் ஊறி வளர்ந்த நான் இதுதான் திணை, சாமை, வரகு, என்று என் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கு அந்த மண்ணில் அந்த பயிர்கள் விளையவில்லை. எல்லாம் செயற்கையாகி விட்டது. 40, 50 மாடுகள் வளர்த்த குடும்பத்தில் இன்று ஒரு மாடு கூட இல்லை என்ற சோகம் எனக்குள் எப்போதும் இருந்துவருகிறது. இப்போதுதான் அதை உறைப்பாக உணர்ந்தேன்.
நம்முடைய அடையாளங்களை இழந்துவிட்டு, நமது மொழியை இழந்துவிட்டு, தமிழினம், தமிழன் என்று சொல்வதற்கு நமக்கு உரிமையே கிடையாது. அதனால்தான் மறுபடியும் எனது ஊருக்கு வந்திருக்கிறேன். அங்கே என்னுடைய மண்ணில் மண்புழுக்களே இல்லாத வயல்வெளிகளைப் பார்க்கிறேன். மறுபடியும் எனது மண்ணில் மண்புழுக்களை நெளிய விடுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதைப் போலவே என்னுடைய மரபு சார்ந்த மரங்களை நட்டு வைத்திருக்கிறேன். செயற்கை உரம் போடாமல் இயற்கை உரத்திலேயே விளைகிற காய்கறிகளை இப்போது என் தோட்டத்தில் போய் நான் பறித்து சாப்பிட தொடங்கியிருக்கிறேன்.
தமிழில் ஆங்கிலம் கலப்பது எவ்வளவு கொடுமையானதோ அப்படித்தான் நம்முடைய மண்ணில் நம் இனம் சாராத அந்த தைல மரங்களை நடுவதும் என்கிற உணர்ச்சியை என் மண் இப்போது எனக்குச் சொல்லியிருக்கிறது. என் மண் என்பது என் தாய். அந்த தாயைக் களங்கப்படுத்தக் கூடாது. அவளை மறுபடியும் கழுவிக் குளிப்பாட்டி அவள் முகத்தில் ஒரு ஆதிப் புன்னகையை மீண்டும் நான் பார்க்க வேண்டும் என்கிற பசிதான் ஒரு எழுத்தாளன் விவசாயியாக மாறக்காரணம். ஒரு மண்ணில் ஒரு விதையை நட்டு, முளைவிட்டு அதிலிருந்து பசுமை பார்க்கிறவன்தான் எழுதுவதற்கே லாயக்குள்ளவன் என்கிற உணர்ச்சியை என் மண்தாய்தான் எனக்கு ஊட்டி வைத்திருக்கிறாள்.
நீங்கள் திரைத்துறையிலிருந்து விலகக் காரணம்?
திரைத்துறையிலிருந்து நான் விலகவில்லை. இப்போதும் நான் குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். பாடல் எழுதியதிலிருந்து விலகியது என்பது இன்றைக்கு வருகிற பாடல்கள் அனைத்தும் பெண்களை உடல்ரீதியாக வர்ணிக்கச் சொல்கிற பாடல்களாகவே பெரும்பகுதி இருக்கின்றன. அத்தகைய சூழலில் பெண்களைக் கொச்சை செய்யும் பாடல்களை உடல் உறுப்புகளை வர்ணிக்கிற பாடல்களை எழுதிவிடக்கூடாது என்ற உணர்வோடுதான் நான் அதை மறுத்தேன்.
அதுமட்டுமல்ல தங்கள் உடலுறுப்புகளை இழந்தபிறகும் கூட தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக பொறுப்புணர்வுகளை இழக்காத தம்பி, தங்கைகள் போராட்டக் களத்திலே போராடிக் கொண்டிருக்கிற தமிழ் வாழ்வியல் சூழலில் அந்த தங்கைகளுடைய உடல் உறுப்புகளை வர்ணித்துதான் நான் காசு வாங்கி என் பிள்ளைகளுக்கு உடைகள் வாங்கித் தர வேண்டும் என்றால் அது கேவலமான வாழ்க்கை என்றுணர்ந்தே இந்த முடிவை எடுத்தேன்.
ஒரு கவிஞனுக்கு நிம்மதி எது?
உலகம் எந்தவித அணுஆயுத சோதனைகளும் இல்லாமல் எந்தவித போருமில்லாமல் அனைத்து மக்களுக்குமான, போர்க்குண்டுகள் விழாத வானத்தை என்றைக்கு அவன் உணர்கிறானோ அன்றைக்குத்தான் கவிஞனுக்கு அமைதி. ஏனென்றால் கவிஞன் என்பவன் உண்டு, களித்து ஏதோ மிதப்பவனாகத்தான் சமூகமே கருதுகிறது. அல்ல அல்ல. உலகத்தின் எந்த மூலையிலும் ஒரு வண்ணத்துப் பூச்சி காய்மபட்டாலும் கூட அதற்கு மருந்து தடவ வேண்டும் என்ற தேடல் உள்ளவன்தான் கவிஞனாக இருக்க முடியும் என்ற தளத்தில் சொல்கிறேன்.
எந்த மண்ணிலும் போர்கள் இருக்கக் கூடாது. எந்த மக்களையும், எந்த வல்லாதிக்க உணர்வுகளும் நசுக்கக் கூடாது. குருதி கசிவு கூடாது. கண்ணீர் கசிவு கூடாது. போர் அமைதி, போர் நிறுத்தம் என்கிற நிம்மதியை உலகம் முழுதும் என்றைக்கு ஒவ்வொரு இனத்திற்கும் உரிமையாக்குகிறதோ, நான் இன்னொருவனுக்கு அடிமை இல்லை. இன்னொருவனை அடிமையாக்கவும் மாட்டேன் என்று நினைக்கிற சமூகத்தை என்றைக்கு உணர்கிறானோ அன்றைக்குத்தான் கவிஞன் நிம்மதியடைவான்.
#இனமான கவிஞர் அறிவுமதி அவர்களின் பிறந்தநாள் இன்று.
May be an image of 1 person and smiling
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...