Saturday, November 18, 2023

எமகாதக ஆஸ்திரேலியா.

 2003 உலகக்கோப்பை. அப்போது கோவையில் ஐசிஐசிஐ வங்கியில் எக்சிகியூட்டிவ். கிராஸ்கட் ரோட்டில் உள்ள வணிக நிறுவனங்களுடன் நல்ல பழக்கம் இருக்கும். அந்த உலக்கோப்பை நடந்த நேரத்தில் ஓணம் பண்டிகை இருந்தது என்று நினைவு. பவிழம் ஜுவல்லர்ஸ் நிறுவனர் ஓணத்தை முன்னிட்டு ஓண சந்த்யா ஏற்பாடு செய்திருந்தார். உடன் ஒரு பெரிய ஸ்கிரீனில் இறுதிப் போட்டியைப் பார்க்கவும் ஏற்பாடு செய்திருந்தார். அவரது அழைப்பின் பேரில் அங்கு சென்று உணவருந்திவிட்டு மேட்ச் பார்க்க அமர்ந்தால் முதல் பாதியில் யாருக்கும் மூஞ்சியே இல்லை. 8க்கு 8 ஜெயித்து விட்டு பைனலில் இப்படி ஆடுகிறார்களே என்று கவலை. ஆஸி 357 அடித்த போது, அது அவ்வளவு தான், முடிஞ்சுது என்ற எண்ணம் தான் எல்லோருக்கும். ஆனாலும் ஓரமாக கொஞ்சம் நப்பாசை. மனதைத் தேற்றிக் கொண்டு இரண்டாம் பாதியில் அமர்ந்தால் முதல் ஓவரிலேயே இடி விழுந்தது. சேவாக் மட்டும் ஒரு பக்கம் ஆடிக் கொண்டிருந்தார். நடுவில் மழையால் ஆட்டம் தடைபட்ட புது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஸ்பீக்கரில் சத்தமாக பாடும் போட ஒரே ஆட்டம். இனிமேல் ஆட்டம் நடக்காது. நாளைக்கு மறுபடியும் முதல்ல இருந்து மேட்ச் நடக்கும் என்றெல்லாம் பேசி சந்தோஷமாக விட்ட நிம்மதி பெருமூச்சு சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. மேட்ச் ஆரம்பித்தது. அந்த சோகம் மறக்க முடியாதது.

ஆஸ்திரேலியா எப்போதும் அப்படித்தான். அவ்வளவு எளிதாக தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 30 பந்துகளில் 10 ரன்கள் தேவை, இன்னும் 5 விக்கெட்டுகள் கைவசம் என்ற நிலையில் எதிரணி இருந்தாலும், தோல்வி உறுதி என்று தெரிந்தாலும், பந்தை விழுந்து பிடிப்பார்கள். உயிரைக் கொடுத்து பவுலிங் போடுவார்கள். அவர்களிடம் இருக்கும் நம்பிக்கை தான் தோற்கும் நிலையில் இருந்து பல போட்டிகளில் வெற்றியை தட்டிப் பறித்திருக்கிறார்கள்.
1996 உலக்ககோப்பையில் கென்யா அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வரலாறு படைத்தது. ஒரு காலத்தில் உலக சாம்பியனாக வலம் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெருத்த அவமானம். அடுத்த போட்டி செமி பைனலில் ஆஸ்திரேலியாவுடன். முதலில் பவுலிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சில் அனல் பறந்தது. 10 ஒவர் 15 ரன்கள், 4 விக்கெட் என்ற பரிதாபகரமான நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா. பிறகு தட்டுத் தடுமாறி 207 ரன்கள் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பியது. 174-2 என்று நிலையில் இருந்த போது விக்கெட் விழ ஆரம்பித்த்து. ஒரு பக்கம் ரிச்சர்ட்சனை நிற்க வைத்து மற்றொரு பக்கம் விக்கெட்டுகளை வீழ்த்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸி.
1999 செமி பைனலில் தென்னாப்பிரிக்காவுடன் அவர்கள் பெற்ற வெற்றி வரலாறானது. இன்னும் சொல்லப்போனால் நான் முதன் முதலில் பார்த்த கிரிக்கெட் மேட்ச் இந்தியா ஆஸ்திரேலியா 1992 மேட்ச் தான். அந்த மேட்சிலும் இந்தியா 3 ரன்னில் தோற்றது என்று நினைவு. கடைசியாக தோல்வி அடையும் போது தான் சாலையில் நின்று பார்த்தேன்.
தோற்கும் வரை தோல்வியை ஒப்புக் கொள்ளாத மனநிலை கொண்டவர்கள் ஆஸி அணியினர். 2011 காலிறுதிப் போட்டி இன்னொரு உதாரணம். இந்தியா 5 விக்கெட்டை இழந்த நேரம். ஆஸியின் பந்துவீச்சு வெறித்தனமாக இருக்கும். யுவராஜ்-ரெய்னா இணை கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி முன்னேறும். ஒரு விக்கெட்டை விட்டால் கூட கதையை முடித்து விடுவார்கள் என்பதால் மூச்சு கூட விடாமல் ஆடுவார் யுவராஜ். அதனால் தான் வெற்றி பெற்றவுடன் ஆர்பரித்து கொண்டாடுவார். இந்திய வெற்றிக்கு சில ரன்களே தேவை எனும் போது தேர்ட் மேன் திசையில் அடித்த பந்தை பாய்ந்து தடுக்கப்போய் முகத்தில் காயமடைவார் பிரெட் லீ. ஆனாலும் முகத்தில் ப்ளாஸ்டருடன் வந்து வெறித்தனமாக பவுலிங் போடுவார். இறுதி வரை போராடுவதில் ஆஸி அணிக்கு இணை வேறு யாரும் கிடையாது. They never ever Give up.
ஆனால் அதெல்லாம் பழைய ஆஸ்திரேலியா அணி. என்று கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் பாலோ ஆனுக்குப் பிறகு அவர்களை வெற்றி கொண்டோமோ அப்போதிலிருந்தே ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது. இந்தியாவில் வெற்றது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கே சென்று அவர்களை தோற்கடித்தோம். டெஸ்ட், ஒண்டே, டி20 என அனைத்து பார்மேட்களிலும் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது இந்திய அணியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
நண்பர் Vishvaksenan எழுதியது போல இன்றிருக்கும் ஆஸி அணி தோற்கடிக்க முடியாத அணியும் கிடையாது. இந்திய அணியும் பழைய டீம் கிடையாது.
அதனால் பைனலைப் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை. ஆஸ்திரேலியாவிடம் இருக்கும் நெவர் கிவ் அப் அட்டிட்யூட் இன்று அனைத்து அணிகளில் இருக்கிறது. இந்திய அணியின் Crush the opponents முறையில் ஆஸியை வெற்றி பெறுவோம். கோப்பை வெல்வோம்.
May be an image of 2 people and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...