அப்டேட்டுக்கு ஒரு சிறு அப்டேட்!
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்றைக்கு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட பதினேழு பேர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகத் தீர்ப்பளித்து, குற்றங்களைப் பதிவு செய்திருக்கிறது.
ஆ.ராசா, கனிமொழி, மற்றும் மூன்று நிறுவனங்கள் உள்ளிட்ட பதினேழு பேர் மீதும்ந சிபி ஐ சுமத்தியிருக்கும் புதிய குற்றச் சாட்டையும் நீதிபதி ஏற்றுக் கொண்டு, நம்பிக்கை மோசடிக் குற்றத்தையும் சேர்த்துப் பதிவு செய்திருக்கிறார்.
பிரிவு 409 இன் கீழு சுமத்தப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டு ஜாமீனில் வெளியில் வரமுடியாததாகும்.
இனி நேரே வழக்கு விசாரணைக்கு வரும். சிபிஐ எண்பதாயிரம் பக்கங்களில் போட்டுக் குழப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டி இருக்கும்! போபார்ஸ் முதல் சமீபத்தில் ஹாசன் அலி வரை சிபிஐ வழக்குகளை நடத்திய லட்சணம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் தானே!!
கனிமொழிக்காக உருகி உருகி எழுதப்பட்டிருக்கும் இன்றைய ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையில், கடைசியாக பூனைக்குட்டி வெளியே வந்தே விட்டது!
சீக்கிரமே வெளியே வந்து விடுவாராம்! சிறைக்காவலர்கள் அப்படிச் சொல்வதாக ஒரு பிட்டு.
அடுத்து அறுபது சதவிகிதம் வைத்திருக்கும் தயாளு, கலைஞர் டிவியின் நிர்வாகியாக இருந்து வாக்குமூலத்தில் கனிமொழியை சிக்க வைத்த அமிர்தம் இருவரையும் கொஞ்சம் மிரட்டலாகத் தட்டி வைக்க எத்தனித்திருப்பது போல....!
அடுத்து தான் எடுக்கப்போகும் அரசியல் அவதாரம்!தன்னுடைய ஆதரவாளர்களைக் காப்பாற்றுவதற்காகவே அரசியலில் தொடர்ந்து இருக்கப் போவதாக...!
இப்படி மறைமுகமாகத் தன்னுடைய தந்தையின் முதல் குடும்பத்துக்கு செக் வைக்கிற மாதிரியே ஜூனியர் விகடனில் வெளியாகி இருக்கும் இந்தபிரத்யேகக் கட்டுரைகள் இரண்டு பகுதியாக, இன்றைக்கு கோர்ட்டில் நீதிபதி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது அறிவிக்கப்படாத நிலையில், வெளி வந்திருப்பதாகவே தோன்றுகிறது.
கனிமொழி தொடர்பாக, இன்றைக்கு நீதிமன்றம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது தெரிந்ததும், இன்னொரு அப்டேட் இன்றைக்கே வரலாம்!இது கனிமொழி என்ற தனிநபர் மீது கவனம் இல்லை!ஒரு ஊழல், விசாரணை, வழக்கு எப்படி எப்படியெல்லாம் போய்க் கொண்டிருக்கிறது என்பதன் மீதான கவன ஈர்ப்பு மட்டுமே.
அரசியலைக் கற்றுக் கொடுத்த எதிரிகள்!
கனிமொழி எக்ஸ்க்ளூசிவ்
''கனிமொழி என்ற பெயரைச் சொன்னால்கூட பிரச்னையாகி விடுமோ எனப் பலரும் தயங்கும் நேரத்தில், என்னைப்பற்றி சிலாகித்து எழுதியவர் அவர். 'தமிழுக்கு அவரால் தகவுகள் அமைய இருக்கையில் அரசியல் அவரை ஆட் கொண்டுவிட்டதில் எம்மனோர்க்குச் சிறிது வருத்தம்தான்’ என அவர் எழுதி இருந்த வரிகள் மனதுக்குள் திரும்பத் திரும்ப எதிரொலிக் கின்றன. முடிந்தால், அவருக்கு என் நன்றியை மறக்காமல் சொல்லுங்கள்!'' - கனிமொழி கசிந்துருகுவது கவிஞர் வாலியின் வரிகளுக்காக. 5.10.11 ஆனந்த விகடன் 'நினைவு நாடாக்கள்’ பகுதியில் கவிஞர் வாலி, கனிமொழி குறித்து எழுதி இருந்தார். அந்த வரிகளுக்குத்தான் இந்த நன்றி!
''முடிந்தால் கனிமொழியை நேரில் பாருங்க சார். அப்போதான், அவங்க எவ்வளவு தைரியமா இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியும். ஆரம்பத்தில் சிறுசிறு சங்கடங்களையோ... விமர்சனங் களையோ... தாங்கிக்க முடியாதவர்தான் கனிமொழி. ஆனால், இன்றைய நிலையில் எத்தகைய சங்கடமும் அவரை இம்மியளவுகூட பாதிக்காது. பத்திரிகைச் செய்திகளையோ, பிறரின் புறக்கணிப்பைப்பற்றியோ அவரிடம் சொன்னால், மெலிதான புன்னகைதான் பதிலாக வருகிறது. அந்தச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். மென்மையான மனம்கொண்ட அந்த இலக்கிய வாதியை, எதையும் கடக்கத் துணிந்த இரும்பு மனுஷியாக திகார் மாற்றிவிட்டது என்பதுதான் உண்மை!'' - சிறைக்குள் கனிமொழி இருக்கும் பகுதியில் சில நாட்கள் பாதுகாப்பு பணியாற்றிய தமிழக போலீஸ்காரர் ஒருவரின் பகிர்வு இது.
''தன்னை எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் என்கிற மனநிலையில் கனிமொழி வருந்துவதாகச் சொல்கிறார்களே...'' என அவரிடம் கேட்டால், சத்தம் போட்டுச் சிரிக்கிறார். தமிழக அரசியல் நிலவரங்களையும் கனிமொழியின் மன ஓட்டத்தையும் மிகத் தெளிவாக அறிந்தவராக நமது கேள்விக்குப் பதில் சொன்னார்.
''200 கோடி கடன் பெற்ற விவகாரத்துக்கும் கனிமொழிக்கும் துளி அளவும் சம்பந்தம் இல்லை. கட்சியின் கடைக்கோடி தொண்டர் களுக்கு இது தெரியுமோ தெரியாதோ... ஆனால், தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளுக்கு இது அப்பட்டமாகத் தெரியும். கலைஞர் டி.வி.க்காக 200 கோடி கடன் வாங்க யார் முடிவெடுத்தது, 200 கோடியை முன்னின்று வாங்கிக் கொடுப்பதாக யார் சொன்னது, 200 கோடி வாங்குவது குறித்து யார் யார் கலந்து பேசினார்கள், உண்மையில் அந்தக் கடனுக்குப் பொறுப்பேற்று இருக்க வேண்டியவர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கான பதில், மேலிடத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும்.
கலைஞர் டி.வி-யில் 60 சதவிகிதப் பங்குகளை வைத்திருப்பவர் தயாளு அம்மாள். கலைஞர் டி.வி-யின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர் அமிர்தம். இவர்களுக்குத் தெரியாமல், 20 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் கனி மொழியும் சரத்குமாரும் எப்படி 200 கோடி கடன் விவகாரத்தில் ஈடுபட்டிருக்க முடியும்? சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணையில் இதுபற்றி எப்போதாவது கனிமொழியும் சரத்குமாரும் சொல்லி இருக்கிறார்களா? இல்லை, வெளியிலாவது புலம்பி இருக்கிறார்களா?
செய்யாத தவறுக்கு அவர் சிக்கி இருக்கிறார் என்கிற பரிதாபத்தைக் கூட பலரும் திட்டமிட்டு மறைத்து விட்டார்கள். அவரைத் திகாருக்குள் தள்ளிவிட வேண்டும் எனப் பகீரத முயற்சி நடந்தபோதும், தன் தரப்பு நியாயத்தால் அப்படி நடக்காது என கனிமொழி நம்பினார். அதையும் தாண்டி கைது அரங்கேறியபோது, 'சீக்கிரமே நாம் மீட்கப்படுவோம்’ என நம்பியதும் உண்மை. 'ஒரு வாரத்தில் நிச்சயமா ஜாமீனில் எடுத்திருவோம்’ என்று சிலர் நம்பகமாகச் சொன்னதும் உண்மை. ஆனால், 150 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் வாடுகிற நிலை வரும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை. சிறைக்குள் இருக்கும் ஒவ்வொரு நாளுமே அவருக்குத் துயரமானதுதான். ஆனால், அதற்காக யார் மீதும் வருத்தப்படும் நிலையில் அவர் இல்லை. 'கனிமொழியின் பெயரைச் சொன்னாலே சிக்கலாகிவிடுமோ?’ எனக் கட்சிக்காரர்கள் தயங்குவதைக்கூடத் தாங்கிக் கொள்ளும் மனநிலையில்தான் அவர் இருக்கிறார்!'' என்கிறார் அந்தக் காவலர்.
கனிமொழியின் நிஜ மனவோட்டம் எப்படி இருக்கிறது?
''சிறை வாழ்க்கை நிறைய விஷயங்களை உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்குமே...?'' எனக் கேட்ட ஒரு நண்பரிடம், ''ஆமாம்... முன்னை விட இப்போ இந்தி நல்லாப் புரியுது. உள்ளே இருக்கிறவங்ககிட்ட பேசணும்னா, இந்தியில் பேசுறதுதான் ஒரே வழி. யாரோடும் பேசாமல் எப்படி இருக்க முடியும்? அதனால், ஓரளவுக்கு இந்தி கத்துக்கிட்டேன்!'' என்றாராம்.
கனிமொழியின் வெல்விஷர் ஒருவர் சொல்வது இதுதான்...
திகார் வாழ்க்கை கனிமொழியின் உடல் எடையை ரொம்பவே குறைத்திருக்கிறது. முதல் பார்வை யிலேயே, உடல் அநியாயத்துக்கு இளைத்திருப் பது தெரிகிறது. அடிக்கடி மாறும் சீதோஷ்ணம் முகத்தையும் நிறத்தையும் பாதித்து இருக்கிறது. பூச்சிகளும் கொசுக்களும் தூக்கத்தைக் காவு வாங்கிவிடுகின்றன. ஒட்டிப்போன கன்னங்களில் கவலை தெரிகிறது. ஆனால், அவருடைய டிரேட் மார்க் அடையாளமான எளிய புன்னகை மட்டும் எப்போதும் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.
''இந்த ஜெயில்ல எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களோட ஒப்பிட்டால், என்னோட சிரமங்கள் பெரிசு இல்லை. உட்கார ஒரு சேர்கூட இல்லாதது தான் கஷ்டமா இருந்தது. ஆனால், அதுவும் பழகி விட்டது. தரைதான் இப்போது என் தோழி!'' என்கிறாராம்.
''ரொம்ப உடைஞ்சிட்டீங்களே...'' என வருத்தம் காட்டினால், ''உடம்பை ஸ்லிம்மாக்க விரும்புறவங்க ஒரு வாரம் இங்கே இருந்தாப் போதும்!'' என்பதுதான் பதிலாம். கூடவே, சிறைக்குள் இருக்கும் சிரமங்களைச் சொல்லாமல் சொல்லும் விரக்தியான சிரிப்பும்.
ஏற்கெனவே சிறைக்கு வந்து கனிமொழியை பார்த்துவிட்டுப்போன கருணாநிதி மறுபடியும் மகளைப் பார்க்க விரும்பினாராம். ஆனாலும், கனிமொழியே தந்தையின் வரவைத் தவிர்த்து விட்ட தாகச் சொல்கிறார்கள் சிறை வட்டாரத்தில்.
''வீல் சேரில் வந்துபோறது சிறைக்குள் சிரமம். இங்கேவைத்து என்னைப் பார்க்கிறப்ப அவருக்கு ரொம்ப கஷ்டமாகிடும். அந்த சிரமம் என்னை இன்னும் கஷ்டப்படுத்திடும்!'' என்பது கனிமொழியின் விளக்கம். ராஜாத்தி அம்மாளையும் அடிக்கடி வந்து சிரமப்பட வேண்டாம் எனச் சொல்லி விட்டார். கனிமொழியைப் பெரிதாக வருத்துவது மகனின் பிரிவுதான். சென்னையில் படிக்கும் மகனுக்கு இது பரீட்சை நேரம் என்பதால் டெல்லிக்கு வர முடியாத சூழல்.
''தீபாவளிக்குப் பிறகு நிச்சயம் ஜாமீன் கிடைத்து விடும். விசாரணை அதிகாரிகள் சிலரே இதனை உறுதிப்படுத்திச் சொல்கிறார்கள். வெளியே வரும் கனிமொழியை கட்சியும் அவரது சொந்தங்களும் எப்படி நடத்தப் போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!'' என்கிறார்கள் சில டெல்லி வாலாக்கள்.
''கட்சியில் இனி கனிமொழியின் இடம் எதுவாக இருக்கும்?''
அவரை வாரத்துக்கு ஒரு தடவை சந்தித்துப் பேசும் நண்பர் ஒருவர் அவருடைய மன ஓட்டத்தை அப்படியே பிரதிபலிக்கிறார்.
''டெல்லியில் உள்ள தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலர் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தார்கள்.அதைப்பற்றி எல்லாம் கனிமொழி கவலைப் படவில்லை ஆனால், பார்க்காமல் தவிர்த்ததற்கு 'தளபதி கோவிச்சுக்குவார்’, 'அண்ணன் திட்டுவார்’ என அவர்கள் சொன்ன விளக்கங்களைத்தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
சமீபத்தில் பாட்டியாலா கோர்ட்டில் சந்தித்த ஒருவரிடம் முன்னாள் அமைச்சர்களின் கைது குறித்து கவலையோடு கேட்டுக்கொண்டு இருந்தார் கனிமொழி. 'வீரபாண்டியார் பாவம்’, 'நேருவுக்கு என்னாச்சு’, 'சுரேஷ்ராஜன் வெளியே வந்துடுவாரா’ 'சாமி மேல என்னென்ன வழக்கு’ என ஒவ்வொருவரைப்பற்றியும் கவலையோடு கேட்டார். 'நீங்கதான் எல்லோரையும் கேட்குறீங்க... ஆனா, உங்களைப்பற்றிக் கேட்கத்தான் இந்தக் கட்சியில் ஆள் இல்லை’ என அந்த நண்பர் சொன்னபோது கனிமொழியால் விரக்தியோடு சிரிக்க மட்டுமே முடிந்தது.
துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு உள்ளிட்ட சிலருக்குக் கடந்த ஆட்சியில் சில பிரச்னைகள் வந்தபோது, அவர்களுக்காக கனிமொழி எந்த அளவுக்குப் போராடினார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், கையறு நிலையில் தவிக்கும் அவருக்காக இன்றைக்கு யார் போராடுவார்கள்?
ஆ.ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க அவர் பெரிதாகப் போராடியதாக சித்திரிப்பு செய்தவர்கள், கட்சியில் இருக்கும் எத்தனையோ பேருக்காக அவர் போராடியதை ஏன் மறைத்தார்கள்? பெரம்பலூர் மாவட்டக் கூட்டங்களுக்குகூட அழைக்காமல் அப்போதே கனிமொழியைப் புறக்கணித்தவர் ராசா.
பலருடைய உண்மையான முகங்களைப்பற்றி கனிமொழி பேசத் தொடங்கினால்... கட்சியால், அவரது சொந்தங்களால் அதற்குப் பதில் சொல்ல முடியுமா?
சமீபத்தில் ஒரு செய்தி வந்தது. கனிமொழியின் ஆதரவு பெற்ற நகராட்சி வேட்பாளர் அவர். ஆனால், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர் அந்த வேட்பாளரை ஆதரித்து வேலை செய்யவில்லை. 'அந்த வேட்பாளர் ஜெயித்தால், தளபதி கோபித்துக்கொள்வார். அவருக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?’ என அந்த மாவட்டச் செயலாளர் வெளிப்படையாகவே சொன்னாராம்.
கட்சிக்குள் கனிமொழிக்கு எப்படியான இக்கட்டுகள் காத்திருக்கின்றன என்பதற்கு இந்த ஒரு சம்பவமே உதாரணம். அவலங்களையும் அனுபவங்களையும் கடந்து வெளியே வரும் கனிமொழி இத்தகைய இக்கட்டுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறாரோ..?'' என்கிறார் அந்த நண்பர்.
சிறை வேதனைகளைத் தாண்டி சீக்கிரமே வெளியே வர இருப்பவர், அரசியலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்? 'இனி எதுவுமே வேண்டாம்; ஒதுங்கி இருத்தலே நலம்’ என முடங்கப் போகிறாரா? எதையும் கடந்துவிட்ட நெஞ்சுரத்தோடு அரசியலில் நீடிப்பாரா? - தி.மு.க. வட்டாரத்தை மட்டும் அல்லாது, தமிழக அரசியல் அரங்கையும் எதிர்நோக்கி இருக்கும் கேள்விகள் இவை.
இதற்கு கனிமொழியின் பதில் என்ன?
''எவ்வளவோ தாங்கிட்டேன். இனி என்னைக் கஷ்டப்படுத்த என்ன இருக்கு? கட்சியில் தொடர்ந்து என் கடமைகளைச் செய்துட்டு இருப்பேன். அரசியல்னா என்னன்னே தெரியாத எனக்கு ,எதிரிகளே எல்லா விதமான அரசியலையும் கற்றுக்கொடுத்துட்டாங்க. எல்லோரும் புறந்தள்ளிய இந்த நேரத்திலும் எனக்காக சிலர் நிற்கிறாங்க. அவங்களுக்காகவாவது நான் அரசியலில் நின்னு தான் ஆகணும்; நிச்சயம் நிற்பேன்!''