Thursday, November 23, 2023

தோற்றது பொருளாதாரம் மட்டுமல்ல.

  சின்ன அண்ணாமலை தயாரிப்பில் 1964இல் வெளிவந்த திரைப்படம் ஆயிரம் ரூபாய். அப்போது சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான அசோகாவில் மதிய விருந்து சாப்பாடு இரண்டேகால் ரூபாய் அப்படியென்றால் ஆயிரம் ரூபாய்க்கு எத்தனை பேர் சாப்பிடலாம் என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். அப்போது சாதாரணமாக ஓட்டலில் அளவு சாப்பாடுவதென்றால் அறுபது பைசா. இன்று ஆயிரம் ரூபாயில் சுமாரான ஓட்டலில் பத்து நபர்கள் கூட சாப்பிட முடியாது. இந்த நிலையில் அரசாங்கம் கொடுக்கும் ஆயிரம் ரூபாயில் தாய்மார்கள் தீபாவளி சமயத்தில் என்னென்னவெல்லாமோ வாங்கினார்கள் என்று எழுதிகொடுக்கப்பட்டதை தொலைக்காட்சி சேனல்களில் ஒப்புவித்தார்கள். விளம்பரம் ஐயா விளம்பரம்.

அடுத்த அம்சம் சின்ன அண்ணாமலை போட்டது சொந்த முதலீடு. கலைஞர் பெயரை கொண்ட மகளிர் உதவித் திட்டத்திற்கு முதலீடு மக்கள் பணம். இவர்கள் பாட்டன் பூட்டன் வீட்டு சொத்தல்ல மக்களின் வரிப்பணம். ஏழை சகோதரிகளுக்கு வசதியான சகோதரர்கள் உதவி செய்கிறார்கள் என்ற சத்திய வாசகத்தை முதல்வர் ஏன் சொல்லவில்லை. இவர்களது சமூக நீதியில் சகோதரத்துவம் இடம்பெறவில்லையோ? தங்கள் பெயர் நிலை பெற வேண்டும். தங்கள் வாக்கு வங்கியை விரிவுபடுத்த வேண்டும் என்பது தவிர இவர்களுக்கு வேறு என்ன நோக்கம் இருக்கிறது.
சினிமா துறையினர் சொந்த முதல் போட்டு அல்லது கடன் வாங்கி லாபம் பார்க்கிறார்கள். ஆனால் அரசியல் வியாபாரத்தில் தூண்டில் புழு மூலம் திமிங்கலத்தையே பிடிக்கிறார்கள். தூண்டிலும் அவர்களுடையதல்ல புழுவும் அவர்களுடையதல்ல ஆனால் திமிங்கலம் மட்டும் அவர்கள் சொத்தாகிறது. இவர்களது லஞ்சக் கடலில் எத்தனை எத்தனையோ திமிங்கலங்கள். இன்னமும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா இலவச திட்டங்களும் தூண்டில்களும் புழுக்களுமே. பாவம் மக்கள்.
நம்மவர்களை பின்பற்றி திராவிட மாடலை ஆரிய மாடலாக டப்பிங் செய்கிறார் பிரியங்கா காந்தி. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் வருடம் 10000ரூபாய் தாய்மார்களுக்கு கொடுக்கப் போகிறாராம். தேர்தல் காலத்தில் என்னென்ன மாநிலங்கள் யார் யாருக்கு என்னென்ன கொடுப்போம் என்று கூறி வரும் வாக்குறுதிள் நீண்டு கொண்டே போகிறது.
அரசாங்கத்தின் வேலை மக்கள் வரிப்பணத்தை சரியாக நிர்வாகம் செய்வது. மக்களுக்கு பணமாக பங்கு போட்டு கொடுப்பதல்ல. மொத்த வருமானத்தையும் கணக்கிட்டு மக்கள் தொகையால் வகுத்து தலைக்கு இவ்வளவு என்று கொடுத்துவிடுவதா நிர்வாகம். ‘வரி வாங்குவோம், வாரி வழங்குவோம்‘ என்ற புதிய கொள்கையை இனிவரும் அரசாங்கங்கள் அறிமுகப்படுத்தலாம்.
இப்படி ஒரு விபரீதம் நடந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. மக்களை விட்டு விலகிச் சென்று இவர்களிடம் சேறும் பணத்தை எண்ண முடியாது லாரி லாரியாக எடை போட வேண்டியதுதான்.
அரசியலை மூலதனமாக வைத்து தலைமுறை தலைமுறையாக வளமாக வாழ்வதற்கு, சொத்து சேர்த்துக்கொண்டுவிட்டார்கள் அரசியல்வாதிகள். இனியும் சேர்க்க விரும்புவதால் அடித்தட்டு மக்களை இலவசங்களின் அடிமைகள் ஆக்குகிறார்கள். மக்களை இப்படி நலிந்தவர்களாகவும், சுய சிந்தனை இல்லாதவர்களாகவும் வைத்திருப்பதால் இவர்கள் பதவியினால் பணம் பணத்தினால் பதவி என்ற லஞ்ச ஆட்சியை தொடர்கிறார்கள்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சில சீர்திருத்தங்கள் கொண்டு வந்தால் ஒழிய இலவசங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவதை தடுக்க முடியாது. பாஜக காங்கிரஸ் உட்பட எல்லா தேசிய கட்சிகளும் ஏதேதோ இலவச அறிவிப்புகளை செய்யும் போது மாநில கட்சிகள் செய்யாமல் இருக்குமா. இதற்காக யார் எப்போது குரல் எழுப்பப் போகிறார்கள். அனைத்து கட்சி கூட்டம் என்று டெல்லியில் அவ்வப்போது நடைபெறுகிறதே அவை இந்தப் பிரச்சனையை அலசி தீர்வு காணும் காலம் எப்போது வரும்.
பாமர வாக்காளர்களுக்கும் பொருளாதார புரிதல் வந்தால்தான் நேர்மையான மக்கள் பிரதிநிதிகள் மூலம் நல்லாட்சி நடைபெறும். ஆனால் அரசியல் மட்டும் போதும் பொருளாதாரம் புரிந்துவிடக்கூடாது என்றபடியே நம்மவர்கள் ஆட்சி நடத்தி வருகிறார்கள். பொருளாதாரத்தை அரசியல் தோற்கடித்துவிட்டது. தோற்றது பொருளாதாரம் மட்டுமல்ல மக்களும்தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...